அறிக்கை: அஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
அஞ்சலர் உட்பட நான்கு வகையானப் பணியிடங்களுக்கான அஞ்சல் துறைத்தேர்வுகள் நாடு முழுமைக்கும் நாளை நடக்கவிருக்கிற சூழலில் அதில் தமிழ் வழியில் தேர்வெழுதுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. கடந்தாண்டு இதே அஞ்சல்துறைத் தேர்வுகள் தமிழ் உட்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த சூழலில், இரு மொழிகளில் மட்டுமே தேர்வு நடக்கும் என கடந்த சூலை 11 அன்று வெளியிடப்பட்டப் புதிய அறிவிப்பானது, அஞ்சல்துறைப் பணிகளிலிருந்து தமிழர்களை வடிகட்டி வெளியேற்ற முனையும் கொடுஞ்செயலாகும். இதன்மூலம், தமிழகத்தில் தேர்வெழுதும் 1 இலட்சம் பேர் நேரிடியாகப் பாதிக்கப்படுவர்.
ஏற்கனவே, கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை தேர்வில் தமிழ்மொழி தாளில் தமிழே அறிந்திராத இந்தி மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மோசடி தொடர்பாக மத்தியப் புலனாய்வு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தற்போது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வெழுத முடியும் என்று அறிவித்திருப்பதன் மூலம் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தமிழகத்தில் பணியமர்த்துவதற்கான சதித்திட்டம் நடப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.
80 இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு காத்திருக்கும் சூழலில், அவர்களை முற்றாகப் புறக்கணித்து மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தமிழகத்தின் அதிகார அடுக்குகளில் நியமனம் செய்ய முயலும் மத்தியில் ஆளும் மோடி அரசின் தொடர் செயல்பாடுகள் தமிழின விரோதச்செயலின் வெளிப்பாடு என்பதில் துளியளவும் ஐயமில்லை. தமிழர் தாயகத்தை மொத்தமாகக் கைப்பற்றி அதனை அயலவர்களின் வேட்டைக்காடாக மாற்றி சொந்த நிலத்திலேயே தமிழர்களை பொருளியல் வலிமையற்ற அகதிகளாக நிறுத்த முயலும் இப்போக்கினை இனமானத் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
ஆகையினால், அஞ்சல் துறைத்தேர்வில் தமிழில் தேர்வெழுத மத்திய அரசு உடனடியாக வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தங்களைத் தந்து அதனைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி