பத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

465

பத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

இந்த உலகம் உன்னுடையது அல்ல. உன் பிள்ளைகளுக்கு உரியது. கோடி கோடியாகப் பணம் சேர்த்து அவர்களுக்கு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த மகிழுந்துகளை (கார்) வாங்கி வைக்க வேண்டாம். வானுயர்ந்த மாளிகையை வாங்கி வைத்துவிட்டுப் போக வேண்டாம். இந்தப் பூமியை அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான ஒன்றாக விட்டுவிட்டுச் செல்லுங்கள்.

மரம்

  • “மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்., மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது.”
  • ஒவ்வொரு உயிரினத்திற்குமான உயரிய தேவை, தூய குடிநீர், தூயக் காற்று, தூய சுற்றுச் சூழல்.
  • மரம் மண்ணின் வரம். வீசுகின்ற காற்றை மூச்சுக் காற்றாக மாற்றித் தருகின்ற அரிய பணியை மரங்கள் செய்கின்றன.
  • ஒரு மகிழுந்து (கார்) வெளியிடுகின்ற நச்சுப் புகையைச் சுத்தப்படுத்த 6 மரங்கள் தேவைப்படுகிறதென்று ஆய்வுகள் சொல்கின்றன.
  • மரங்களின் பேயான சீமைக் கருவேல மரம், தைல மரம் ஆகியவற்றை வேரோடு வெட்டி எடுத்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக மா, புளி, வேங்கை, புங்கை, மூங்கிள், ஆலமரம், அரசமரம் ஆகிய மரக்கன்றுகள் நடப்படும். நாவல்மரம், ஆலமரம், அரசமரம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் நடப்படும். காரணம் இந்த மரங்கள்தான் தொடர்ந்து 24 மணி நேரமும் மூச்சுக் காற்றை (ஆக்சிஜன்) வெளியிடுகிறது.
  • ஆறு, குளம், ஏரிக் கரையோரங்களில் தேக்கு, சவுக்கு, பனை போன்ற மரங்கள் நடப்படும். பத்தே ஆண்டுகளில் பசுமைத் திட்டத்திற்காகச் சிறப்புக் கூறுகள் வகுக்கப்படும். இதற்கென அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த மண்ணைக் காப்பதும், மீட்டெடுப்பதும் மண்ணின் பிள்ளைகளுக்குக் கடமையாகிறது. அதை நாம் தமிழர் அரசு செய்து முடிக்கும்.

விளம்பரங்களுக்குத் தடை

  • பத்தே ஆண்டுகளில் பசுமைத் திட்டத்திற்கு பெருந் தடையாக நிற்பது விளம்பர பதாகைகளும் சுவரொட்டிகளும்தான். ஊர்தோறும் நினைத்த இடங்களில் நெகிழிப்பலகை விளம்பரங்கள் வைப்பதை நாம் தமிழர் அரசு முற்றாக தடை செய்கிறது. பொது மற்றும் தனியார் இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது. நெகிழிப் பதாகைகள் வைக்கக்கூடாது.
  • ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட ஒரு இடம் ஒதுக்கப்படும். அந்த இடங்களில்தான் சுவரொட்டியோ, பதாகைகளோ வைத்துக்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களில் விளம்பரம் செய்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கழிவு மேலாண்மை

  • பழந்தமிழர்கள் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். எந்த கழிவு பொருட்களையும் வீணடிக்காமல் நூறு சதவீதம் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தினார்கள்.
  • கழிவு மேலாண்மையை பொருத்தவரை தமிழகம் இன்று பின்தங்கியிருக்கிறது. மட்கும் திடக்கழிவில் இருந்து இயற்கை உரங்கள், எரிவாயு உள்ளிட்ட அனைத்தையும் தயாரித்துக்கொள்ளும் முறை இப்போது குறைவாகவே இருக்கின்றது. நாம் தமிழர் அரசு இதை கிராமங்கள் தோறும் விரிவாக்கம் செய்யும்.

அழிக்க முடியா, மட்காத நெகிழி, குழைமம் (ப்ளாஸ்டிக்) போன்ற திடக்கழிவை முற்றாக எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். மறுசுழற்சி செய்து சாலைகள் போடலாம்.

  • இதற்கு உதாரணமாக சுவீடன் நாடு உள்ளது. மொத்தக் கழிவுகளில் இருந்து 95% மறுசுழற்சி செய்து இயற்கை உரம், மின் உற்பத்தி என பயன்படுத்துகிறார்கள். நாம் தமிழர் அரசு அந்த புதிய முறைகளை நடைமுறைப்படுத்தும். தூய்மையான நகரத்தை உருவாக்கும்.

பசுஞ்சோலைத் திட்டம்

  • கிராமம் தோறும் பசுஞ்சோலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்கனவே இருக்கின்ற பள்ளி வளாகங்கள், அரசுக் கட்டடங்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்தும் பசுஞ்சோலையாக மாற்றப்படும். புதியதாக அமைக்கப்படும் மருத்துவப் பண்ணைகள், அரசின் புதிய கட்டடங்கள் அனைத்தும் பசுஞ்சோலைகளுக்கு நடுவே உருவாக்கப்படும்.
  • கட்டமைப்பின் போதே அரசு கட்டடங்களின் மீது புதிதாகச் சூரியஒளி மின் உற்பத்திக்கான வசதிகளோடு கட்டப்படும். ஒவ்வொரு கிராமச் சாலையிலும் மரங்கள் வளர்க்கப்படும். அதற்கென்ற ஊழியர்கள் அந்தந்தக் கிராமங்களில் இருந்தே நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கப்படும்.

மருந்துகளைத் தவிர்க்க மரம் வளர்ப்போம்

  • “பிறக்கும் குழந்தைக்குப் பெயரைப் பிறகு வை. பிறந்த குழந்தைக்குக் பரிசாக ஒரு மரக்கன்றை முதலில் நட்டு வை”. என்று ஊக்கப்படுத்தப்படுவார்கள்.
  • மரங்களும் அதன் தேவைகளும் என்ன என்பதைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகின்ற தலைமுறைப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் மரங்களை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் அரசின் நோக்கம்.
  • ஒவ்வொரு நபருக்கும் ஒரு மரம் என்று நட்டு வளர்த்தாலே சுத்தமான காற்று, வளமான மண் என்றாகிவிடும். நோயற்ற வாழ்வின் தொடக்கமாக இருக்கும்.

மரங்களைப் பற்றி எழுதிய கவிப்பேரசு வைரமுத்து அவர்களின் கவிதை

உண்ணக் கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடையக் குடில்,
அடைக்கக் கதவு,
அழகு வேலி,
ஆடத் தூளி,
தடவத் தைலம்,
தாளிக்க எண்ணெய்,
எழுதக் காகிதம்,
எரிக்க விறகு,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!

– என்ற மரங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கவிதையை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் நன்னூல் பாடமாகச் சேர்க்கப்படும்.

பறவைகளின் வாழ்விடம்

  • நல்ல நிழலும், பழங்களும் கொண்ட மரங்களில் தான் பறவைகள் அதிகமாக வந்து தங்கும். அதற்கேற்ப நாவல்மரம், புங்கை மரம், வேப்பம் மரம், அத்திமரம், அரச மரம் என பழங்களைக் கொடுக்கும் மரங்களாகக் கிராமங்களைச் சுற்றி வளர்க்கப்படும். ஏனென்றால் பறவைகள் இல்லை என்றால் உயிர்களின் சுழற்சி இல்லை.
  • காடுகளில் எந்த மரமும் மனிதன் நட்டதில்லை. எல்லாம் பறவைகள் இட்ட எச்சங்களால் விளைந்தவை தான். மரத்தின் விதைகளைப் பறவைகள் உண்டுக் கழிவை வெளியிடும்போது அரச மரமும் ஆல மரமும் முளைக்கிறது. எனவே சுற்றுச்சூழல் நண்பனான மரங்களைப் பாதுகாப்போம்.

பறவைகளின் தாய்வீடு

  • பறவைகள் எங்கு வந்து தங்குகிறதோ அது மிகுந்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும். குறிப்பாக வெளி நாடுகளில் இருந்து வருகின்ற பறவைகளை, ‘வெளிநாட்டுப் பறவைகள்’ என்பதை நாம் தமிழர் அரசு ஏற்கவில்லை. பெண்கள் தாய் வீட்டிற்கு வந்து மகப்பேறு பார்த்துக்கொண்டு திரும்புவதுதான் தமிழர்களின் மரபு. இராமநாதபுரத்தில் தண்ணீர் இருப்பது சைபீரிய, ஆஸ்திரேலியா, சுவிசர்லாந்து நாட்டு பறவைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. காலம் காலமாகத் தாய் நிலமான தமிழ் நாட்டிற்குக்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றோடு பறந்துவிடுகிறது. ஆமைகளும் பறவைகளும் மரபைக் கடைப்பிடிக்கின்றது.

தனது தாய் நிலத்திற்கு வந்து போகும் பறவைகள் மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கப்படும்.

மரங்களை வெட்டக் கட்டுப்பாடு

  • மனிதனை வெட்டிக் கொலை செய்வது எவ்வளவு பெரிய கொலைக் குற்றமாகக் கருதப்படுகிறதோ அதைப் போல் மரங்களை வெட்டுவதும் பெருங்குற்றமாக கருதப்படும்.
  • அதனால் ‘‘நூறு மரம் நட்டு ஒரு மரம் வெட்டு’’ என்ற சட்டம் கொண்டு வரப்படும்.
  • மரம் வெட்டுவதற்குத் தேவை இருக்குமேயானால் நூறு மரம் நட்டதற்கான சான்றுகளை, அருகில் இருக்கின்ற வட்டாட்சியர், அரசு அலுவலரிடம் காட்டி அனுமதியைப் பெற்று ஒரு மரம் வெட்டிக் கொள்ளலாம். சம்பந்தப்பட அதிகாரி நேரில் ஆய்வு செய்த பிறகே மரங்கள் வெட்ட அனுமதிக்கப்படும்.

மரங்களை நட்டு வளர்க்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்தி உதவித்தொகையும் வழங்கும்.

  • இரத்த தானம், உடல் தானம் செய்கின்றவர்களுக்கு ‘தமிழ் நற்குடி’ என்றத் சான்றுகள் கொடுப்பதைப் போல, அதிக மரங்களை நட்டு சாதிப்பவர்களுக்கு ‘பசுமை நாயகன்’, ‘பசுமை நாயகி’ பட்டமளித்துப் பாராட்டப்படுவார்கள்..
  • மண்ணின் மீது அக்கறை கொண்டு, ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து கொண்டு வருகின்ற பெருமக்களுக்கு, ‘நற்குடிச் சான்றும்’, தமிழ்த் தேசியச் சிறந்த குடிமகன் விருதும் வழங்கிப் பாராட்டப்படும்.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி