மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும்! மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

57

மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால் சமூகப் போராளியும், மருத்துவருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றச் செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பதைபதைக்க வைக்கின்ற இக்கொடுமையான சம்பவத்தில் மருத்துவர் ரமேஷின் மகள் சாந்திதேவியும் பலத்த காயம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பெரும்பான்மையான மக்களைக் குடிகாரர்களாக மாற்றியிருக்கிற 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை கருதி, ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகநடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களில் மதுபானக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று பலமுறை மக்கள் வற்புறுத்தி போராடியும்கூட நாடெங்கும் பரவலாக மதுபானக்கடைகளை திறந்து வருகிற தமிழ்நாடு அரசின் சீர்கெட்ட செயல்பாடுகளால் இன்று ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன் மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் நீதிமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் ரமேசின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.

தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழ்நாடு அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின் மீது இழைத்திருக்கின்ற ஆகப்பெரும் கொடுமை. மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால் தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ் சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்டத் தனது மகளைகூடப் பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசினை அறிவிக்க வைத்திருக்கிறார்.

கோவை மருத்துவர் ரமேஷ் அவர்கள் எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து அதற்கெதிராக குரல் கொடுத்து போராடி வருகிற சமூகப்பற்றாளர். அவரது உற்றத் துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் ரமேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து இருக்கின்ற அருமை மகள் சாந்தி தேவி அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என எனது நம்பிக்கையினைப் பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் ரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.

மதுவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம்; வாக்குசெலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகம். இதுநாள்வரை மதுபானக்கடைகளை மூடாது மதுவிலக்கைச் செயற்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க இனிமேலாவது மதுவிலக்கினைச் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும், மதுவிலக்கை அமல்படுத்தும்வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019