உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனர் ஐயா அழகப்பா இராம்மோகன் மறைவு – சீமான் இரங்கல்

28

இரங்கல் அறிக்கை !

உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனரும், ஈழ ஆதரவாளரும், அமெரிக்க மண்ணில் தமிழ்த் தொண்டாற்றியவருமான பெருந்தகை ஐயா அழகப்பா இராம்மோகன் அவர்கள் மறைந்த செய்தியினைக் கேட்டு பெரும் துயருற்றேன் . ஐயாவினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் பங்கேற்கிறேன்.

தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டு, ஈழ விடுதலையில் கொண்டிருந்த உறுதிப்பாடு, தமிழின மீட்சிக்கு மேற்கொண்ட முன்னெடுப்புகள் என ஐயாவின் பங்களிப்புகள் யாவும் போற்றுதலுக்குரியது. குறிப்பாக, ஐயாவின் சீரிய முயற்சியினாலும், கடின உழைப்பாலும் வெளிவந்தத் தமிழ் மறை திருக்குறள், தமிழ் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி ஆகியவற்றை உள்ளடக்கியத் தொகுப்பு நூல் தமிழ்த்தேசியக் களத்தில் எப்போதும் நிலைத்துத் தமிழர்களுக்கு வழிகாட்டும் அரிய நூலாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஐயாவின் இழப்பு அமெரிக்கத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தமிழர்களுக்கும் ஏற்பட்டப் பேரிழப்பாகும். ஐயா அவர்களது வழிநின்று வரலாற்றுக் கடமையினை ஆற்றி அவரது கனவினை நிறைவேற்ற இத்தருணத்தில் உறுதியேற்போம்.

ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி