நெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

168

நெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

இந்த நாடு குப்பைமேடு ஆவதற்கும்,மண்ணின் வளம் கெடுவதற்கும் நெகிழி(பாலித்தின்), குழைமம்( ப்ளாஸ்டிக்) ஓர் முக்கிய பங்காற்றுகிறது. நெகிழி குழைமப் பொருட்களைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் இருக்கின்றது. இதில் அமெரிக்காவும், சீனாவும் விழிப்புணர்வோடு நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்தியா அதில் விழிப்புணர்வைப் பெறவில்லை. அந்த வகையில் தமிழக ஆட்சியாளர்களும் அக்கறையற்று இருக்கிறார்கள், நாம் தமிழர் அரசு இந்நிலையை மாற்றும்.

இயற்கைச் சுழற்சி இல்லை

உணவகத்தில் வாழை இலையைச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்திவிட்டு பின் கீழே போடும் போது, அது மாடுகளுக்கு உணவாகவும், மண்ணோடு மண்ணாகி மக்கி உரமாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான் இங்கிருந்த ஒவ்வொரு பொருட்களும் மறு சுழற்சி முறையில் பயன்பட்டு வருகிறது. ஆனால் நெகிழி(பாலித்தின்) குழைமம் (பிளாஸ்டிக்) பயன்பாட்டிற்கு வந்தபிறகு அந்த முறைகள் மாற்றப்பட்டு விட்டது. அந்த பொருட்களை கீழே போட்டு விட்டால், அது மக்கி மண்ணோடு மண்ணாகப் போக 5 இலட்சம் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வில் சொல்கிறார்கள்.

பாதிப்புகள்

ஆற்றுநீர் பகுதிகள், நீரோடைகள். கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் நெகிழிக் கழிவுகள் அடைப்பை ஏற்படுத்துகிறது. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் புற்களை, தழைகளை மேயும்போது நெகிழிப் பொருட்களும் வயிற்றுக்குள் சென்று உயிராபத்தை ஏற்படுத்துகிறது. கடலில் கலக்கும் நெகிழிக் கழிவுகளால் மீன்வளங்கள் பாதிக்கின்றது, இதனால் மனித குலத்திற்கு எதிரான நெகிழிப் பொருட்களுக்குத் தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிக்கப்படும்.

மக்களுக்கு விழிப்புணர்வு

  • குப்பையைக் கூட சரியாகக் கொட்டத் தெரியாத நாடு குப்பை மேடாகத்தான் போகும். அதனால் மக்கும்- மக்காத குப்பைகளை எப்படித் தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்படும். குப்பையைக் குப்பைக் கூடைகளில் கொட்டாதவர்களைத் தெருக்களில் உள்ள கண்காணிப்புக் கருவிகள் காட்டிக்கொடுத்துவிடும். மூன்று தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படும், அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள், அதற்கு மேலும் பொறுப்பற்றுக் குப்பையை ஆங்காங்கே வீசுபவர்கள் மீது நடிவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான அடிப்படை உரிமை, அரசின் சலுகைகள் நிறுத்தப்படும்.

மாற்றுப் பொருட்களை வழங்கும்

  • நெகிழிப் பொருட்களால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நாம் தமிழர் அரசு தடை செய்யும், அதே நேரத்தில் அதற்குப் பதிலாக இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி போன்றவற்றால் ஆன பொருட்களைப் பயன்படுத்த வழி செய்யும். கேரள மாநிலத்தில் மக்கக்கூடிய காகிதப் பைகளில்தான் பாலை அடைத்து விற்கிறார்கள். அது போன்று தமிழகத்திலும் கொண்டு வரப்படும். உலக நாடுகள் பலவும் நெகிழிப் பொருட்களுக்குப் பதிலாக இயற்கை வழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அந்த வழியை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.