இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து

93

இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து

அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்புப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க முடியுமே ஒழிய, நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல எனக் கூறியிருக்கிற உச்ச நீதிமன்றம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே இத்தகையத் தீர்ப்பை வழங்கியிருப்பது பெருத்த உள்முரண்பாடாகும்.
பாபர் மசூதி இடிப்பை ஒரு மதத்தவரின் இறையியலுக்கு எதிரான ஒரு வன்முறை வெறிச்செயல் எனச் சுருக்க முடியாது. பன்முகத்தன்மையும், சமத்துவமும் கொண்டு வாழும் இந்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டக் கோரத்தாக்குதலாகும். அச்செயலைச் செய்திட்டவர்களை மதவிரோதிகள் என்பதைவிட தேசத்துரோகிகள் என்பதே சரியானது! பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சட்டவிரோதமென ஏற்றிருக்கிற உச்ச நீதிமன்றம், அச்செயலை செய்திட்டக் கொடுங்கோலர்களுக்குத் தண்டனையோ, கண்டனமோ தெரிவிக்காதது ஒருபோதும் ஏற்புடைதன்று!

இவ்விவகாரத்தில், இசுலாமியர்கள் மாற்று இடம் கேட்டுப்போராடவில்லை; அவ்விடம் தங்களுக்கே உரித்தானது எனும் தார்மீக உரிமையின் அடிப்படையிலே சட்டரீதியாகவும், சனநாயகரீதியாகவும் போராடினார்கள். அதனை மறுதலித்ததுவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்களை நிறைவு செய்ய முற்படுவது எவ்வகை நியாயம்? போதிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லையென வக்பு வாரியத்திற்கு நிலத்தை மறுத்த நீதியரசர்கள், எந்த ஆதாரத்தின் அடிப்படையில், எவ்விதத் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினார்கள் என்பது விளங்கவில்லை.

நம்பிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பென்றால், பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையைக் காரணமாகக் காட்டி வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்காத உச்ச நீதிமன்றம், அதே நம்பிக்கை இசுலாமிய மக்களுக்கும் இருக்கிறபோது எவருக்கும் நிலத்தை வழங்காது இருவருக்கும் மாற்று இடம் வழங்கிதானே இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்கூட குறைந்தபட்ச நியாயம் இருந்திருக்கும். ஆனால், அதனை செய்யாதுவிட்டு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெறுமனே தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! தீர்ப்புகள் மாறுபடலாம். ஆனால், நீதி ஒருபோதும் மாறாது. அந்நீதியின் பக்கம் நாம் தமிழர் கட்சி இறுதிவரை நிற்கும் என இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி