தமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
ஒரு மாநிலம் சொந்தமாக வைப்பகம் தொடங்குவது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கானது. அந்த வகையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாம் தமிழர் அரசு புதிய வைப்பகத்தைத் தொடங்கும்.
உயர்ந்த நோக்கம்
இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் தனித்தன்மையைக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் உயர்ந்த நோக்கத்தோடு, ‘தமிழ்த் தேசிய வைப்பகத்தை’ நாம் தமிழர் அரசு தொடங்கும். ஓர் இனத்தின் அரசியல், அதிகாரம், பொருளாதாரம் அனைத்தும் தன்னகத்தே கொண்டிருப்பது பெருமைக்குரிய ஒன்று. உயர்ந்த நல்லிணக்கத்தைச் செயல்படுத்துவதே வைப்பகத்தின் அடிப்படை நோக்கம்.
தன்னிறைவு
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் தமிழ்த்தேசிய வைப்பகம் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்படும். மேலும் உலக நாடுகள் அனைத்திலும் அதன் கிளைகள் தொடங்கப்படும். அனைத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்கும் தமிழகம், வைப்பகத்திலும் தன்னிறைவு பெற்றிருக்கும்.
- வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பிற இனத்தவர், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழரல்லாதார் அனைவரும் இதில் கணக்கைத் தொடங்கலாம்.
கந்துவட்டி ஒழிப்பு
வைப்பகத்தின் முக்கிய நோக்கம் தொழில் முனைவோருக்கு உதவியாய் நிற்பதுதான். தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நலிந்து போவதைத் தடுக்கும் நோக்கம்தான். அவர்கள் அனைவரையும் அதிலிருந்து மீட்டெடுத்து எளிதாகத் தொழிலில் ஈடுபடும் நடவடிக்கையை நாம் தமிழர் அரசு எடுக்கும்.
வட்டியில்லாக் கடன்
வேளாண் பெருங்குடிகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், ஆகியோர்களுக்கு மட்டும் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். குறிப்பாக வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எந்த வகையிலும் தொழில் நலிந்து போகாமல் இருக்க அவ்வப்போது ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்படும்.