மருத்துவம் அடிப்படை உரிமை! | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

1418

மருத்துவம் அடிப்படை உரிமை! – வழங்குவது அரசின் கடமை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

உணவே மருந்து! மருந்தே உணவு! என்று நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையைக் கொண்டு வருவது நாம் தமிழர் அரசின் முக்கிய நோக்கமாகும்.

மருத்துவக் கொள்கையில் மாற்றம்:

  • “மருத்துவம் ஒரு மகத்தான சேவை அது எம் மக்களுக்குத் தேவை”
  • உடல் நலம் என்பது காசு கொடுத்து வாங்கும் பொருள் அன்று. -அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை வழங்குவதுதான் நாம் தமிழர் அரசின் கடமை.
  • தரமான சரியான சமமான கட்டணமில்லா மருத்துவம் அனைவருக்கும் பொதுவாக வழங்குவதுதான் நமது அரசின் கடமை.
  • ஆரோக்கியம் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தி மருந்தில்லா மருத்துவ முறையைக் கொண்டுவருவோம்.

மருத்துவப் படிப்பு அனைத்தும் தூய தமிழ் மொழியில்

  • அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார், மருத்துவர் சாமுவேல் பிஷ்க்கிறீன். சென்னை வந்து பிறகு இலங்கை யாழ்ப்பாணம் சென்றார். அங்கு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரானார். தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து, தமிழ் மொழியிலேயே மருத்துவக் கல்விப் பாடத்தை நடத்தினார். அதனை ஏற்று 5 மாணவர்கள் தமிழ் மொழியிலேயே மருத்துவப் பாடத்தைக் கற்றனர். அதில் ஒருவர் சிங்கள மாணவர். பின்னாளில் எதிர்ப்பின்றித் தமிழ்வழி மருத்துவப் படிப்பே கற்பிக்கப்பட்டது.
  • இவரிடம் தமிழில் மருத்துவக் கல்வி கற்றவர்கள்தான் பின்னாளில் உலகம்முழுதும் பரவிச்சென்று புகழ்பெற்ற மருத்துவர்களாக இருந்தார்கள். இவர் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உடற்கூறியியல் என்று மொழிபெயர்த்த நூல் சித்த மருத்துவர்களின் பாடப்புத்தகத்தில் உள்ளது.
  • மரணத்திற்குப் பிறகு அவரது சமாதியில் ‘தமிழர்களுக்கான மருத்துவ ஊழியன்’ என்று எழுதச் சொன்னவர். அப்படியானவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
  • இரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட பல நாடுகளும் அவர்கள் தாய்மொழியில்தான் மருத்துவக் கல்லூரிகளையும் பாடங்களையும் நடத்தி வருகிறார்கள். எனவே உலகின் தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு அந்தத் தகுதி உண்டு. அதனால் ஆங்கில மருத்துவம் அனைத்தும் தமிழ் வழியில் நடத்தப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையம்

  • தற்போது 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ‘ஆரம்ப சுகாதார நிலையம்’ இருக்கின்றது. அதை 10,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவோம். இங்கு பூச்சிக்கடி முறிவு மருந்து, நாய்க்கடிக்கான ஊசிமருந்து, ஆரம்ப இரத்தப் பரிசோதனை மையம், காந்த அதிர்வலைக் கருவி(எம்.ஆர்.ஐ.ஸ்கேன்.) இதயநோயைக் கண்டறியும் கருவி (ஈ.சி.ஜி,) புற்றுநோயைக் கண்டறியும் கருவி ஆகியவை கட்டாயம் இருக்க ஏற்பாடு செய்யப்படும். இரண்டு மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள்.

இதன்மூலம் பெரிய நோய்களைக் கீழ்மட்டத்திலேயே கண்டறிந்து தொடக்கத்திலேயே தடுத்துவிட முடியும்.

சிறப்பு மருத்துவமனை:

  • அடுத்து, கிராமங்களில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாக ஒரு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும். ஏற்கனவே மருத்துவமனை இருந்தால் அது சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும். இங்குச் சிறியவகை அறுவைசிகிச்சை, மாரடைப்பு தடுப்புச் சிகிச்சை கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு முறிவுக் கட்டு ஆகியவற்றுக்கான மருத்துவம் பார்க்கப்படும.
  • 50 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு செயல்படுத்தப்படும். நான்கு மருத்துவர்கள் ஐந்து செவிலியர்கள் சுழற்சி முறைப்பணியில் இருப்பார்கள்.

முக்கிய அறுவை சிகிச்சைகள்

மாவட்டத் தலைமை இடத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லா வகையான அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் அனைத்துவிதப் பரிசோதனைக் கூடங்களும் உள்ளடக்கியதாக இருக்கும். நூறு படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு செயல்படும். இப்படிச் செயல்படுவதால் அனைத்துவித மருத்துவங்களையும் மாவட்ட அளவிலேயே பெற்றுக்கொள்வார்கள்.

உயர் சிறப்பு மருத்துவமனைகள்:

ஒவ்வொரு நூற்று ஐம்பது கிலோ மீட்டருக்கும் ஒரு சிறப்புச் சிகிச்சை மருத்துவமனை செயல்படுத்தப்படும். இங்கு இதய அறுவை சிகிச்சை, மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற அனைத்துவித உயர் அறுவை சிகிச்சைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு உயர் சிகிச்சைக்கும் சென்னையை நாடவேண்டிய அவசியம் இருக்கக்கூடாது.

24 மணி நேரமும் வெளி நோயாளிகள் பிரிவு

ஆரம்ப சுகாதார நிலையம் முதல்- உயர் சிறப்பு மருத்துவமனை வரையிலும் வெளி நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் இயங்கும். அதற்கேற்ப மருத்துவர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள். ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் தங்களின் ஒருநாள் வேலை -ஊதியத்தை இழக்க வேண்டியிருக்காது. வேலைக்குச் சென்று வீடு திரும்புவர்களுக்கு இது வசதியாக இருக்கும். அதிகத் தொகையைச் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளை நாடிப்போவது குறையும்.

தடைகளைத் தகர்த்தெறிவோம்:

சித்த, ஆயுர்வேத புதிய மருந்துகள் கண்டுபிடிப்பிற்கு உரிய அனுமதியை வழங்குவதில்லை என மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாம் தமிழர் அரசு உரிய வகையில் தடைகளை உடைக்கும். புதிய சித்த மருந்துகள் கொண்டு வரப்படும்.

சமத்துவ மருத்துவ முறை:

ஆங்கில மருத்துவ முறையைத் தலையாய மருத்துவமாகவும், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் உட்பட பிற மருத்துவ முறைகள் அனைத்தும் மாற்று மருத்துவ முறைகள் என்பதை மாற்றி அனைத்து முறைகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவற்பணியாளர்கள், (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) முதல் கீழ்மட்ட அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றப்படும். அதற்கேற்பத் தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும். முதன்மை அமைச்சர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும்போதுதான் அதன் தரம் மேலும் உயரும். சாதாரண மக்களும் இந்தக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைப்பார்கள். நாம் தமிழர் அரசு அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டுவரும்

அடிப்படைக் குறைபாடுகள் நீக்கம்

  • தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இப்போது 16,338 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்று இருக்கின்றார். இதை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை போல் 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்று மாற்றுவோம். அதற்கேற்ற அரசு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • அரசு மருத்துவமனைகளில் 5293 உள் நோயாளிகளுக்கு ஒரு படுக்கை வசதி என்றிருக்கிறது. இது 1000 நோயாளிகளுக்கு ஒரு படுக்கை வசதி என்று மாற்றப்படும்.
  • மருத்துவச் செவிலியர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது 1000 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் என்றிருக்கிறார்கள். இதை 500 நோயாளிகளுக்கு மூன்று செவிலியர் என்று மாற்றுவோம்.
  • இதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கூடுதல் எண்ணிக்கையில் பணியமர்த்தப்படுவார்கள். மக்களுக்கும் குறைவற்ற சேவை கிடைக்கும்.

குறைகளை ஒழிக்க மாற்று

அரசு மருத்துவ மனைகளில் உயர் சிகிச்சைகள் அனைத்தும் உடனடியாக கிடைக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்படும். ஊழியர்களின் குறைபாடுகள் அனைத்தும் களையப்படும். மருத்துவமனைகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையோடு இயங்கும். மக்களுக்கான மருத்துவம் என்பது அரசின் கட்டாயச் சேவை.

குறைகளும் குற்றங்களும் தடுப்பது

நோயாளிகளுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது, ஊழியர்களின் புறம்பான வார்த்தைகள் மற்றும் நடத்தைகள், எங்கும் நிறைந்த கையூட்டு, அளவுகடந்த காலதாமதம், மருந்துகள் பற்றாக்குறை இருப்பது, உள்கட்டமைப்பு இல்லாதது, நவீன கருவிகள் இல்லாதது போதுமான மருத்துவர்கள்- ஊழியர்கள் இல்லாமல் இருப்பது, என்ற பலகுறைகள் மருத்துவத் துறையில் பெருகியிருக்கிறது. நாம் தமிழர் அரசு இவற்றை முற்றாக ஒழித்துவிடும்.

கணினிச் சுகாதார அட்டை

குழந்தை பிறக்கும் மருத்துவ மனைகளிலேயே அந்த குழந்தையின் உடல்நலம் பற்றிய குறிப்புகளோடு கணினிச் சுகாதார அட்டைகள் வழங்கப்படும். ஆண்டிற்கு ஒரு முறை பொது உடல் பரிசோதனை செய்து, அந்த முடிவுகள் கணினியில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கேற்ப மருத்துவமனைகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டிருக்கும். நோயாளிகள் அல்லது சாதாரண நபர்கள் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர் அந்தக் கணினி அட்டையை வாங்கிப் பொருத்திப் பார்த்து அவருக்கு என்ன பிரச்சனை, என்ன மருத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வார்.

முதியோர்களுக்கான நடமாடும் மருத்துவ நடுவம்

அறுபது வயதிற்கு மேல், உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதியுறும் முதியோர்களின் நலனில் எமது அரசு அக்கறை எடுத்துக்கொள்கிறது. எனவே ஒவ்வொரு மருத்துவமனையிலும் முதியோர்களுக்கு எனத் தனியாக ஒரு குழு 24 மணி நேரமும் இயங்கும். நடக்க முடியாத முதியோர்கள் தொலைப்பேசி மூலம் தகவல் கூறினால் வீடுதேடி மருத்துவர்கள் செல்வார்கள். தேவையான மருந்து மாத்திரை ஊசிகளைக் கொடுத்து அறிவுரைகளை வழங்கி வருவார்கள். தொடர்ந்து மேல் சிகிச்சை தேவை என்றால் அவரது பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைக்கு உயிர்காக்கும் ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

குழந்தைகளுக்கான மருத்துவம்

  • ஒவ்வொரு குழந்தையின் மருத்துவ நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளப்படும். பள்ளியில் சேர்க்கும்போது அந்தக் குழந்தையின் உடல்நலம் குறித்த ஆய்வு அறிக்கையும் சேர்த்தே பதிவு செய்யப்படும். இதனால் குழந்தைக்கு உடல்நலக்கேடு ஏற்பட்டால் உடனே கண்டறிந்து குணப்படுத்த வழிசெய்யப்படும்.

மருந்து உபகரணங்களை வாங்கும் முறை

  • மருந்து மாத்திரைகள், மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்வது அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு செயல்படும். இந்தப் பிரிவு முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகள் என வாங்கும் போது தரத்தைப் பரிசோதிக்கச் சில ஆயிரம் மாத்திரை அட்டைகளுக்கு ஒரு அட்டையைப் பரிசோதிப்பது, பல ஆயிரம் ஊசி மருந்துகளுக்கு ஒரு ஊசிமருந்தைச் சோதிப்பது என்று ஏதும் இருக்காது.
  • ஆயிரம் மருந்து அட்டைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ‘சரியானதுதானா?’ என்ற ஆய்வு நடத்தப்படும். தேவைப்பட்டால் நூறு மருந்து மாத்திரை அட்டைகளுக்கு ஒன்றைப் பரிசோதிக்கும் முடிவையும் அரசு எடுக்கும். மக்களின் சுகாதார நலனில் தயாரிக்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமற்றதாக இருந்து விடக்கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு கவனமாக இருக்கும்.

இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முதல் கீழ்மட்ட அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

கணினி மருத்துவ ஆலோசனை

கிராம மருத்துவமனைகள் அனைத்தும் மாவட்ட மருத்துவமனைகளோடு கணினித் தொடர்பில் இருக்கும். ஒரு நோயாளிக்குச் சிக்கலான பிரச்சனை என்றால் உடனே கிராமத்தில் இருக்கும் மருத்துவர், மாவட்ட- மாநிலத் தலைமையிடத்தில் இருக்கும் துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களோடு காணொளி மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைகளையும் மருத்துவ உதவியையும் பெற்றுக்கொள்ளலாம். நிர்வாக முறையும் கணினி மயப்படுத்தப்படும். மருத்துவமனைப் பகுதிகளும் கணினிக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உயிர் காக்கும் ஊர்திகள் (AMBULANCE)

  • ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு உயிர் காக்கும் ஊர்தி (ஆம்புலன்ஸ்) இருக்கும் அல்லது பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்திற்கு ஒரு வாகனம் இருக்கும். இதன் மூலம் உயிர்ப் பலியை வெகுவாகக் குறைக்க முடியும். அப்படிக் கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு எந்த நிமிடத்தில் இருந்து மருத்துவம் பார்க்கப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படும். அனைத்திலும் வெளிப்படைத் தன்மை இருக்கும்.
  • இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உட்படப் பலநோய்களுக்குப் பல் சுத்தமில்லாததும், பல்நோயும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தளவிற்குப் பற்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். அப்படியான பல் மருத்துவத்திற்குத் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துக் கல்லூரி மட்டுமே இருக்கிறது.
  • உலக சுகாதார நிறுவனம் கூறும் புள்ளிவிவரப்படி பார்த்தால் இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பல் மருத்துவர் என்று இருக்கிறார்கள்.
  • தமிழகத்திலோ ஒரு இலட்சம் பேருக்கு ஒரு பல் மருத்துவர் என்ற கணக்கில் இருக்கிறார்கள். தனியார் பல்மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருக்கிறதே ஒழிய அரசுப் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டுமே இருக்கிறது. அதனால் தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பப் பல் மருத்துவர்களை உருவாக்க வேண்டிப் புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி

  • தற்போது தமிழகத்தைச் சுகாதார அடிப்படையில் 42 மாவட்டங்களாக (HUD) பிரித்துக்கொண்டு மருத்துவத்தை வழங்கி வருகிறார்கள். அதற்கேற்பப் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். அதன் மூலம் மேலும் மக்களுக்கான மருத்துவச் சேவையை நாம் தமிழர் அரசு வழங்கும்.

குருத்தணு சிகிச்சை முறை (ஸ்டெம்செல்- STEM CELL)

குருத்தணு முறை சிகிச்சை (ஸ்டெம்செல்) ஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். காது இல்லாவர்களுக்குக் காது, இதயம் இல்லாதவர்களுக்கு இதயம் என்று உடலின் எந்த உறுப்பையும் புதிதாக வளர்த்தெடுத்துக்கொள்ள பயன்படும் ‘குருத்தணு ஆய்வு மையங்கள்’ தொடங்கப்படும். வியாபார நோக்கில் முறையற்ற ஆய்வு மையங்கள் வளர்வது தடுக்கப்படும்.

இடமாற்றச் சிக்கலுக்கான தீர்வு:

  • மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் இடமாற்றம் இருக்காது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளிலேயே பணியமர்த்தப்படுவார்கள். பழிவாங்கும் நோக்குடன் நடத்தப்பட்டு வந்த இடமாற்றங்கள் முற்றாக ஒழிக்கப்படும். கணவர் ஓர் ஊரிலும், மனைவி ஓர் ஊரிலும் பணியாற்றும் முறை தடுக்கப்படும். இருவரும் ஒரே ஊரில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இடமாற்றத்திற்குக் கையூட்டுப் பெறுவது தடை செய்யப்படும்.

மரபு சார்ந்த மருத்துவத்திற்கு முன்னுரிமை

  • ஆங்கில மருத்துவத்திற்கு என்னென்ன வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறதோ அதற்கு இணையாக, சமமான வசதிகள் நம் மரபு சார்ந்த தமிழ்வழி மருத்துவம் (சித்தா) ஓகம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர் மருத்துவத்திற்கும் வழங்கப்படும்.
  • ஆரம்ப சுகாதார மருத்துவ மையத்தில் இருந்து மாநிலத்தின் தலைமை மருத்துவமனைகள் வரையிலும் சித்தா, ஆயுர்வேதம் அக்குபஞ்சர் மருத்துவக் கிளைகள் அமைக்கப்படும். ஆங்கில மருத்துவர்களுக்கு இணையாக, ஊழியர்களுக்கு இணையாக, மருத்துவமனைகளுக்கு இணையாக இது அமைக்கப்படும்.
  • 50 விழுக்காடு ஆங்கில மருத்துவம் என்றால் 50 விழுக்காடு தமிழ்வழி மரபு மருத்துவத்திற்கு அளிக்கப்படும். மக்களுக்கு எந்த மருத்துவத்தில் விருப்பமோ அதில் மருத்துவம் செய்துகொள்ளலாம்.

இயற்கை மருத்துவம்

  • சுற்றுலா சார்ந்து எங்கெல்லாம் நீர்நிலைகள், அருவிகள் மலைப்பிரதேச இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மரபுவழி மருத்துவத்திற்கான மையம் ஏற்படுத்தப்படும். அந்தப் பகுதியில் பெரிய அளவில் மூலிகைப் பண்ணைகளும், அழகுக் குடில்களும் அமைக்கப்படும். பாரம்பரிய உணவு முறையோடு, எண்ணெய்க் குளியல், இயற்கை மருத்துவம் என்ற ‘இயற்கை மருத்துவப் பண்ணை’ அமைக்கப்படும். சுற்றுலாப் பயணிகளும், இயற்கை மருத்துவம் வேண்டுவோரும் இதன் மூலம் பயனடைவார்கள்.

மரபு வழி மருத்துவ ஆராய்ச்சி மையம்

  • தமிழகத்தில் முதன்மையான நான்கு இடங்களைத் தேர்வு செய்து அங்கு மரபுவழி மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், ஓகம், அக்குபஞ்சர் ஆகிய மருத்துவத்திற்கான கல்லூரிகள் தொடங்கப்படும். மேலும் இங்கு மரபுவழி மருத்துவப் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை பணியில் சேர்ந்த நாள் முதலே அவர்களுக்கான பணிமூப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு விதிமுறைகள் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன்படித் தங்குதடையின்றி  அவர்களுக்கான பதவி உயர்வுப் பயன்கள் கிடைத்தபடி இருக்கும். வெளிப்படைத் தன்மை, கணினிமய நிர்வாக முறை என்பதால் அவர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளுக்கு வாய்ப்பிருக்காது. தவறு நடக்கவும் வாய்ப்பிருக்காது. அதனால் அவர்களின் பணிநலன் பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு மருத்துவரை உருவாக்க 27 இலட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. எனவே படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் ஓர் ஆண்டு கிராமங்களில் கட்டாயமாகப் பணி செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி ஊதியமும் வழங்கப்படும்.

 

முந்தைய செய்திகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா