காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்

27

காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்

காஷ்மீரிய மனித உரிமைப் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் கிலானி அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தச் செய்திகேட்டுப் பேரதிர்ச்சியையும், பெருந்துயரும் அடைந்தேன். காஷ்மீரிய மக்களுக்கு நீதிகேட்டு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் நடைபெற்றத் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் அவரோடு பங்கேற்றுத் திரும்புகையில், தேசிய இனங்கள் சங்கமிக்கிற பிறிதொரு நிகழ்வில் சந்திப்போமெனக் கூறிவிட்டு அவரிடமிருந்து பிரியா விடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் நிரந்தரமாகப் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணும்போது மனம் கனத்து அதனை நம்ப மறுக்கிறது. நவம்பர் 03, 2014 அன்று டெல்லி, ஜந்தர்மந்தரில் நடைபெற்ற சீக்கிய இனப்படுகொலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி, மிகுந்த நெருக்கமானவராக மாற்றியது. அதுமுதல் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் மிகுந்தப் பற்றும், அக்கறையும் கொண்டு நலம் விசாரிப்பார். அண்மையில் டெல்லி சென்றபோதுகூட ‘இராசராசசோழன் பெருவிழா’ நிகழ்வில் பங்கெடுப்பதாக என்னிடம் உறுதியளித்திருந்தார்.

டெல்லி பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராகப் பணியாற்றிய ஐயா கிலானி அவர்கள் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்யாகப் புனையப்பட்டுச் சேர்க்கப்பட்டதன் விளைவாக பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டு, இறுதியில் பேராசிரியர் பணியினை எங்கும் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இருந்தபோதிலும், மனம்தளராது தனது வாழ்வினை காஷ்மீரிய மக்களுக்காகவும், நாடு முழுமைக்குமுள்ளத் தேசிய இனங்களின் நலனுக்காகவும், அதன் ஒற்றுமைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவுமென அர்ப்பணித்து இறுதிவரை சமரசமற்ற போராளியாகவே களத்தில் நின்றிட்டார். இவ்வாறு தான் வாழ்க்கை முழுவதையும் மண்ணின் மக்களின் உரிமை மீட்புக்கானப் போராட்டக்களத்திலேயே செலவழித்தப் பேராசிரியர் கிலானி அவர்களின் திடீர் மரணச்செய்தி, நாடு முழுமைக்குமுள்ள மனித உரிமைப் போராளிகளிடமும், தேசிய இனப்பற்றாளர்களிடமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவு என்பது காஷ்மீரிய மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்குமானப் பேரிழப்பு என்றால், அது மிகையில்லை!

தேசிய இனங்களின் மீது பற்றுகொண்டு நின்றப் பெருமகன் பேராசிரியர் கிலானிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக எனது புகழ்வணக்கத்தைச் செலுத்தி, அவரது கனவையும், இலட்சியத்தையும் ஈடேற்ற இன்னும் பன்மடங்கு உத்வேகத்தோடு உழைப்போம் என இந்நாளில் உறுதி ஏற்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம்
அடுத்த செய்திஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும்! – சீமான் கோரிக்கை