இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா? – சீமான் கேள்வி
இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் வெளியாகியிருக்கிற செய்திகள் பெரும் கவலையைத் தருகின்றன. ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு இக்கோரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு இலட்சம் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் அரசப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கு நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தொடுக்கப்பட்டிருக்கிற இத்தாக்குதலானது பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. அண்மைக்காலமாக மசூதிகள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் ஈஸ்டர் நாளன்று தேவாலயங்களைக் குறிவைத்து தொடுக்கப்பட்டிருக்கிற இத்தாக்குதல் பெரும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்திய உளவு அமைப்பு இதுகுறித்தான எச்சரிக்கைச் செய்தியினை இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன? என்பது புரியாத புதிராக இருக்கிறது. மேலும், இலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற இப்பயங்கரவாதத் தாக்குதல் சிங்களப் பௌத்தப் பயங்கரவாத இலங்கை அரசு மீதே ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
தமிழர்கள் மீதான இனரீதியிலான சிங்களப் பேரினவாதத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள இறுதிவரை போர்விதிகளைக் கடைப்பிடித்துச் சிங்கள மக்களுக்குச் சிறுஇடையூறுகூட அளித்திடாத வகையில் போரிட்டு அறநெறியின் வடிவமாகக் களத்தில் நின்ற விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துச் சிங்கள மக்களிடையே அரசியல் செய்திட்ட சிங்களப் பேரினவாத அரசு இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன காரணம் கற்பிக்கப் போகிறது ? ‘தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இப்போதையத் தாக்குதலுக்கு என்னப் பதிலைத் தரப்போகிறது?. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்தபோது துணை நின்ற இந்திய அரசு, இந்த மதரீதியிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது? 2009யில் நடைபெற்ற சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பிறகு மிகவும் பாதிப்பிலிருந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இத்தாக்குதல் மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
இத்தாக்குதலை நடத்தி மக்களின் உயிரைப் பறித்த இச்சதிச் செயலுக்குப் பின்புலத்தில் இருப்பவர்கள் எவராயினும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் மானுடத்தை விரும்புகிற ஒவ்வொருவரின் கருத்தாகவும் இருக்கிறது. அதற்கு எவ்வித அரசியல் தலையீடுமற்ற ஒரு நேர்மையான பார்வையோடு கூடிய விசாரணை அவசியப்படுகிறது. இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இசுலாமியர்கள் மீது பழிபோடுகிற கருத்துருவாக்கங்களை வடஇந்திய ஊடகங்கள் செய்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கச் செய்யும் மடைமாற்றச் செயலாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் சரியான விசாரணையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும், தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி