தொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

294

தொல்தமிழர் மீட்சி  | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

ஆதித் தமிழர் விடுதலை இல்லாது;
மீதித் தமிழர் விடுதலை வெல்லாது
– செந்தமிழன் சீமான்

பழந்தமிழர் தொல்தமிழர்

1956 இல் திராவிட எல்லையாகக் குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அங்கே வாழும் தாழ்த்தப்பட்டோர் சமூகம், ஆதித் கன்னடர், ஆதி ஆந்திரர், ஆதி மலையாளி என்று அரசாணை மூலம் அழைக்கப்படுவதைப் போன்று, தமிழகத்தில் பட்டப் பெயர்களால் சுட்டப் பெறுவது தடை செய்யப்படும். மாற்றாக பட்டியல் வகுப்பு சமூகங்களை ஒருங்கிணைத்து “ஆதித்தமிழர்” / “பழந்தமிழர்” என்று அழைத்திட சட்டம் இயற்றப்படும்

ஆதித் தமிழர்களா? திராவிடர்களா?

ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை.
அரிசன் என்பது காந்தியின் ஏமாற்று.
தாழ்த்தப்பட்டவன் என்பது தன்மானமின்மை.
தலித் என்பது தமிழின இழப்பு.
பழந்தமிழன் என்பதே சிறப்பும் பெருமையும்.
ஆதி ஆந்திரன், ஆதிக் கன்னடன், ஆதிக் கேரளன் என்று
பிறர்தம்மைச் சுட்டும்பொழுது ஆதித்(பழந்) தமிழன் என்பதே சிறந்தது.
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

பொது வாழ்விடம், பொது இடுகாடு

தனி இரட்டை வாழ்விடம்(ஊர்,சேரி) இரட்டை வழிபாட்டுத் தலங்கள், தனிஇடுகாட்டு முறை அறவே நீக்கப்படும், பொது வாழ்விடம், பொது இடுகாடு உருவாக்கபடும்.

நிதி ஒதுக்கீடு

ஆதித் தமிழர் சமூகத்திற்கென ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு நிதியில் அம்மக்கள் தொகை விழுக்காட்டிற்கு இணையான இடஒதுக்கீடு செய்வதோடு மேற்படி நிதியை ஆதித்தமிழர் நலத்துறைத் திட்டங்கள் மூலம் செயலாக்கப்படும்

பஞ்சமி நிலங்கள்

ஆங்கிலேயர் காலத்தில் இம்மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஆதித்தமிழர் அல்லாதோரிடமிருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஆதித்தமிழர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

  • போலிச்சான்றிதழ்கள் பெற்று அரசுப் பணிகளில் உள்ளோரைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்வதோடு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூகநீதிப் போராளிகள்

சாதி எதிர்ப்புப் போரில் அரசு வன்முறை ‘ சாதிவெறித் தாக்குதலில் பலியானோரை “சமூகநீதிப் போராளிகள்” என்று அறிவித்து அவர்தம் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுப் பணியும், வாரிசுகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும்.

வனவள உரிமைச் சட்டம்-2008

வனவள உரிமைச்சட்டம்-2008 முழுமையாக நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் தமிழர்களுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் வேளாண் நிலத்தை அப்பகுதியிலேயே ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஆணையை நாம் தமிழர் அரசு நிறைவேற்றும்.

அயோத்திதாசர் நிதியம்

ஆதித்தமிழர்/பழங்குடிகள் மேம்பாட்டுக்கென இயங்கும் தாட்கோவிற்கு மாற்றாக அயோத்திதாசர் பெயரில் நிதியம் உருவாக்கப்படும்.

  • அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 35 விழுக்காடு நடைமுறையாக்கப்படும் அதில் 50 விழுக்காடு ஆதித்தமிழர் 50 விழுக்காடு ஆதிப் பழங்குடியினருக்கு வழங்கப்படும்.

இருவர் பெயரிலும் பட்டா

  • அரசினால் வழங்கப்படும் திட்டங்கள் நிலங்கள் மனைப்பட்டாக்கள் ஆண் பெண் இருவர் பெயரில் கூட்டாக வழங்கப்படும்.
  • அரசு கட்டித்தரும் வீடுகள் தரமானதாக வழங்கப்படும்.
  • படித்து தத்தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஐம்பது விழுக்காடு மானியத்துடன் உதவித்தொகை வழங்கப்படும் .

இடஒதுக்கீட்டு முறைப்படி

  • கிராமப் பொது வளங்களான ஏரி மீன் ஏலமிடல், மர மகசூல் மற்றும் அரசு ஒப்பந்தப்பணிகளில் சமபங்கு வழங்கப்படும்.
  • மாநகராட்சி, நகராட்சி,மாவட்ட வட்டத் தலைநகரங்கள்,பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் வருவாய் தரும் கட்டடங்களில் ஆதித்தமிழர், பழந்தமிழர் குடிமக்களுக்கு உரிய இடஒதுக்கீடு முறைப்படி உறுதியாக வழங்கப்படும்.

தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமைக்குட்பட்ட மக்களுக்குத் தற்போது இருந்து வரும் தனித் தொழில்கள், தனிக் கிணறு, தனி வாழுமிடம், தனிப் பாதை போன்ற இழி முறைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

  • பறையடித்தல், செத்தமாடு சுமத்தல், பிணம் சுடுதல், செருப்புத் தைத்துக் கொடுக்க வற்புறுத்தல் போன்ற தீண்டாமைத் தொழில்கள் முற்றிலும் நீக்கப்படும்.

பொது விடுதி

பட்டியல் வகுப்பிற்கு தனி மாணவர் விடுதி, பிற்படுத்தப் பட்டோருக்குத் தனிமாணவர் விடுதி எனப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு மாற்றப்பட்டு அனைவரும் ஒரே விடுதியில் தங்கிப் படிக்க ஆவணம் செய்யப்படும்.

பழங்குடிகள் முன்னேற்றம்

பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடிகள் முன்னேற்றத்திற்கு எனத் தனி அதிகாரம் படைத்த பட்டியல் வகுப்பு நலக்குழு நிலையாக அமைக்கப்படும்.

  • பட்டியல் வகுப்பார் என்ற ஆதித்தமிழர்-பழந்தமிழ்க் குடி மக்கள் எவ்வகையான பாகுபாடுமின்றி மீதித் தமிழர்களுக்குச் சமமாக உரிமையுடன் வாழ நாம் தமிழர் அரசு சிறப்புச் சட்டம் இயற்றும்.

 

முந்தைய செய்திகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு