மாற்று மின் பெருக்கம் – நமது அரசின் புதிய மின் உற்பத்திக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
தன்னியக்கம் தவிர மின்னியக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. ஒளி மயமான எதிர்காலத்திற்குத் தடையற்ற மின்சாரம் மிக அவசியம். அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருக்கும் மின் உற்பத்தியில் தன்னிறைவைப் பெறும் நோக்கத்தோடு புதிய கொள்கையை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.
தமிழகத்தின் மின் தேவை
- நாட்டின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியத் தேவை மின்உற்பத்தி. இந்த மின் உற்பத்திக் கொள்கையில் இதுவரை இம்மண்ணை ஆண்ட திராவிடர் ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் ஏற்பட்டுள்ள தடைகளை உடைத்து உற்பத்தியில் தன்னிறைவு பெற்த் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் வகையில் மாற்று நடவடிக்கைகளை நாம் தமிழர் அரசு உறுதியாக நடைமுறைப்படுத்தும்.
- தமிழகத்தின் தற்போதைய மொத்த மின் தேவை 13,500 மெகாவாட் மின்சாரம்.
- மாநில அரசின் மின் திட்டங்கள் மூலம் 5,152 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது.
- மத்திய அரசு மின் திட்டத்தின் மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
தனியாரிடம் வாங்குவதில் முறைகேடு:
- தமிழகத்தின் பற்றாக்குறை மின்சாரம் 8,152 மெகாவாட். அதனால் பற்றாக்குறையைப் போக்க தனியாரிடமிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் 5,700 மெகாவாட் வாங்கப்படுகிறது.
மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காமல் விட்டாலும் தமிழ்நாடு தனியார் நிறுவனங்களுக்கு 3,000 கோடியைக் கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
- இதில் தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 6.50- (ஆறு ரூபாய் ஐம்பது காசு)க்கு வாங்குகிறார்கள். வெளி மாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் 3.40 (மூன்று ரூபாய் நாற்பது காசு)க்கு வாங்குகிறார்கள்.
- ஒரே அளவுள்ள மின்சாரம் வாங்குவதில் 3.10(மூன்று ரூபாய் பத்துக் காசு) வித்தியாசம், இதனால் பத்துக் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
- இன்னுமொரு தனியார் நிறுவனத்திடம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 12 ரூபாய் என ஒப்பந்தம் போட்டு அது நீதிமன்றத்திற்குப் பொதுநலன் வழக்காக எடுத்துச் செல்லப்பட்டதால் தடுக்கப்பட்டிருக்கிறது.
- தற்போது அதானி போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும், தமிழகத்திற்குச் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டு பல மாவட்டங்களில் நிலங்களையும் வாங்கிப் போட்டிருக்கிறது.
இன்றிருக்கும் மின் உற்பத்தி முறை
- அணு உலை மின் உற்பத்தி
- அனல் மின் உற்பத்தி
- நீர் மின் உற்பத்தி
- சூரியசக்தி மின் உற்பத்தி
- காற்றாலை மின் உற்பத்தி முறை என்ற வகைகளில் இருக்கின்றது. இந்த முறைகள் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்குச் சுமார் ஒன்பது கோடி முதல் 10 கோடி வரை செலவாகிறது. இன்னும் சொல்லப்போனால் அணு உலைத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகவே செலவாகிக் கொண்டிருக்கிறது. இப்படிச் செலவாகும் தொகைதான் மின் கட்டண உயர்வுக்குக் காரணமாகி இருக்கிறது.
இன்றைய மின் உற்பத்தி முறைகளும் பாதிப்புகளும்
- இதில் அணு உலை மின் உற்பத்தி தோல்வி அடைந்த, மிகுதியான பக்க விளைவுகள், சுற்றுப்புறச் சூழல்கேடு ஏற்படுத்துகிறது என உலகம் முழுவதும் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள், அது ஏற்படுத்தும் கொடிய நோய்கள், அது சார்ந்த மனித இறப்புகள் என உலகாளவிய அச்சுறுத்தலை அணு உலை மின் உற்பத்தி முறை ஏற்படுத்தி வருகின்றது. பாதிப்பிற்குள்ளான வளர்ந்த நாடுகள் அணு உலைகளை மூடிவருகிறது.
- அதே போன்று அனல்மின் உற்பத்தியில் நிலக்கரி எரிப்பதால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.அனல் மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி வாழ்கிற மக்கள் பலவித நோய்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். உதாரணமாக நெய்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு இதயம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
- அது மட்டுமன்றி நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் தன்மை வேளாண்மைக்குப் பயன்படாத, மண்வளத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பாதிப்பில்லாப் புதிய மின் உற்பத்தி
- நீர்மின் உற்பத்தி
- காற்றாலை மின்உற்பத்தி
- சூரியசக்தி மின்உற்பத்தி
- திடக் கழிவுகளில் இருந்து மின் உற்பத்தி ஆகிய முறைகளில் மனித குலத்திற்கு எதிரான போக்குகள் இல்லை. அதனால் இவற்றில் மின்சாரம் தயாரிப்பதை நமது அரசு ஊக்கப்படுத்தும்.
- தற்போது ஒரு மெகாவாட் சூரியசக்தி (Solar) மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்குச் சுமார் ஒன்பது கோடி முதல் பதினோரு கோடி வரை செலவு செய்யப்படுகிறது. பராமரிப்புச் செலவும் அதிகம்.
அரசுக்கு நட்டம் எற்படுவதேன்?:
- மின் தயாரிப்பு இடத்தில் இருந்து பயன்படுத்தும் இடத்திற்கு மின்சாரத்தைக் கடத்திப் பகிர்ந்து வருவதில் ஏராளமான மின் இழப்பும் கசிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டு வருகிறது. அதே போன்று தனியாரிடம் வாங்குவதிலும் முறைகேடு, அரசுக்கு நட்டம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய வகை மின் உற்பத்தி
- புதிய வகை “சூரிய சக்தி ஒளிக்கற்றை’ (Cascade Solar Panel) மின் உற்பத்தியில் ஒரு மெகா வாட் உற்பத்தி செய்வதற்கு ஐந்து மனை நிலம் இருந்தால் மட்டும் போதுமானது.
- தற்போதுள்ள சோலார் தகட்டின்மீது புதிய வகை ஒளிக்கற்றை (ஒளி ஆடி) பொருத்துவதன் மூலம் சூரிய ஒளி பன்மடங்காக உள்வாங்கப்படும். அதனால் மின் உற்பத்தி கூடுதலாகப் பெறப்படும். தவிர எப்போது நல்ல சூரிய வெளிச்சம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறைந்த ஒளியிலும் நிறைவான உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.
- இதற்குச் சுமார் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்தால் ஒரு மெகாவாட் மின் உற்பத்தியைப் பெற்றுவிடலாம். தவிர இப்போது உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திமுறை ‘உயர் அழுத்த மின் உற்பத்தியைக் கொண்டது அல்ல. அதனால் பெரும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் “சூரியசக்தி ஒளிக்கற்றை’ (Cascade Solar Panel)) மின்உற்பத்தி முறை உயர் மின் அழுத்தத்தன்மை கொண்டது. பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம்.
தொடர்வண்டிப் பாதையில் மின் உற்பத்தி
- பெரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை நகரங்களில் ‘‘சூரிய சக்தி ஒளிக்கற்றை மற்றும் நவீன காற்றழுத்த மின் உற்பத்தி’’ (ElastoMecneticalFors) நிலையங்கள் அமைக்கப்படும்.
- இந்தப் புதிய முறை இரயில் தண்டவாளத்தின் மீது ஓடும் இரயிலின் இருபுறமும் நவீன காற்றாடியை வைத்து அதன் மூலம் மின் உற்பத்தியைப் பெற்றுக் கொள்வதாகும். இதன் மூலம் ஒரு மெகாவட் மின்சாரம் தயாரிக்கச் சுமார் மூன்று கோடி செலவாகும். இதுவும் ‘உயர்அழுத்த’ மின்சாரத்தைக் கொடுக்கும் என்பதால் தொழில் நிறுவனப் பகுதிகளில் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். பதினோரு ஏக்கர் நிலத்தில் வட்டவடிவிலான இரயில் பாதையை உருவாக்கி, அதன் மீது சொந்தமாக இரயில் பெட்டிகளை உருவாக்கி, வட்டவடிவில் ஓடவிட்டு இருபுறமும் நவீன காற்றாடிகளை நிறுவி மின் உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.
- நடுவில் இருக்கும் வெற்றிடத்தில் சூரியசக்தி ஒளிக்கற்றை முறையில் சோலார் தகடுகளை நிறுவி, அதன் மூலம் உயர் மின் அழுத்த மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளலாம். ஒரே நேரத்தில்- இடத்தில் இரண்டு விதத்தில் மின் உற்பத்தியைத் தயாரிக்கும் இந்த உற்பத்தி சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பசுமை ஆற்றல் (‘கிரீன் எனர்ஜி’) திட்டத்தினைக் கொண்டதாகும்.
சூரிய ஒளித் தகட்டிற்குக் கீழாகப் பணப் பயிர் வேளாண்மையைச் செய்துகொண்டு, இதன் மூலமும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.
- தமிழகத்தில் ஓடும் பல்லாயிரம் கிலோமீட்டர் நீள இரயில் பாதைகளையும் பயன்படுத்திக் கொண்டு மின் உற்பத்தியைத் தயாரித்துக் கொள்ளலாம். தமிழகத்தின் தேவைக்குப் போக மீதத்தை அருகில் உள்ள மாநிலங்களுக்கு மிகையாகவே வழங்கலாம் என்பதை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.
அரசு கட்டடங்களில் எல்லாம் தயாரிக்கலாம்
இந்தத் திட்டத்தின் படி அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டடங்களின் மேல் தளங்களிலேயேகூட மின் உற்பத்தியைச் செய்து கொள்ள முடியும். அதன் மூலம் அந்தந்தப் பகுதிகளின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உழவர்களே மின் உற்பத்தி செய்யலாம்
வேளாண் குடிமக்களே நேரடியாக மின் உற்பத்தியில் ஈடுபடும் எளிய முறையும் (Un Tapped Water Force) செயல்படுத்தப்படும். வேளாண்மைக்கான நீரை இறைக்கும் குழாயில் இந்தக் கருவியைப் பொருத்தி விட்டால் மின்சார உற்பத்தி தொடங்கிவிடும். உழவர்கள் வேளாண் விளைப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, மின்சார உற்பத்தியையும் செய்து கொள்ளலாம். வேளாண் குடிமக்களிடம் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை அரசு விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும். இதனால் உழவர்களுக்கு இரண்டுவித வருவாய் கிடைக்க வழி செய்யப்படும்.
ஒரு யூனிட் மின்சாரம் 25 காசு
நாம் தமிழர் அரசு வீடுகளுக்கான 24 மணிநேரத் தடையில்லா மின்சாரத்தை வழங்கி ஒரு யூனிட்டிற்கு வெறும் 25 காசுகளை மட்டுமே கட்டணமாக வசூலிக்கும்.
இந்தியாவிலேயே மிகக் குறைந்த மின் கட்டணம் வசூல் செய்யும் மாநிலமாக தமிழகம் இருக்கும்.
தொழிற்சாலை மின் கட்டணம் 4 ரூபாய்
- தற்போது பன்னாட்டுத் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மட்டும் 24 மணிநேரத் தடையில்லா மின்சாரத்தை உத்திரவாதத்தோடு வழங்கிவிட்டு, சொந்த நாட்டின் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலை நிறுவனங்களுக்குக் குறைந்த அளவு, தொடரற்ற மின்சாரத்தை வழங்கி வருகிறார்கள்.
- தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் 7 ரூபாய் வசூலித்து வருகிறார்கள். தொழிற்சாலைகளுக்கு 12 ரூபாய் கட்டணம். நாம் தமிழர் அரசு இவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கான மின் கட்டணம் 4 ரூபாய் என்று நிர்ணயிக்கும். இதில் மாற்றம் ஏதும் இருக்காது.
ஒரு ரூபாய் மின் கட்டணம் யாருக்கு?
- சிறு மற்றும் குறுந்தொழிலை நடத்துவோர்கள் தொடர்ந்து மின்வெட்டிற்கு ஆளாகிறார்கள். அதனால் உற்பத்தி குறைந்து நட்டத்தில் நிற்கிறார்கள். நாம் தமிழர் அரசு இவர்களின் நலனில் அக்கறை கொண்டு 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரத்தை ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கும்.
தனிக் கவனம் செலுத்தப்படும்
- பெரும் தொழிற்சாலைகள் நிறைந்த மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அதன் அருகிலேயே தேவையான ‘உயர் அழுத்த’ வகை மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும்.
எளிய மக்களுக்கான மாற்றுத் திட்டங்கள்
- தற்போது உள்ள மின் உற்பத்தியில் இந்தியப் பெரும் முதலாளிகளும், நிறுவனங்களும் மட்டுமே முதலீடுகளைச் செய்து வருகிறார்கள்.. கூடவே பன்னாட்டுப் பெரிய நிறுவனங்களும் இலட்சக்கணக்கான கோடிகளை முதலீடாகக் கொட்டி வருகிறது. முதலீட்டுத் தொகையைவிட மேலும் பல ஆயிரங்கோடிகளை இலாபமாக எடுத்துச் செல்கிறார்கள்.
நீங்களும் முதலாளி ஆகலாம்
- நாம் தமிழர் அரசு இதற்கு மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்தும். பேரூராட்சி முதல் தொகுதியில் உள்ள தலைமை மின் உற்பத்தி நிலையம் வரைக்குமான ‘கூட்டுறவு மின் பண்ணை’ முறையை அமைக்கும். அதில் அரசு ஒரு தொகையை முதலீடாக வைக்கும். மீதத் தொகையை அந்தப் பகுதியில் உள்ள மக்களே முதலீடாகப் போடலாம். அவரவர் வசதிக்கேற்ற தொகையைப் போடலாம் கிடைக்கும் இலாபத்தில் அவரவர் போட்ட தொகைக்கு ஏற்ப பங்குப்பணம் வந்துகொண்டே இருக்கும்.
மக்களே பங்கேற்கும் முறையால் ஊழல் முறைகேடு நடக்காது.
சிறு முதலாளிகளின் கூட்டு
- இந்தப் புதிய வகை ‘கூட்டுறவு மின் பண்ணை’ முறையில் தமிழகத்தில் உள்ள சிறு முதலாளிகள் பலர் ஒன்றாகச் சேர்ந்து முதலீடு செய்து மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தலாம். இலாபத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்ளலாம். இதனால் பெரும் முதலாளிகள் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்க முடியும். மிகப்பெரும் முதலாளிகள் ஒரேடியாக இலாபப் பணத்தைக் கொண்டு போகும் முறை தடுக்கப்படும். இங்குக் கிடைக்கும் இலாபம் இங்குள்ள முதலாளிகளிடமும், மக்களிடமும் இருக்கும்படியான செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம். இதனால் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைத்தபடியே இருக்கும். வறுமை ஒழியும். வளமும் பெருகும்.
- இதன் மூலம் அந்தந்தப் பகுதியிலும் இளைஞர்களுக்கும், பெண்கள் அமைப்புக் குழுவினருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஐம்பது காசு மின் கட்டணம்
- கிராமக் கைவினைப் பொருட்கள் பனை மற்றும் தென்னை உள்ளிட்ட மண்ணின் வளம் சார்ந்த சிறு தொழில் அமைப்பினர் அனைவருக்கும் ஒரு யூனிட் மின்சாரம் ஐம்பது காசுக்கு வழங்குவோம்.
மருத்துவமனைகள் மற்றும் சேவை மையங்களின் சமூக அக்கறையைக் கண்காணித்து அவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 2 ரூபாய்க்கு வழங்கப்படும்.
முற்றிலும் கட்டணமில்லா மின்சாரம்:
- தற்போது உழவர்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அப்படி கூறிக்கொண்டு நாள் ஒன்றுக்குச் சில மணி நேரமே வழங்கி வருகிறார்கள். அந்த மின்சாரமும் உழவர்களின் தேவையான நேரத்திற்குக் கிடைப்பதில்லை. இரவு நேரத்திலும் எப்போது வரும் எனக் காத்திருக்க வேண்டிய அவலம்தான். தொடர்ந்து மின்சாரம் கிடைத்தாலும் அது மும்முனை மின்சாரமாக இருக்காது. விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருக்கும். நீர் இறைக்கப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
நாம் தமிழர் அரசு வேளாண்மைக்கு மட்டும் தொடர்ந்து 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தைக் கட்டணமில்லாமல் வழங்கும். எப்போது மின்சாரம் கிடைக்கும் என உழவர் பெருமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.
- நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண் குடிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கிராமங்களிலும் மின் உற்பத்தி நிலையம்
- தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மின் உற்பத்தி செய்து, அதைக் கிராமத்தின் கடைக்கோடி வரைக்கும் எடுத்துச் செல்லும் முறைதான் இருக்கிறது. இதனால் மின்பகிர்மான இழப்பு, மின் கசிவு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
- அதனால் ஒவ்வொரு பேரூராட்சியிலும் அருகில் உள்ள சிற்றூர்களை இணைத்து, அந்தந்தப் பகுதிக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொருட்டுத் ‘துணை மின் உற்பத்தி நிலையங்களை” அமைத்துக் கொடுப்போம். இதன் மூலம் அந்தப் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
ஒவ்வொரு தொகுதியிலும்:
- ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ‘தலைமை மின் உற்பத்தி நிலையம்’ அமைக்கப்படும். சிற்றூர்களை உள்ளடக்கிய பேரூராட்சி மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் அந்தத் தொகுதித் ‘தலைமை மின் உற்பத்தி நிலையத்தோடு’ இணைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்தத் தொகுதியில் உள்ள
கடைக்கோடி கிராமமும் எளிதில் தடையற்ற மின்வசதியைப் பெற்றுக்கொள்ளும். நாம் தமிழர் அரசு இதற்கான நடவடிக்கையை இரண்டாண்டிற்குள் நிறைவேற்றி முடிக்கும்.