சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்குவதே நிலையான பாதுகாப்பு! – சீமான் கோரிக்கை

41

மேட்டுப்பாளையம், நடூர் ஏடி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து சிக்குண்டு உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  இன்று 05-12-2019 வியாழக்கிழமை, காலை 9:30 மணியளவில், சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,

 

 

 

 

 

[clear]

கேள்வி: இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவுநாள்; அவரைப்பற்றி?

சட்டமன்றத்தில் ஈழப் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிப்பதற்காக நான் உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்தோம்.
அப்போது அவர் ஏறத்தாழ 25 நிமிடங்கள் எங்களுடன் ஈழம் குறித்து விரிவாக பேசினார்.
குறிப்பாக அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடனான தன்னுடைய சந்திப்பின் போது அதிக நேரம் ஈழம் குறித்தே தாம் பேசியதாக எங்களிடம் கூறினார். இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவராமல் ஈழத்தில் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர இயலாது, அங்குள்ள நம் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய இயலாது என்றார். வெளியுறவுத் துறையில் மாற்றம் கொண்டுவர நாமெல்லாம் இணைந்து பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா எங்களிடம் கேட்டுக்கொண்டார். நினைவு நாளில் அவருக்கு என்னுடைய புகழ் வணக்கங்கள்.

கேள்வி: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானது பற்றி?

அத்துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் மொழிகள் கூறி; அவர்களது கண்ணீரை துடைத்து தேற்றுவதற்காகவே இப்போது நேரில் சென்று கொண்டிருக்கிறோம்.

அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவர்களை பாதுகாக்கும். உயிரிழ்ந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அவர்களது கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்குவதே அவர்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும். அந்த மக்களை நேரில் சந்தித்த பிறகு தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் பற்றி பதிவு செய்கிறேன்.

கேள்வி: இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் குண்டு என்ற படத்தை தயாரிக்கிறார். அதைப்பற்றி ?

தம்பி பா.ரஞ்சித் அவர்கள் தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை தயாரிக்க ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த வகையில் “குண்டு” என்ற ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அவருடைய முயற்சிகளை எப்போதும் நான் பாராட்டுவேன்.நான் எப்போதும் சொல்வது,

திரைப்படம் என்பது கண் வழியாக போதையேற்றும் சாராயக்கடையாக இல்லாமல்; மாலை நேரக் கல்லூரிகளாக இருக்க வேண்டும்.

தொடக்க காலத்தில் அப்படித்தான் இருந்தது. குடும்ப உறவுகள், பாசம், அன்பு இவற்றை கற்பிக்கும் பல்கலைக் கழகங்களாக திகழ்ந்தது. இன்றைக்கு அப்படியில்லை அந்த நிலை மீண்டும் வர வேண்டும். அரிதரிதாக சில நல்ல படங்கள் வெளிவருகின்றன.

அண்மையில் வெளியான “கோமாளி” திரைப்படம் நகைச்சுவையூடாக நல்ல கருத்துகளை சொல்லும் படமாக வெளிவந்தது. அதைப்போன்று தம்பி சமுத்திரக்கனி நடித்து தம்பி அன்பழகன் இயக்கிய “அடுத்த சாட்டை” படம் பார்த்தேன். ஒரு திரைப்படத்திற்குள் இவ்வுளவு கருத்தை சொல்ல முடியுமா என்ற வியப்பை எனக்குள் ஏற்படுத்தியது. எனவே இது போன்ற படங்கள் அதிகம் வெளிவரவேண்டும். மக்களும் அந்த படங்களை ஆதரிக்க வேண்டும்.

கேள்வி: ரஜினி தர்பார் படத்தையடுத்து இன்னொரு படம் நடித்தபிறகு அரசியலுக்கு வருவதாக மீண்டும் கூறுகிறாரே?

இன்னும் தேர்தல் வரவில்லை அல்லவா? தேர்தல் வரும் வரை அவர் நடித்துக் கொண்டிருப்பார். தேர்தல் வரும்போது வருவார்.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதே? ஒருவேளை தேர்தல் நிறுத்தப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஏற்கனவே தேர்தலை நிறுத்தியவர்கள்தானே. மீண்டும் நிறுத்தினால் அதில் வியப்படைய என்ன இருக்கு? என்னுடைய கருத்து மூன்றரை ஆண்டுகள் ஆட்சி முடிந்துவிட்டது. கடைசி ஆறு மாதங்கள் தேர்தல் பரபரப்பில் கூட்டணி பேச்சு என்று சென்றுவிடும். மீதம் இருப்பது ஓராண்டு. அந்த ஓராண்டிற்கு இவ்வளவு செலவழித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமா? ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் அடுத்து வரும் ஆட்சி இப்போது தேர்ந்தெடுக்கபட்டவர்களை ஏற்று செயல்படுமா அல்லது முரண்படுமா, முறையான நிதி ஒதுக்குமா என்பது கேள்விக்குறி. அதற்கு ஒரே தீர்வாக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சிறந்தது என்பது என் கருத்து.

கேள்வி: ஒருவேளை உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் போட்டியிடுவீர்களா?

கடந்த சில நாட்களாக அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆயத்தப் படுத்தியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக போட்டியிடுவோம் என்று சீமான் கூறினார்

 

முந்தைய செய்தி“விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..!” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி! – சீமான்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் : சைதை தொகுதி