தமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

365

தமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகவும் இந்தியத் துணைக் கண்ட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் இந்தியாவிற்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் விளங்கும் ஒரே மொழி நம் தமிழ்மொழியாகும்.

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவரது மொழியாகும்
அன்பே அவரது வழியாகும்”

என்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார். ஆனால் மொழி நம் மண்ணில் செம்மையற்று நிற்கிறது என்பதே வேதனையான ஒன்று. இதை மீட்க வேண்டிய கடமையில் இருக்கிறது நாம் தமிழர் அரசு.

50,000 ஆண்டுகளுக்கு மூத்த மொழி

 • தமிழ் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழி என்று ஆய்வால் நிறுவினார் ஐயா மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.
 • ஆதி மனிதன் காடுகளிருந்து இடம் பெயரும் போது பேசிய மொழியின் ஒலி வடிவமும், வரி வடிவமும் இன்னும் தமிழில் இருக்கிறது என்று கூறும் கால்டுவெல் எல்லா மொழிகளுக்கும் மூத்தமொழி தமிழ் எனச் சொல்கிறார்.

அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று

 • ஒரு நாட்டை அழிக்கவேண்டுமானால், யானைப் படை, குதிரைப் படை கொண்டு வந்து போர் தொடுத்து அழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் தாய்மொழியை அழித்தால் கலை, பண்பாடு அழிந்துவிடும், பிறகு நாடும் அழிந்துவிடும். இதுதான் உலக முழுதும் இருக்கின்ற வரலாற்று உண்மை. இந்த உலகத்தில் அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று யுனெஸ்கோ நிறுவனம் சொல்கிறது. மொழி சிதைந்து அழிந்தால் தமிழ் இனம் அழிந்துவிடும்.
 • முகம் சிதைந்து கிடந்தால் ஒருவன் பிணத்தை அடையாளம் காட்ட முடியாததைப் போல மொழி சிதைந்து அழிந்தால் ஒர் இனத்தை அடையாளம் காட்ட முடியாது போய்விடும்.
 • அதற்குச் சான்று, நம்மைப் போல எலும்பும், நரம்பும், இரத்தமும், சதையுமாக இருக்கிற நரிக்குறவர்களுக்கு நேர்ந்துள்ள அவலம்தான். அவர்களுக்கு இந்தத் தேசம் எந்த அங்கீகாரத்தையும் அளிக்காததற்குக் காரணம் அவர்களுக்கு மொழி இல்லை என்பதால்தான். மொழியைத் தொலைத்தவன் நாடோடியாக அலைவான் என்பதுதான் இந்த உலகத்தில் கண்முன்னே தெரிகின்ற சான்று.

மொழித் திரிபு

 • தமிழோடு சமற்கிருதம் கலந்து பேசிப் பேசித்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் அனைத்தும் உருவானது.
 • 15 ஆம் நூற்றாண்டில் மலையாளம் இல்லை. வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் சேர சோழ பாண்டியர்களில் சேரப் பாட்டன் பிள்ளைகள் மலையாளியாக மாறிப் போனான். மொழித் திரிபு, பிறமொழிக் கலப்பு, ஒரு மொழியைச் சிதைத்து அழிக்கிறது.
 • பாலில் தண்ணீர் கலப்பது, அரிசியில் கல் கலப்பது என எதிலும் கலப்படத்தை விரும்பாத நம் மக்கள், உயிருக்கு நிகரான நமது தாய்மொழியில் பிறமொழி கலப்பதை எப்படி ஏற்பார்கள்?

“மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை”
என்று வருந்தி நம் பாட்டன் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்

பெற்ற தாயைப் பட்டினிப் போட்டுவிட்டு எத்தனை ஆயிரம் அன்னதானம் செய்தாலும் ஒரு பயனும் இல்லை.

 • தாய் மொழியில் படிக்காது உலகத்தில் எந்த மொழி படித்தாலும் அவனை அறிவாளி என்று உலகம் மதிக்கப்போவதில்லை.
 • உங்கள் வீடுகளுக்கு எத்தனை சன்னல் இருக்கிறதோ அத்தனை சன்னலாக உலக மொழிகள் இருக்கட்டும். நுழை வாயிலாகத் தலைவாயிலாக நம் தாய்மொழி தமிழ் இருக்கட்டும். தாய்மொழி மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாகச் செய்தி இல்லை.
 • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நமது கனவு. தமிழ் ஆட்சிமொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பாட்டு மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழியாகக் கொண்டு வருவோம்.

இத்தனை இருந்தும் வளராத தமிழ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் இணையக் கல்விக் கழகம்., செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்களைத் தமிழக அரசு நடத்தி வந்தபோதும், தமிழின் வளர்ச்சி மெல்லக் குன்றி இன்று தேங்கி நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் நாம் தமிழர் அரசு தமிழ் மொழி மீட்புக்கான வழிகளை முன்வைக்கின்றது..

இலக்கியக் கல்வி

 • தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதோடு, கல்விக்கான உதவித் தொகையும் அளிக்கப்படும். கூடவே தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கின்றது.
 • தமிழ் இலக்கியக் கல்வியை +2 முதலே முழுமையாகத் தொடங்கி முனைவர் பட்டம் வரையிலும் வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்த சான்றோர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவோம்.

தனித் தமிழ்த் தன்மையுடன்

தனித் தமிழ்ப் பேச்சுப் பயிற்சி,- தமிழ்ப் பாடல்கள், இலக்கியப் பயிற்சி ஆகியவற்றில் இசையோடு தமிழைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள் உருவாக்கப்படுவர்.

 • தனித்தமிழ்ப் பேச்சுப் பயிற்சி- இசைப்பாடல் பயிற்சியோடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பெருமளவில் பயிற்றிவிக்கப்படுவர்.
 • தனித்தமிழ்ப் பேச்சுப் பயிற்சி- நாட்டுப்புறக் கலைகளில் திறன் கொண்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பெருமளவில் உருவாக்கப்படுவர்.

பிறமொழி அறிஞர்களைப் போற்றுவோம்

ஒட்டு மொத்த மாந்த அறிவுக்கும் தமிழர்களின் பங்களிப்பைச் செய்வதில் தமிழ் மொழியின் பங்கு என்ன என்பதை உலகுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லத் தனிவகை அறிஞர்களை உருவாக்குவதோடு, தமிழின் மீது மதிப்புக் கொண்டுத் தமிழைச் செழுமைப் படுத்திய பிறமொழி அறிஞர்களையும் போற்றுதல்.

தமிழ்மொழிப் பயிற்சி நடுவம்

 • ஜெர்மன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் தாய்மொழியை இலவசமாகக் கற்றுக்கொடுக்கத் தனிப் பயிற்சி மையம் வைத்துள்ளார்கள். உலகின் மூத்த மொழியான நம் தமிழைப் பிற மொழியினர் இலவசமாகக் கற்றுக்கொள்ள வேண்டி அனைத்து மாவட்டத் தலைநகரிலும் தனித் தமிழ்ப் பயிற்சி மையம்’ அமைக்கப்படும்.
 • வெளிநாட்டினர், வெளி மாநிலத்தினர் அனைவரும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வழிசெய்யப்படும். தமிழகத்தில் பணிபுரியும் வேற்று மாநில மத்திய அரசு ஊழியர்களும் தமிழைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்.
 • பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அரசுச் செலவில் பயிற்சி மையம் நடத்தப்படும். தமிழ்மொழியைப் பேச எழுதக் கற்றுக்கொள்ள மறந்த இந்தத் தலைமுறையினருக்கு இப் பயிற்சி மையம் வாய்ப்பாக அமையும்.