திரைக்கலை மேம்பாடு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

336

திரைக்கலை மேம்பாடு – திரைக்கலை அறிவியலின் ஓர் அழகான குழந்தை! | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

“திரைக்கலையும், பேச்சும் இராணுவத்தின் இரண்டு வலிமையான படைப் பிரிவுகள்”
– தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்

கலைமுகமாக

நாம் தமிழர் அரசு திரைக்கலையைத் தமிழ்த் தேசிய இனத்தின் அழகிய கலைமுகமாகவும், தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் மரபு, அழகியல் போன்றவற்றை உலகம் அறியச் செய்வதற்கான வலிமை மிக்க ஊடகமாகவும் பார்க்கிறது.

  • கண் வழியே போதை ஊட்டும் விதமாக இல்லாமல் கண்வழி நூலகமாக திரைத்துறை மாற்றி அமைக்கப்படும். வெறும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் நல்ல பொழுதை ஆக்குவதற்கான கலையாக மாற்றும்.

திரையில் தேடுகிறோம்

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு வாழ வீட்டைத்தராத எம்மக்கள் ஆள நாட்டைக் கொடுத்து விடுகிறார்கள். திரைக் கலையைத் தீண்டத்தகாத கலையாக முற்போக்குச் சக்திகள் பேசினார்கள். ஆனால் ஐயா பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு திரைத்துறையைச் சார்ந்த ஐந்து பேரை முதலமைச்சராக தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

  • பிற மாநில மக்களை விட, எம் தமிழக மக்களிடம் திரைப்பட மோகம் மிகுதியாக மண்டிக் கிடக்கிறது. அதன் விளைவாகத்தான் எம் இன இளைஞர்கள், மக்களுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் தரையில் இருந்தாலும் தனக்கான தலைவனைத் திரையில் தேடுகிறார்கள்.

திரைக்கலை ஒரு பாடமாக

மக்களுக்கான எந்த ஒரு கருத்தையும், சிக்கலையும் மிக எளிதில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடத் திரைக்கலையால் மட்டுமே முடியும். இரண்டாம் உலகப்போரின் கோர முகத்தை உலகத்திற்குக் காட்டியது திரைக்கலையே. பல இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியதும் திரைக்கலையே. அதனால் திரைப்படக்கலை தொடக்கக் கல்வியில் ஒரு பாடமாக வைக்கப்படும்.

பெருமைமிகு முன்னோர்கள், தலைவர்கள் பெயரில் திரைப்படங்கள்

எம் பெரும் பாட்டனார்கள் பூலித்தேவன், பாட்டியார் வேலுநாச்சியார், தீரன்சின்னமலை, பண்டாரக வன்னியன், மருது பாண்டியர் போன்ற எம் இன முன்னோர்களின் வீர வரலாறுகளை அரசே திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டு ஆவணமாகப் பாதுகாப்பதோடு, சமூக மாற்றத்திற்கு தன் வாழ்வை அர்ப்பணித்த பெருந்தமிழர்கள் ஐயா அயோத்திதாசர் பண்டிதர், சிங்கார வேலர், இரட்டைமலை சீனிவாசன், கக்கன், ஐயா.முத்து இராமலிங்கத் தேவர், புரட்சிப்பாவலர் பாரதிதாசன், பா.ஜீவானந்தம், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் போன்ற பெருமைமிகு சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாகத் தயாரித்து வெளியிடும்.

  • மொழிப்போரில் இறந்த மொழிப்போர் ஈகியர்களின் வரலாறும், இனத்திற்காக உயிர்விட்ட ஈகியர் அப்துல் ரவூப், முத்துக்குமார், முருகதாஸ், செங்கொடி, அமரேசன், சோதி, இளமணி, சீவானந்தம். இரவி, சிவப்பிரகாசம், மாரிமுத்து, சதாசிவம், சீனிவாசன், சுப்ரமணி, இராசசேகர், இராஜா, கிருஷ்ணமூர்த்தி, இரவிச்சந்திரன், கோகுல், ஆகியவர்களின் ஈகையும் ஆவணப்படமாக எடுத்து வெளியிடும்.

குறைந்த வாடகை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தி வந்த ஐயா திரைக்கலை மேதை டி.ஆர் சுந்தரம் அவர்களின் பெயரிலும் மற்றும் தமிழகத்தில் உள்ள இயற்கை அழகு கொழிக்கும் இடங்களிலும், ‘திரைப்பட நகர்’ அமைத்தும், அரங்கங்கள் நிறுவியும் முறையான தொகைக்கு வாடகைக்கு விடப்படும்.

முறையான கட்டணங்கள்

திருட்டுக் குறுவட்டு(Pirate DVD) முற்றிலும் ஒழிக்கப்படும். தயாரிப்பாளரின் அனுமதி இன்றித் திருட்டுக் குறுவட்டு தயாரிப்பவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய தண்டனை வழங்கப்படும். அற்கேற்ப திரையரங்குகளில் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், உணவுப் பொருட்களின் விலைகள் அனைத்தும் நியாயமான விலையில் இருக்க முறைப்படுத்தப்படும்.

கலைத் தூதுவர்கள்

உலகத் திரைப்படவிழாக்களுக்குத் தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் தகுதியான திரைப் படங்களைத் தேர்வு செய்து சிறந்த திரைப் படங்களைத் தயாரித்த, இயக்கிய கலைஞர்களைக் ‘கலைத் தூதுவர்களாக’ உலகத் திரைப்பட விழாக்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைப்பதோடு சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அரசே தத்தெடுத்துக்கொள்ளும்.

தனிக் குழு அமைக்கப்படும்

திரைப்படத்தின் தொலைக் காட்சி உரிமையை வாங்க ஒரு குழு அமைத்து இருதரப்பினரையும் சார்ந்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்துத் திரைப்படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் ஒவ்வொரு முறையும் அதற்கான வெகுமதி தயாரிப்பாளருக்கோ, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கலைஞர்களுக்கோ பெற்றுத்தரப்படும்.

சின்னத்திரை

சின்னத்திரைக்கு(தொலைக்காட்சி) வாரியம் எற்படுத்தபடும்

  • பெண்கள், குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்ப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதில் வரும் விளம்பரங்களையும் அரசு முறையாகத் தணிக்கை செய்த பின்னரே ஒளிப்பரப்ப அனுமதிக்கப்படும்.
  • திரைப்படத்தைப் போலவே தமிழ்மொழி, பண்பாடு, மெய்யியலை மேம்படுத்தும் தொலைக்காட்சித் தொடருக்கு அரசு பொருளாதார உதவி செய்யும்.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெரும்காப்பியங்களை நெடுந்தொடராக அரசே தயாரித்து ஒளிபரப்புச் செய்யும்.
  • சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.

குறும்படங்கள்

  • குறும்படங்களைத் திரையில் வெளியிடும் நிலை உருவாக்கப்படும்.
    ● சிறந்த குறும்படங்களை அரசே வாங்கித் திரையிடச் செய்யும்.
    ● மாவட்டம் தோறும் குறும்பட விழாக்கள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
    ● ஒவ்வொரு ஆண்டும் உலகத்திரைப்பட விழாவை அரசே நடத்தும்.

மொழி மீதான வன்முறை

பெண்களின் இடைகளையும், தொடைகளையும் காட்சிக்குத் தேவையில்லாமல் காட்டுவது மட்டும் ஆபாசமல்ல; காட்சிக்குத் அவசியமற்று ஒரு மனிதனை வெட்டித் ரத்த சகதியாக்குவது மட்டுமல்ல வன்முறை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது தமிழ்மொழியைத் தவறாக உச்சரிப்பதும், பிறமொழி கலந்து பேசுவதும்தான் மிகப் பெரிய வன்முறையாக நாம் தமிழர் அரசு கருதுகிறது. எனவே சின்னத்திரை, பெருந்திரை வானொலி ஆகியவற்றில் ‘மொழிக்கலப்பு‘ நடக்காமல் தடுக்கும். நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுவுக்குத் தடை

திரைப்படக் காட்சிகளில், வில்லன் மற்றும் கெட்ட கதாப் பாத்திரங்கள் மட்டுமே மது-புகைப் பிடிக்க அனுமதிக்கப் படுவார்கள். அவர்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் புகை, மது பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்படும். படத்தைப் பார்க்கும் இளம் தலைமுறையினரின் மனத்தில் கெட்டவர்கள் மட்டுமே மதுவையும் புகையிலையும் பயன்படுத்துவார்கள் என்ற மனநிலை உருவாக வேண்டும்.

ஆபாச இணையத்தளங்கள் முடக்கப்படும்

இணையங்களில் தற்போது ஆபாசப் படங்கள் (Porn) இலவசமாகவே பரப்பி வருகிறார்கள். இதனால் இளைஞர்களின் சிந்தனைகள் சிதைக்கப்படுகிறது. தவறான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தப்படுகிறது. எனவே நாம் தமிழர் அரசு ஆபாச இணையத்தளங்கள் அனைத்தையும் முடக்கும். ஆபாசப் படங்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

 

 

 

முந்தைய செய்திமெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின்னம் வழங்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரில் மனு
அடுத்த செய்திதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு