அறிக்கை: தமிழர்களைப் புறக்கணித்தும், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து குடியேறிய இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகைசெய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மத ஒதுக்கலையும், மதப்பாகுபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்தி இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. பன்முகத்தன்மை எனும் கோட்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தியப் பெருநாட்டை மதரீதியாகப் பிரித்தாண்டு துண்டாடக்கூடிய சதித்திட்டத்தின் முன்நகரவே இம்மசோதா என்று எண்ணிடத்தோன்றுகிறது.
அசாம் மாநிலத்தில் நிலவும் அதிகப்படியான அயலாரின் ஆதிக்கமும், அவர்களது மிதமிஞ்சிய வருகையும் கண்டு அம்மண்ணின் மக்கள், ‘அசாம் அசாமியருக்கே’ எனும் மண்ணுரிமை முழக்கத்தை முன்வைத்து நீண்டநெடும் காலமாகவே போராடி வருகின்றனர். பீகாரிகளும், இந்திக்காரர்களும், வங்காளிகளும் அசாம் நிலத்தை அதிகப்படியாக ஆக்கிரமித்ததையெடுத்து அம்மண்ணில் அதற்கெதிரான போராட்டங்களும், குரல்களும் எழுந்தன. இதனையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24க்குப் பிறகு குடியேறியவர்கள் அயலார் என வரையறை செய்யப்பட்டு, அவர்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் – போராடிய மாணவத் தலைவர்களுக்கும் இடையே 1985ஆம் ஆண்டுக் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபாடில்லை.
மதவாத பாஜக அரசு மொழிவாரி நடந்த அந்தப் போராட்டத்தை மதரீதியாகத் திசைதிருப்ப முயன்றது. அசாம் மாணவர் அமைப்புகள் 2013யில் தொடுத்த வழக்கில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வலியுறுத்தியது. அது சரியாகச் செயல்படுத்தப்படாததால் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம், அசாமில் வாழும் மக்கள் சான்றுகளும், ஆவணங்களும் கொடுத்துத் தங்களை அசாம் மண்ணின் மைந்தராக நிரூபிக்க நிர்பந்திக்கப்பட்டனர். மண்ணின் மைந்தர் என மொழிவாரியாக வைக்கப்பட்ட முழக்கத்தை மதரீதியாகத் திசைதிருப்பிய பாஜக, இசுலாமிய மக்கள்தான் பெருவாரியாக அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் எனும் கருத்துருவாக்கத்தைச் செய்து ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முனைந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக அயலார் எனக் கணக்கெடுக்கப்பட்ட 19 இலட்சம் மக்களில் 5 இலட்சம் பேர்தான் இசுலாமியர்கள்; மற்றவர்கள் பிற நாடுகளிலிருந்து குடியேறிய இந்துக்கள் என்கிற விவரம் தெரிய வரவே, அவர்களைக் காக்கவும் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்றவும் இக்குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை முன்மொழிந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்பது தெளிவாகப் புலனாகிறது.
1955ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கும் குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகைச் செய்திருக்கிறது. தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் அகதிகளாக இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க இப்புதிய மசோதா வழிதிறந்துவிடுகிறது. இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இம்மசோதா மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே கேள்விக்குறியாகும் பேராபத்து இருக்கிறது.இசுலாமிய நாடுகளிலிருந்து வெளியேறி வருவோர்க்கு மட்டுமே குடியுரிமை என்பதும், அதில் இசுலாமிய மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுக் குடியுரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதுமே இதன் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
6 ஆண்டுகள் இசுலாமிய நாடுகளிலிருந்து வெளியேறும் இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்கக்கோரும் இவர்கள், பெளத்த மதத்தீவிரவாத நாடான இலங்கையிலிருந்து இன ஒதுக்கலுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர்களுக்கு எதிரான அந்நாட்டு அரசின் உள்நாட்டுப்போரின் விளைவாக வெளியேறும் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க இடமில்லை. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்நிலத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இன்றும் அகதிகளாகவே தொடரவே இச்சட்டம் வலியுறுத்துகிறது. ஈழச்சொந்தங்களை இப்பட்டியலில் புறக்கணித்ததன் மூலம், தமிழர்களை இந்துக்கள் எனப் பொய்யுரைத்து வாக்குவேட்டையாட முயலும் பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் முன்வைத்த, ‘தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்லர்’ எனும் முழக்கம் மெய்ப்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேறவில்லை; சண்டையிட்டு வெளியேறுகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். இது இனப்படுகொலைக்கு ஆளாகி, மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் காயம்பட்டு நிற்கும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் நச்சுக்கருத்துருவாக்கமாகும். தமிழர்களது இன விடுதலைப்போராட்டம் குறித்தும், இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தும் பாஜக கொண்டிருக்கிற அபத்தப்பார்வை இதன்மூலம் தெளிவாக விளங்கும்.
ஆகவே, தமிழர்களை புறக்கணித்தும், இசுலாமிய மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடும், அவர்களைத் தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்ற முனையும் குறிக்கோளோடும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மாநிலக் கட்சிகள் வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசு இம்மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.