போக்குவரவுத்துறைக் கொள்கை – தரமான சாலைகள் பாதுகாப்பான பயணம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
போக்குவரவு வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்பதாகும். தரமான சாலை வசதியே நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு, வழியமைக்கும். இதைக் கருத்தில் கொண்டு நாம் தமிழர் அரசு புதிய சாலை வசதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்.
தற்போது இருக்கும் சாலை வசதி
- நகரங்களிலேயே தரமற்ற சாலை வசதி. எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமான காட்சிகள். தரக்கட்டுப்பாடு இல்லாத சாலைகளுமாக இருக்கின்றன.
- புதிதாகச் சாலை போட்ட பிறகு, தொலைப்பேசி இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர், -குடிநீர்க் கால்வாய் இணைப்பு ஆகியவைகளுக்காகப் பள்ளம் தோண்டிச் சாலைகளை மோசமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
- மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய அவசரகால உதவி மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.
- நெடுஞ்சாலைகளில் போதிய நிழல் தரும் மரங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஒரு மகிழுந்து (கார்) வெளியிடும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த 6 மரங்கள் தேவைப்படுகின்றன
- நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டருக்கு ஒரு விபத்துக் கால மருத்துவமனை இல்லாத நிலை இருக்கின்றது.
இன்றுள்ள போக்குவரவு அவலம்
- தமிழகத்தில் தற்போது சுமார் 1 கோடியே 75 இலட்சம் வாகனங்கள் பயன் பாட்டில் இருக்கின்றது. ஆனால் அதற்கேற்ற சாலை வசதிகள் இல்லை. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்பத் தொலைநோக்குப் பார்வையோடு சாலைத் திட்டங்கள் ஏதும் அமைக்கவில்லை
- நூறு வாகனங்கள் பயணிக்கும் பாதையில் ஆயிரம் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
- நாற்பது பேர் பயணிக்கக்கூடிய பேருந்தில் குறைந்தது 60 முதல் 80 பேர் வரை பயணிக்கின்ற அவலத்தில் நெரிசல் இருக்கிறது. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்தநிலைதான்.
- காலமாற்றத்திற்கு ஏற்ற நவீன கட்டமைப்புகளைக் கொண்ட சாலைகளையும் போக்குவரவும் மாற்றாமலேயே வைத்திருக்கிறார்கள்
சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது
- கார் மற்றும் இரண்டு சக்கரவாகனங்களின் பயன்பாட்டு எண்ணிக்கை ஒவ்வொர் ஆண்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற சாலை மேம்பாடு மாற்றுவழிகள் ஏதும் செயல்படுத்தப்படவே இல்லை.
- அதிகரிக்கும் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு அளவிற்கு மீறிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்தப் பாதிப்புகள் நீடித்துள்ளது.
ஊழியர்களின் சிக்கல்கள்
- அரசு வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குக் கூடுதல் நேரப்பணி வழங்கப்படுகிறது. போதிய ஓய்வற்ற நிலையில் வாகனங்களை இயக்கும்போது விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது.
- போக்குவரவு ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. அவர்களுக்கான ஊதிய விகிதமும் குறைவானதாகவே இருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ற பொதுவாகன வசதிகள் இல்லை.
- வாகனங்களின் இயக்கம் சுமார் 15 ஆண்டுகள் எனக் கட்டுப்பாடு வகுக்கப்படும். அதற்குப் பிறகான வாகனங்கள் தடை செய்யப்படும். இது நெரிசலான போக்குவரவைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கையாக மாறும்.
- வாகன விற்பனையிலும் வாங்குவோரிடமும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஏதும் இல்லை.
பழைய பேருந்துகள் மாற்றப்படும்
- பழைய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படும். புதிய பேருந்துகள் வாங்கப்படும். மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்பப் பொதுப் போக்குவரத்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும். பேருந்துகள், பொதுவாகனங்கள் அனைத்திலும் கதவுகள் கணினிக் கட்டுப்பாட்டில் இருக்கும். படிக்கட்டுப் பயணங்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்கள் தவிர்க்கப்படும்.
நகரங்களில் சிற்றுந்து
- நகரங்களில் நெரிசலைக் குறைப்பதற்கு அதிக சிற்றுந்துகள் இயக்கப்படும். தொலைதூரப் பயணத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும். பெரு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
மின் சக்தி வாகனங்கள்
- பேருந்துகள் அரசு வாகனங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கக்கூடியதாக மாற்றி அமைக்கப்படும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மின்கலன் சேமிப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கமுடியும். இதனால் நகரங்களில் உள்ள கரியமிலக் காற்றின் அளவு குறைக்கப்படும்.
புதிய கட்டுப்பாடுகள்
- வாகனங்களை வாங்குவோர் அதை நிறுத்துவதற்கான இடத்தை வைத்திருக்க வேண்டும். வீட்டில் அதற்கான இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யத் தனிப்பிரிவு உருவாக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து சான்றளித்த பிறகுதான் வாகனங்களை விற்க அனுமதிக்கப்படும். சாலைகள் மற்றும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. பாதுகாப்பிற்காகக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்.
எல்லா அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்.
நவீன வாகன நிறுத்தங்கள்
- ஒவ்வொரு பகுதியிலும் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கணக்கெடுக்கப்படும். அதற்கேற்ப அந்தப் பகுதியிலேயே அரசு செலவில் அடுக்கு மாடி வாகன நிறுத்தக் கட்டட வசதிகள் அமைக்கப்படும். வாகனங்கள் நிறுத்த இடமில்லாதவர்கள் அந்த இடங்களில் குறைந்த மாதாந்திரக் கட்டணத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலைகள் அனைத்தும் போக்குவரவுக்கும், நடப்பதற்குரியதாக மட்டுமே பயன்படும்.
சிறு வணிகர்களுக்கு மாற்று இடம்
- சாலை ஓரங்களில் இருக்கும் சிறுவியாபாரிகளுக்கு அந்தந்தப் பகுதியிலேயே தனியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து கடைகள் கட்டி மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது, பாதசாரிகளும் பாதிக்கப்படமாட்டார்கள்.
மீண்டும் டிராம் வண்டி
- நகரங்களில் உள்ள சாலைகளின் நடுவே மீண்டும் சாலைத் தொடர்வண்டி (டிராம்வண்டி) இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஏதுவான இடங்களில் அது நிறைவேற்றப்படும். இதன் மூலம் பொதுப்போக்குவரவு அதிகமாகும். நெரிசலும் குறையும்.
சுங்கச் சாவடிக்குத் தடை
- தமிழகத்தில் இருக்கும் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் நிரந்தரமாக மூடப்படும். வேறு எந்த வடிவிலும் சுங்கவரி வசூல் இருக்காது. அதற்கான நடவடிக்கையை நாம் தமிழர் அரசு எடுக்கும்.
ஒருங்கிணைந்த போக்குவரவு
ரோம்நகர், செனிவா உள்ளிட்ட இடங்களில் இருப்பது போல் ஒரே பயணச்சீட்டில் நகரப்பேருந்து, சாலைத் தொடர்வண்டி (டிராம்வண்டி) மெட்ரோ தொடர்வண்டி ஆகிய அனைத்திலும் பயணம் செல்லும்படி; தமிழகத்திலும் முக்கிய நகரங்களின் போக்குவரவு முறையை மாற்றி அமைப்போம்.
மதுரவாயில் மேம்பாலம்
- வணிகம் மற்றும் போக்குவரவு வசதிகளை மேம்படுத்த நிலுவையில் உள்ள மதுரவாயில் மேம்பாலத் திட்டம் உடனடியாக முடித்துவைக்கப்படும். இதனால் துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கான போக்குவரவு, சென்னைக்குள் நெரிசலை ஏற்படுத்தாமல் அமையும்.
நடத்துநர்கள் இல்லாப் பேருந்து
- அரசுப் பேருந்துகளில் இப்போது பணியில் இருக்கும் நடத்துநர்கள் அதே வேலையில் தொடர்வார்கள். அவர்களுக்குப் பதிலாக இனி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் பணியமர்த்தப்படுவார்கள்.
- பேருந்துநிலையம், பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணக் கணினி அட்டை வழங்கும் பணி இவர்களுக்கு வழங்கப்படும்.
கரும்புக் கழிவில் எரிபொருள் (எத்தனால்)
- தமிழகத்தில் அதிகம் கிடைக்கும் கரும்புக் கழிவிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்கள். பிரேசில் நாட்டில் 85 சதவீத எத்தனால் 15 சதவீத பெட்ரோல் கலந்த எரிபொருளைப் பசுமை எரிபொருளாகவே பயன்படுத்துகிறார்கள். அப்படித் தமிழகத்திலும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
தானியங்கிக் கதவுகள் கணினி மயம்
- அந்தப் பயண அட்டையைத் தானியங்கிக் கதவுகளில் பொருத்தினால் கதவுதிறக்கும். இறங்க வேண்டிய இடத்தை ஒலி பெருக்கி அறிவித்தபடி இருக்கும். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் அலுவலகம் அனைத்தும் கணினி மயப்படுத்தப்படும். அங்குள்ள மின் திரைகளில் எந்தப் பேருந்து எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.
சிற்றுந்துகள் அதிகரிக்கப்டும்
- பெரு நகரத்தின் போக்குவரவு நெரிசலை மேலும் கட்டுப்படுத்த வேண்டி சிற்றுந்துகள் நிறைய விடப்படும். எல்லா வழித் தடங்களிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சிற்றுந்துகள் விடப்படும். இதில் பெண்களுக்கான சிற்றுந்துகள் அதிகம் விடப்படும். குறிப்பாகக் காலை, மாலை, வேலை நேரங்களில் அதிக சிற்றுந்துகள் இயக்கப்படும். இதனால் பொதுப் போக்குவரவு விரைவாக இருக்கும். தனி வாகனங்களைப் பயன்படுத்துவோர் இதை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.
நகரத் தொடர் வண்டி (மெட்ரோ ரயில்)
- மெட்ரோ ரயில் (நகரத் தொடர்) வண்டியின் பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டி அதன் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்படும்.தொடர்வண்டி நிர்வாகத்திற்கு ஏற்படும் நட்டத்தை அரசு நிர்வாகம் ஈடு செய்யும். அரசு வாகனங்களைப் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும்போதுதான், அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் போதுதான் நகரின் போக்குவரவு நெரிசல் குறையும்.
சாலைகள் மேம்பாடு
- சாலைகள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த முறையில் அமைக்கப்படும். மண்ணை நஞ்சாக்கும் நெகிழிகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுச் சாலைகள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும். அந்தச் சாலைகளில் இருபுறமும் மழைநீர் வழிந்தோடும் வகையில் நீர்வழிகள் ஏற்படுத்தப்படும். நகரங்களில் எங்கெல்லாம் நீர்ச்சேமிப்பு இடங்களுக்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் இந்தச்சாலை நீர் தேக்கப்படும்.
சாலை ஓரங்களில் சிறுகுளங்கள்
- தேசிய, மாநில, கிராமச் சாலைகளின் இருபுறமும் நீர் வழிப்பாதைகள் கட்டாயம் அமைக்கப்படும். ஒவ்வொரு அரை கிலோமீட்டர் தூரத்திலும் சிறுசிறு குட்டைகள் வெட்டப்படும். சாலைகளில் வழியும் மழைநீர் அந்தக் குட்டைகளில் தேக்கப்படும்.
நவீனக் கழிப்பிட வசதிகள்
- தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் கட்டணமில்லா நவீனக் கழிப்பிட வசதி அமைந்துத் தரப்படும். பயணிகளின் அடிப்படைத் தேவையான கழிப்பிடங்கள் மேம்பட்ட முறையில் பராமரிக்கப்படும். இப்போதைய ஆட்சியில் இருக்கும் மோசமான கழிப்பிடக் கட்டிடங்கள் நாம் தமிழர் ஆட்சியில் இருக்காது.
இருபுறமும் நிழல் தரும் மரங்கள்
- போக்குவரவுச் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் கட்டாயம் நட்டு வளர்க்கப்படும். தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தோட்டப் பகுதியில் செடிவகைகள் மட்டுமே வளர்க்கப்படுகிறது. அதற்கு மாற்றாக நிழல் தரும் புங்கைமரம், வேப்பமரம் உள்ளிட்ட கன்றுகளை நட்டு வளர்ப்போம். குறிப்பாக ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கும் ஓர் அரசமரமும் ஆலமரமும் கட்டாயம் வளர்க்கப்படும்.
உயிர்க் காற்றைத் தரும் மரங்கள்
- அரசமரம், ஆலமரம் இரண்டும் 24 மணி நேரமும் உயிர்க்காற்றை (ஆக்ஸிஜன்) வெளியிடக் கூடியதாகும். அதனால் ஊருக்குள்ளும் வெளியே சாலைகளின் ஓரமும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதை முதல் கடமையாக முடிப்போம்.
உயிர்க்காப்பு ஊர்திகள்
- தேசிய- மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் உயிர்க்காப்பு ஊர்தி வாகனங்களுடன் கூடிய அவசர சிகிச்சை மருத்துவ மையம் அமைக்கப்படும்.. விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அந்த மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைகளைக் கொடுத்து அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு போக நடவடிக்கை எடுக்கப்படும்.
- புதிய நகரங்களை உருவாக்கும் போது சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்படும் சாலைகள் பசுமைக் காப்பகச் சாலையாகவும் இருக்கும்.
ஊழியர்களின் பிரச்சனைகள்
- ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம். ‘கூடுதல் வேலை நேரம்’ என்பது வழங்கப்பட மாட்டாது. இவர்களுக்கான புதிய குடியிருப்புகள் அமைத்துத் தரப்படும். ஊதிய உயர்வுப் பிரச்சனைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்து வசதிகளும் போக்குவரவு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
- புதிதாகப் போடப்படும் சாலைகள் குறைந்தது ஓராண்டிற்கு உறுதிகுலையாத தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்குள் சிதைவுகள் ஏற்பட்டால் (பேரழிவுகள் ஏதுமின்றி) சாலைகளைப் போடும் நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும். அந்தப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- பாரீஸ் போன்ற நகரங்களில் மேம்பாலங்களை விடக் கீழ்ப்பாலங்களே சிறப்பாகச் செயல்படுகின்றன. கீழ்ப்பாலங்கள் மந்திரப் பெட்டிகள் தொழில்நுட்பம் எனப்படும் ஆயத்த நிலைப் பெட்டிகளைக் கொண்டு கட்டமைப்பதால் சாலைகள் போடுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்திலும் அதுபோன்ற பாலங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.
கூவம் ஆறு தூய்மைப் படுத்தப்படும்
- தமிழகத்தில் நீர் வழிப் பாதைகளுக்கான சாத்தியங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். சென்னைக்குள் ஓடும் கூவம் நதியைச் சுத்தம் செய்து அதில் பழையபடி பயணிகள்- சரக்குப் படகுப் போக்குவரத்தைச் செயல்படுத்துவோம்.
- கூவம் நதியில் கலந்து வரும் கழிவுநீர் தடுக்கப்படும். நதியின் இருபுறமும் பெரிய குழாய்கள் அமைக்கப்படும். அந்தக் குழாய்கள் மூலம் கழிவு நீர் கடலுக்குள் கொண்டு செல்லப்படும். இதனால் கூவம் நதி சுத்தமாக மாறும்.
- பழையபடி போக்குவரத்திற்குப் பயன்படுத்துவதோடு, படகுச் சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்படும். இலண்டன், சிங்கப்பூர் நகரங்களைப் போலச் சென்னையையும் படகுப் போக்குவரத்து நகரமாக மாற்றுவோம்.
கடலோர நீர் வழிப்பாதை
- கடலோரப் பகுதிகளில் புதிய நீர் வழிப் போக்குவரவு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கடலோர மாவட்டங்களின் பொதுப் போக்குவரவும் சரக்குப் போக்குவரவும் எளிமையாக்கப்படும். சாலை வழிப் போக்குவரவில் உள்ள நெருக்கடி குறையும்.
- விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் தேனிக்குச் செல்ல வேண்டும் என்றால் தற்போது 182 கி.மீ. தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. மத்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிளவக்கல் அணை அருகேஇருக்கும் பட்டுப் பூச்சி கிராமத்தில் இருந்து வருசநாடு காமராசர்புரம் வரையிலுமான எட்டுக் கிலோ மீட்டருக்குச் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 99 கிலோ மீட்டர்ச் சுற்றுப் பாதை குறையும். அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பெரிதும் பயன்படும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதில் மாற்றம்
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு 4 வாரக் காலத்திற்குப் பயிற்சி வகுப்புகள் அரசுச் செலவில் நடத்தப்படும். வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதி முறைகளைக் கற்பது, முதலுதவிப் பயிற்சியைப் பெறுவது உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படும். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
போக்குவரவு செம்மைப்படுத்தப்படும்
- மாணவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே போக்குவரவு விதிமுறைகள் பற்றிய அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடவேண்டும். கல்லூரிக் காலகட்டத்தின்போது போக்குவரவில் உதவியாகப் பணியாற்றிச் சான்றுகளைப் பெறவேண்டும். இப்படித் தொடக்கத்திலேயே போக்குவரவு விதிமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள்தான் போக்குவரவு நெறிமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் சொல்லித்தருவார்கள்.