தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்! – சீமான்

26

அறிவிப்பு

        உலகின் இரண்டாவது பெரிய வல்லரசை நிறுவிய அரசருக்கரசன், பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி, தஞ்சையில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கின்றது. அந்தக் குடமுழுக்கு திருவிழாவினைத் தமிழ்வழியிலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக குடமுழுக்கு நிகழ்வினை தமிழில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலுபெறச்செய்யும் விதமாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து, வருகின்ற 22-01-2020 புதன்கிழமையன்று தஞ்சை, நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவேரி திருமண அரங்கத்தில் ‘தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு’ நடத்தவிருக்கின்றனர். இம்மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்!

மேலும், இம்மாநாட்டில் சோழ மண்டலத்திலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றேன்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி