அறிக்கை: எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு 161வது பிரிவின்படி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும், அதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்விதக் கால அவகாசமும் இல்லையென்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுவரையும் விடுதலை செய்ய மறுத்து காலங்கடத்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இந்நிலையில், ஆளுநருடன் கலந்துபேசி என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது! இது விடுதலையை நோக்கிய ஒரு முன்நகர்வு!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும்.. அதனைவிடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும்; மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கெதிரான மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்காகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது. இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் ஏழு பரிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்களுக்குத் தண்டனையை அறிவித்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும்!
ராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்தியப் புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகை நியாயம்? இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படியான கொலை வழக்குதான். அதாவது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும்போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும்? தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற எழுவரும் இக்கொலை வழக்கில் நேரடியாகப் பங்காற்றியதாக நீதிமன்றமே கூறவில்லை; கொலைவழக்கின் சதித்தன்மை தெரியும் என்பதே அவர்களது மீதானக் குற்றச்சாட்டு. அதற்குச் சாட்சியம், எழுவரும் மத்தியப் புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அளித்த ஒப்புதல்(?) வாக்குமூலங்கள். அவ்வாக்குமூலங்கள் தவறாகத் திரித்து எழுதப்பட்டவை என்பதை வாக்குமூலத்தைப் பதிவுசெய்த மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனைப் பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.
வழக்கின் முழுவிசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை எனபதையும், வழக்கில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும், விடைதெரியா மர்மங்களும் ஏராளமாக உள்ளன என்பதையும், வழக்கை விசாரிக்கும்போது சில முக்கியப் பிரமுகர்களுக்குப் பாரபட்சம் காண்பிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது என்பதை மத்தியப்புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமன் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இத்தோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கே.டி.தாமஸ், எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறார். கொலையில் நேரடிப்பங்காளிகளாகக் குறிப்பிடப்படாத நிலையிலும், இவ்வழக்கில் சனநாயக மரபுகளும், விதிகளும் மீறப்பட்டு பொதுப்புத்திக்கும், அரசியல் சதிக்கும் பலிகடா ஆக்கப்பட்டதால் எழுவரும் 29 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறபோதும், இவ்வழக்கில் இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே பாரபட்சம் காட்டுவது நீதித்துறையின் கண்களைக் குருடாக்கும் கொடுந்துரோகம். ‘ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்!’ எனும் ஒற்றைமய, ஒருமுகப்படுத்தும் கொள்கையைத் தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஒரே நீதி’ என்பதில் மட்டும் விதிவிலக்காக மாறி எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது நகைமுரண்.
ஆகவே, இவ்விவகாரத்தில் எழுவர் விடுதலையை வெறுமனே ஏழு பேரது விடுதலை என்ற கோணத்தில் சுருங்கப்பாராது, மாநிலத்தின் தன்னுரிமை தொடர்பான சிக்கல் என்பதை உணர்ந்து அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக உடனடியாக இதற்கு எதிர்வினையாற்ற முன்வர வேண்டும். எழுவர் விடுதலை விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது ஆட்சியின் நீட்சியாய் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அம்மையாரின் நிலைப்பாட்டை வழிமொழிந்து எழுவர் விடுதலைக்காகச் சட்டப்போராட்டமும், அரசியல்வழி அறப்போராட்டமும் நடத்தி ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து எழுவரது விடுதலையையும் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியை நிறுவிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி