தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா? – சீமான் கண்டனம்

98

தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா? – சீமான் கண்டனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியெனப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியையும், கடும் சினத்தையும் ஏற்படுத்துகிறது. உண்மையான வரலாற்றை மறைத்து தவறானக் கருத்துருவாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வரலாறாகக் கொண்டு செல்ல முற்படுகின்ற இச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. தாய்த்தமிழின் தொன்மையை குறை மதிப்பீடு செய்து சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயலும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சூழ்ச்சிக்குத் தமிழக அரசு சம்மதித்து உடன்பட்டிருப்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச் செயல்.

சமஸ்கிருத்தைத் தொன்மையான மொழியென எதிர்கால தலைமுறையினர் படிக்கும் பாடப்புத்தகத்தில் பதிவு செய்திருப்பது அச்சுப்பிழையாலோ, கருத்துப்பிழையாலோ, எதேச்சையாகவோ நிகழ்ந்ததல்ல.இது திட்டமிட்டச் சதிச்செயல். ஏற்கனவே, காவித் தலைப்பாகை அணிந்திருப்பது போல பாரதியைச் சித்தரித்து கல்வியைக் காவிமயப்படுத்த முயன்றவர்கள் தற்போது அதன் நீட்சியாகவே இத்தகையச் செயலைச் செய்திருக்கிறார்கள் என்பதில் துளியவும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழானது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஓர் உயர்தனிச் செம்மொழி. எல்லாவித இலக்கண, இலக்கிய வளங்களையும் தன்னகத்தே கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்டு அதிகப்படியான சொற்களைப் படைத்திருக்கிற உலகின் தன்னிகரற்ற மொழி தமிழாகும். இன்றைக்கு உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கிற ஆங்கிலம் உட்படப் பல மொழிகள் பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே இலக்கணம் படைத்தது இலக்கியம் வடித்தப் பெருமை தமிழுக்கே உண்டு. உலகின் முதல் மாந்தன் ஆடையின்றி காடுகளில் உலவியக் காலத்திலேயே அவன் நாவில் பிரசவித்த மொழி தமிழென்றால் அது மிகையில்லை. மொழியியல் பேரறிஞர் ஐயா பாவாணர் தொடங்கி அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் அலெக்ஸ் கோலியர் வரை யாவரும் அதனை உணர்ந்து தமிழின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார்கள். அத்தகைய வரலாற்று பெருமிதங்கள் பல கொண்டு இன்றும் நீடித்து நிலைத்து தொன்மையோடு திகழும் தமிழ் மொழியை, இறந்துபோய் பேச்சு வழக்கிலிருந்து வழக்கொழிந்து போய் நிற்கிற சம்ஸ்கிருதத்தோடு ஒப்பீடு செய்வதே அபத்தமானது.

தமிழ் ஒரு முதுமொழி. இறைமொழி. அத்தகைய மொழியை இழித்துரைக்கும் நோக்கோடு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட இக்கருத்துருவாக்கம் மிக ஆபத்தானது. தமிழை கி.மு. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மொழியெனவும், சமஸ்கிருதத்தை 2000 கி.மு. ஆண்டுகள் பழமைவாய்ந்த மொழியெனவும் கூறியிருப்பது வரலாற்றை மறைத்து தமிழின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் மோசடித்தனம். இக்கருத்து பாடப்பகுதியிலிருந்து நீக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஐயா செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந்தாலும், தமிழின் தொன்மை குறித்த இக்கருத்து ஆழம் பார்க்கிற வேலையாகவும், தமிழர்களைச் சீண்டிப் பார்க்கிற செயலாகவும்தான் எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, தவறான இக்கருத்தைத் தயாரித்து பாடத்திட்டத்தில் சேர்த்த பாடத்திட்டக்குழுவினர் மீதும் அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதொகுதிவாரியாக தேர்தல் களப்பணியாளர்கள் தங்குமிடம்
அடுத்த செய்திஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்