துறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
உலகிலேயே மிகப் பழமையான துறைமுக நகரங்களைக் கொண்டது தமிழகம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கடல் அலைகளை எதிர்கொண்டு ஆண்ட இனம் தமிழினம். சோழர்கள் காலத்தில் வணிகம், போர் என்று கடலை ஆண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் அரசு கடல் வணிகத்தை மேம்படுத்தத் துறைமுகங்களை மேம்படுத்தும். நாட்டில் 90 சதவீத வர்த்தகம் கடல் வழியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இப்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, இராயபுரம், நாகப்பட்டினம். திருக்குவளை, தூத்துக்குடி, ஆகிய எட்டு இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன.
விரிவாக்கம்
தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மையமாக வைத்து மேலும் கூடுதலாக வர்த்தகப் போக்கு வரவு, சுற்றுலாப் படகு, கப்பல் போக்குவரத்து, கேளிக்கை, மீன்பிடி அம்சங்கள் உள்ளிட்ட வளர்ச்சிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகப் பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் சிப்பிகள், மீன்கள் இயற்கையாக வளர்வதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். அந்தப் பகுதிகள் முழுவதும் காற்று மாசுபடாத நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவைகளை நாம் தமிழர் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றுக் கொடுக்கும்.
உரிமைகள்
துறைமுகங்களின் வளர்ச்சி என்ற பெயரில் கரையோரம் வாழ்பவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. அதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கடலோரப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் நிலங்களில் பொதுமக்களுக்கான உரிமைகள் இருக்க வேண்டும். பசுமைப் பாதுகாப்பு முறைகள், துறைமுகத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு, உலகத் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடு கணினிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்தப்படும்.
புதிய துறைமுகங்கள்
ஏற்கனவே துறைமுக நகரமாக இருந்த கடலூரில் புதிய துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த சரக்கு மற்றும் வர்த்தகப் போக்குவரவு நகரமாக மாற்றப்படும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் கடலோரப் பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் சிறிய மீன்பிடித் துறைமுகங்கள் கட்டவும், நடவடிக்கைகள் எடுக்கப்படும்
கப்பல் கட்டும் துறைமுகம்
நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்கட்டி வர்த்தகம் செய்தவர்கள். அந்த வகையில் தமிழகத்தில் புதியதாகப் பெரிய வர்த்தகக் கப்பல், சரக்குக் கப்பல்களைக் கட்டும் தொழிற்கூடம் நம் முப்பாட்டன் இராசேந்திர சோழன் பெயரில் ஏற்படுத்தப்படும். அனைத்துத் துறைமுகங்களிலும் சரக்கு மற்றும் வணிகக் கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப் படும். இதற்கான உரிமைகளைத் தனியார்கள் பெற்றுக்கொள்வதைப் போல் மாநில அரசும் தனியாகப் பெற்றுச் செயல்படுத்தும். இதன் மூலம் வர்த்தகம் மேலும் பெருகும்.
போக்குவரவு
தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் சரக்குப் பெட்டகங்களை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாலைப் போக்குவரவு நவீன வசதிகளுடன் மாற்றப்படும். சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரவு அனைத்தும் எளிதில் துறைமுகங்களோடு இணைக்கும்படியான கட்டமைப்புகள் நவீன முறையில் மேலும் வலுப்படுத்தப்படும்.
இயற்கை நீரோட்டம்
நவீன தொழில் நுட்பங்கள் வளர்வதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இயற்கை வழி நீர்ப் போக்குவரத்தில்தான் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். பர்மா ரங்கூன் துறைமுகத்தில் தேக்குமரங்களைக் கட்டிவிட்டால் நேராகத் தனுஷ்கோடித் துறைமுகப் பகுதிக்கு வந்து சேரும். இந்த இயற்கை நீர்வழிப்பாதை உலகம் முழுவதும் இருக்கின்றது. அவற்றை மீளாய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.