கலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
உயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று இந்த மானுட உலகத்திற்கு முதலில் பொதுவுடைமைக் கருத்தைச் சொன்னவர் நம் முப்பாட்டன் திருவள்ளுவர். மொழி, கலை, பண்பாட்டில் சிறந்தோங்கி வாழ்ந்த நம் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் மீட்டுருவாக்கம் செய்யச் செய்வதே நாம் தமிழர் அரசின் இலக்கு.
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது
தமிழர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுநீண்ட நெடிய மூத்த இனம், தனித்தப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” போன்ற உயர்ந்த பண்பாடு உடைய இனத்தின் மக்கள். ஒரு இனம் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகிவற்றைச் சிதையக் கொடுக்குமானால் அந்த இனமே சிதைந்து அழிந்துவிடும். எனவே அதற்கான மீட்சியை நாம் தமிழர் அரசு மேற்கொள்ளும்.
திருமுருகப் பெருவிழா
தமிழரின் மூத்த இறையோனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவும் இருக்கின்ற எம் முப்பாட்டன் முருகப்பெருமானின் தைப் பூசத் திருவிழா திருமுருகப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.
- தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை விடப்படும்.
ஐந்திணைத் திருவிழா
முல்லை நில இறையோனாகவும், தலைவனாகவும் இருக்கின்ற மாயோன் (கண்ணன்), மருதம் (இந்திரன்), நெய்தல் (வருணன்), பாலை (கொற்றவை) ஐந்து திணைகளில் வாழ்ந்த எம் முன்னோர்களுக்குத் திருவிழா எடுக்கப்படும்.
கண்ணகிக் கோயில்
ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவன்று மறத்தை வீழ்த்தி அறத்தைக் காத்து நின்ற எங்கள் முப்பாத்தாள் கண்ணகிப் பெருமாட்டியினுடைய விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
- நமது பாட்டன் சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் எடுத்து வந்து எனது முப்பாத்தாள் கண்ணகிக்குக் கோயில் கட்டியது கும்பிடத்தானே ஒழியக் குட்டிச்சுவராகப் போடுவதற்கில்லை.
அருண்மொழிச் சோழன்
உலகத்தில் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய நம் அருமைப் பெரும்பாட்டன்கள் அருண்மொழிச் சோழனுக்கும் அவர் அன்பு மகன் அரசேந்திரச் சோழனுக்கும் தஞ்சை உடையாலூரிலே மாபெரும் நினைவகம் கட்டப்படும்.
- குஜராத்தில் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள நமது பெரும்பாட்டன் அருண்மொழிச் சோழன் சிலையை மீட்டுக் கொண்டு வந்து உடையாலூரில் அவருக்குக் கட்டப்படும் நினைவகத்தில் வைக்கப்படும்.
- நம் பெரும்பாட்டன் அருண்மொழிச் சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு வெளியே வாசலில் உள்ள அருண்மொழிச் சோழன் (இராசராச சோழன்) சிலை அவன் கட்டிய கோயிலுக்குள்ளேயே வைக்கப்படும்.
கோனேரிக்கோன் கோட்டை
செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு 300 ஆண்டுகளாக எம் அருமைப் பெரும்பாட்டன்கள் கிருஷ்ணக்கோன் மகன் ஆனந்தக்கோன், ஆனந்தக்கோன் மகன் மாரிக்கோன், மாரிக்கோன் மகன் கோனேரிக்கோன், கோவிந்தக்கோன் பரம்பரை பரம்பரையாக ஆண்ட கோட்டை இன்று தேசிங்கு இராஜா கோட்டையாக மக்களால் அழைக்கப்படுவதை, அறியப்படுவதைப் பெருத்த அவமானமாகத் தமிழ்த்தேசியப் பிள்ளைகள் கருதுகிறோம். அதனால் அதை மீட்டு எம் பாட்டன் பெயரில் கோனேரிக்கோன் கோட்டை எனச் சட்டபூர்வமாக நிறுவுவோம்.
வீரப்பாட்டி வேலுநாச்சியார்
பெண்ணினத்தின் வீரத்தை உலகுக்குப் பறைசாற்றிய பெருமைமிகு பெரும் வீரப்பாட்டி வேலுநாச்சியாருக்கு, அவர் நினைவைப் போற்றும் வகையில் நினைவகம் கட்டப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறு பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்படும்.
மான மறவர்கள்
மான மறவர்கள், மருதுபாண்டியர், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கம், பெரும்பிடுகு முத்தரையர் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் தனித் தனியே நினைவகம் கட்டப்படும். அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும்.
தமிழ்ப் புத்தாண்டு
உலகத்தில் மூத்த குடியான, தமிழனுக்குப் புத்தாண்டு எதுவென்று தெரியவில்லை. தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் மக்களுக்குப் புத்தாண்டு எதுவென்று தெரிகிறது. ஆனால் தமிழர்களுக்குப் புத்தாண்டு சித்திரை ஒன்றா, இல்லை தை ஒன்றா என்று தெரியவில்லை.
- நமது தேசியத் தலைவர் தான் கட்டி எழுப்பிய தனித் தமிழீழ நாட்டில் தை ஒன்றைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடினார். அதையே நாம் தமிழர் அரசு சட்டப்படி அறிவித்துத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடப்படும்.
தமிழ்த் தேசியத் திருவிழா
தை 1 முதல் ஒரு வார காலத்திற்குத் தமிழ்த் தேசியத் திருவிழா கொண்டாடப்படும். மிகப்பெரிய நிலப்பரப்பில் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படும்.
- பல்வேறு நாட்டின் தலைவர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் உலக முழுமைக்கும் பரவி வாழும் எம்மினச் சொந்தங்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்படுவர்.
- சாதி, மத வேறுபாடின்றித் தமிழ்ச் சமூகம் ஒரே நேரத்தில் அதிகாலை பொழுதில் பொங்கல் வைத்துப் பாரம்பரிய விளையாட்டுகளை அரங்கேற்றி, மண்ணின் கலைகளை நிகழ்த்திக் காட்டி, தமிழர் கலை, இலக்கிய, தொன்ம வரலாற்றுப் படிமங்களை, பண்பாட்டுக் கூறுகளை உலகம் அறியும் அரிய
வாய்ப்பாகஆண்டுதோறும் இதை நிகழ்த்துவோம்.
- இது மிகப் பெரிய திருவிழாவாக ஒரு வாரம் நடத்தப்படும். தமிழருக்குத் தேசிய பண்டிகை பொங்கல்தான் என்று நினைவுக்கு வரும் வகையில் மீட்டுருவாக்கம் செய்யப்படும்.
- தமிழ்ப் புத்தாண்டுக்குத் தமிழர்கள் வாழும் பிறமாநிலங்களில் விடுமுறை விடக் கோரப்படும். அப்படி விடாத நிலையில் அவர்கள் புத்தாண்டுக்குத் தமிழ்நாட்டில் விடுகின்ற விடுமுறை நீக்கம் செய்யப்படும்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்து அதில் ஓராயிரம் தமிழ் அறிஞர்களுக்கு ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு ஊருவாக்கப்படும்.
- ஓலைச்சுவடிகள், கல்வெட்டு, கடலாய்வு, மெய்யியல், மொழியியல், தமிழிசை, நாட்டுப்புறக்கலைகள் போன்ற துறைகளில் உயர் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
- பண்டைய சங்ககால இலக்கியங்கள் அனைத்தும் முறையாக ஆவணப் படுத்தப்படும். தனியார்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிகளை அரசே பொறுப்பேற்றுப் பாதுகாப்பை அளிக்கும். தஞ்சை சரசுவதி மகாலில் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஓலைச்சுவடிகளை அரசு கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளும். இதுவரை வாசிக்கப்படாமலே இருக்கின்ற இலட்சக்கணக்கான ஓலைச் சுவடிகளைப் படித்தாய்ந்து வெளிக் கொண்டுவர அறிஞர்கள் குழு அமைக்கப்படும்.
ஆதிக் கலைகள் மீட்பு
மொழி இனக்கலப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மறைந்து போன பறையிசை, தெருக்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம் போன்ற பரம்பரைக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும். மாவட்டம் தோறும் தமிழகச் சுற்றுலாத் துறையோடு சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இந்தக் கலைகளைக் கட்டாயம் நடத்தவும், புதிய தலைமுறை இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
போர்க்கலைகள்
தமிழனின் போர்க்கலைகளான சிலம்பாட்டம், வாள்வீச்சு, களரி மான்கொம்பு, மற்போர், வர்மம், நோக்கு வர்மம் போன்றவை மீட்டுருவாக்கம் செய்யப்படும். முக்கியப் பெருநகரங்களில் இவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் தனியாக அமைக்கப்படும்.
- பள்ளி கல்லூரிகளில் இருந்தே தமிழர்களின் மரபுவழிப் போர்க்கலைகள் கற்றுத்தரப்படும், தற்காப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இது பயிற்றுவிக்கப்படும்
எங்கும் தமிழிசை
தமிழகக் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களிலும், பொங்கல் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளிலும் நடக்கும் கலை நிகழச்சிகளிலும், தமிழிசை விழாவும் சிறப்பாக நடத்தப்படும். இசை அறிஞர்களை அழைத்து இசை வளர்ச்சிக்கென்ற ஆராய்ச்சி நடுவம் ஏற்படுத்துவோம்.
கிராமக் கோயில்களில் தமிழ்
தமிழகத்தில் உள்ள 30,000 கிராமக் கோயில்களில் தமிழ்முறை வழிபாடு கட்டாயமாக்கப்படும். அவர்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தொடர்ந்து திருமுறைகளும், திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படும்.
சிறப்பு ஆய்விதழ்
மிகப்பெரும் மூத்த இனம், இந்த உலகம் முழுதும் பல்வேறு கண்டங்களில் பரவியிருக்கின்ற இனம், பல இலக்கியப் பண்பாட்டுப் பெருமைகளைக் கொண்ட இனம் என்ற பெருமைக்குரிய தமிழினம் குறித்த சிறந்த ஆய்வு நூல் ஒன்று மாதம் தோறும் வெளிக்கொண்டு வரப்படும். அந்த இதழில் தமிழர்களின் தொன்மம், இலக்கியம், பண்பாட்டு முறைகள் என்ற சிறந்த ஆய்வுகள் அறிஞர் பெருமக்களால் ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் இருக்கும். உலகில் வேறு எங்கெல்லாம் தமிழ், தமிழ்ச் சமூகம் பரவியிருக்கின்றது, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதற்கான தேடல் ஆய்வுகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்படும். சங்க இலக்கியங்கள்,
புதைந்து போன தொல்லியல் வரலாறு போன்ற பல ஆய்வுகளும் தாங்கியதாக அந்த இதழ் இருக்கும்.
- உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழறிஞர்கள்- ஆய்வாளர்களின் பங்களிப்போடு இந்த ஆய்வு இதழ் வெளிக்கொண்டு வரப்படும். இதற்கான பெரும் முயற்சியை நாம் தமிழர் அரசு முதல் கடமையாக ஏற்றுச் செய்யும்.
- கணிதம், அறிவியல், வரலாறு, கணினி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெளிவரும் ஆய்வுகள் அனைத்தும் தமிழிலேயே ஆய்விதழாகக் கொண்டு வரப்படும்.
- உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவரும் புதிய தகவல்கள், ஆய்வுகள், சிறப்புக் கட்டுரைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்கெனத் துறைசார் வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள். உலகின் புதியன அனைத்தும் தமிழில் அறிந்துகொள்ளும் முயற்சி நம் தலைமுறையினருக்கு வழங்க நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.
தமிழகத் தொல்லியல் துறை
மாநில அரசின் கீழ் தனியே ஒரு தொல்லியல் துறை அமைக்கப்படும். தமிழ் மண்ணில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து புதைந்த வரலாறு மீட்டெடுக்கப்படும். மைசூரில் பூட்டிக்கிடக்கும் பண்டைய தமிழ்க் கல்வெட்டுக்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
ஏன் சல்லிக்கட்டை நடத்த வேண்டும்
ஏறு தழுவும் விளையாட்டு தமிழர்களின் இறையாண்மை சார்ந்தது. ஆண்டாண்டு காலமாய் வீரியமான காளைகளை, அதன் மூலம் வீரியம் மிக்க பசுக்களின் மரபணுக்களைக் கடத்திக்கொண்டிருக்கும் கமுக்கமும் ஏறு தழுவுதலில் இருக்கின்றது.
- உலகம் முழுதும் மரபணு மாற்றப்பட்ட கலப்பின ஜெர்சி மாடுகளை விற்பனைக்கு இறக்கினார்கள். அப்படித் தமிழகத்திற்குள்ளும் நுழைக்கப்பட்டது. ஒரு நாற்பதாண்டுக் காலத்தில் தமிழகமெங்கும் ஜெர்சி வகை மாடுகளே நிரம்பியிருக்கிறது. அதிகம் பால் கொடுக்கிறது என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வகையை மக்கள் வாங்கினார்கள்.
- இப்போது உலக நாடுகள் பலவும் ஜெர்சிவகை மாடுகளின் பாலைத் தடை செய்து கொண்டிருக்கிறது. காரணம் மனித குலத்திற்கு ஒவ்வாத, பல அதிர்ச்சி நோய்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கி-1 பாலைக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான்.
- தமிழகத்தின் நாட்டு மாடுகள் மனித குலத்திற்கு ஏற்ற, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டக்கூடிய கி-2 வகைப் பாலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வகை பாலைக் கொடுப்பது நாட்டுப் பசு மாடுகள். நாட்டுப் பசுமாடுகளின் உற்பத்திக்கு நாட்டுக் காளை மாடு அவசியம். கலப்பில்லாத பசுக்களை உருவாக்கும். இந்த சூட்சுமத்தை அறிந்துதான் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளைக்கு இங்குச் சல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை என்கிறார்கள்.
சல்லிக்கட்டுக்காகவே காளைகளைப் பராமரிக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறைதான் அந்த விளையாட்டு. மற்ற காலங்களில் இனப் பெருக்கத்திற்குதான் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டை நிறுத்தினால் மற்ற மாடுகளைப் போல் அடிமாடாகப் போய்விடும். இந்த இனம் அழிந்துவிடும். ஜெர்ஸி பசுக்களின் பெருக்கம் நிரந்தரமாக இடம் பிடித்துவிடும்.
- இந்தப் பின்னணியை உணர்ந்த நாம் தமிழர் அரசு சல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை எதிர்க்கிறது. தடையின்றி விளையாட்டை நடத்தும்.
சேவல்-கிடாய்ச் சண்டை
கிராமங்கள் தோறும் ஆடு-கோழிகளுக்கான சண்டை நடந்து வருவது வாடிக்கைதான். இரண்டு சேவல் மோதிக்கொள்ளும் போது அதில் வீரியமான சேவல் வெற்றி பெருகிறது. தோற்ற சேவலைக் கறிக்காகக் கொடுத்துவிடுவார்கள். வெற்றி பெற்ற சேவலைத் தான் இனப்பெருக்கத்திற்கு விடுவார்கள். இப்படி செய்வதன் மூலம் வீரியமிக்க கோழிக்குஞ்சுகள் பெருகி வளரும். இந்த வகை கோழிகளை விரைவில் நோய்கள் தாக்காது. எதிர்ப்புச் சக்திகள் அதிகமாக இருக்கும். இப்படி வீரியமிக்க மரபணுக்களைக் காப்பாற்றிக் கடத்துவதற்காகவே கோழிச் சண்டைகளும் ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளும் நடத்தப்படுகிறது. எனவே தமிழினத்தின் கலாச்சாரத்தைக் காக்கும் விதமாக இவ்வகையான விளையாட்டுகளை நமது அரசு ஊக்குவிக்கும்
தமிழர் மரபுசார் தொழில் மீட்பு
தமிழர்களின் கலை இலக்கியம், பண்பாட்டோடு, நாட்டுப் புறக் கலைகள், நம் முன்னோர்களின் மரபுவழித் தொழிலான மரத்தச்சர், கல்தச்சர், பெருந்தச்சர், ஓவியர், படிமக் கலை, பைஞ்சுதை, வருவார் படக்கலை, பொற்கொல்லர், கருங்கொல்லர், மண்பாண்டக் கலை, பாரிவேட்டை, மஞ்சு விரட்டு, கூடைமுடைவார், பொம்மலாட்டம், பனுவல் பயிற்சி, பண் இசை, கிராமிய விளையாட்டு, மெய்யியலைச் சொல்லித்தரும் முதியோர் அவை உள்ளிட்ட பலவும் மீட்டுருவாக்கம் செய்யப்படும். மரபு வழியிலான தொழிற் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
வரலாற்று நாயகர்களின் வாழ்விடம்
வரலாற்று இன முன்னோர்களுடைய அறம், நெறி, வாழ்க்கைமுறை, அறம் சார்ந்த ஆட்சிமுறையை நமது வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பாகத் தமிழர் மெய்யியல் தலைநகரான கன்னியாக்குமரியில் மிகப்பெரிய நினைவிடம் எழுப்பப்படும்.
- இதில் வரலாற்று நாயகர்களின் வாழ்விடம், வருங்காலத் தலைமுறைக்கான வழித்தடம் என்ற பெயரிலே நமது முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் தொடங்கி நமது அருமைப் பெரும்பாட்டன்கள் சேரன், சோழன், பாண்டியன் வரலாறு, அருண்மொழிச் சோழன், அரசேந்திர சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர்களின் வரலாற்றுக் குறிப்புகளும், படங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- மொழிப்போர், எல்லைப்போர் ஈகிகளின், ஈழ விடுதலைப் போராளிகளின் வரலாற்றை அறியும் வகையில் குறிப்புகளும், படங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- கடைசியாக நமது இனக்காவலராக இருக்கும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரம் செரிந்த போராட்ட வரலாறும், வாழ்க்கை வரலாறும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், எவர் வந்தாலும் புரிந்து கொள்ளும் வகையிலும் ஒரு கல்லூரி போல உருவாக்கப்படும். அங்கே உயர்தரத் தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிகவளாகங்கள் உருவாக்கப்பட்டு மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக்கப்படும்.
இலக்கியச் செல்வர்
இலக்கியவாதிகளின் படைப்புகளை நாம் தமிழர் அரசு போற்றுகிறது. மூத்த எழுத்தாளர்களை அரசே தத்தெடுத்துக் கொள்ளும். இளம் எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படும். சிறந்த படைப்பாளிகளுக்கு, ‘இலக்கியச் செல்வர்’ விருது வழங்கும். பாவலேறு பெருஞ்சித்தரனார், தேவநேயப் பாவாணர்,
மறைமலை அடிகளார், ம.பொ.சி., அறிஞர் குணா, சாத்தூர் சேகரனார், வைரமுத்து, எஸ்.இ. ராமகிருட்டிணன், இரா.மதிவாணன், க.செல்வராசு. நெடுஞ்செழியன். உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.
மறை ஓதும் பள்ளிகள்
மலையடிவாரங்களில் தமிழர் மறை திருக்குறள் ஓதும் பள்ளிகள் உருவாக்கப்படும் மொழிப்போர் ஈகியர் மொழிப்போர், எல்லைப்போர் ஈகியர்களைப் போற்றும் வகையில் மாபெரும் நினைவகம் எழுப்பப்படும்.
- தமிழ்மொழி இன மீட்சிக்காகப் புரட்சிப் போராளிகளாகத் திகழ்ந்த ஐயா புலவர் கலியபெருமாள், தமிழரசன் உள்ளிட்ட இனநலப் போராளிகளுக்கு நினைவகம் கட்டப்படும்.
நடிகர் திலகம்
தமிழ்த் தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளமாக இருக்கின்ற நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுக்கு மதுரையில் மாபெரும் கலைக்கோயில் கட்டப்படும். இளம் வயது முதல் அவருடைய அரிய சாதனைகள், அனைத்தையும் வருங்காலப் பிள்ளைகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கே நிறுவப்படும்.
ஐயா வீரப்பனார்
தமிழர்களின் வனக்காவலராக இருந்த ஐயா வீரப்பனாருக்கு, அவர் நினைவைப் போற்றும் வகையில் நினைவகம் கட்டப்படும்.
ஈகைத்தமிழர்கள் நினைவகம்
வருங்கால தலைமுறைப் பிள்ளைகள் ஈகத்தைப் போற்றும் வகையில் இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம் செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவுப், வீரத் தமிழன் முத்துக்குமார் மற்றும் மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றில் இருந்து காக்கத் தன்னுயிரை ஈகம் செய்த வீரத்தங்கை செங்கொடிக்குத் தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்.
ஐந்தாம் தமிழ்ச் சங்கம்
நாம் தமிழர் அரசு மதுரையில் புதிதாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கும். இப்பல்கலைகழகம் அனைத்துத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒருங்கிணைப்புத் தலைமையிடமாக இருக்கும். கலைபண்பாடு, மொழி வளர்ச்சி, தமிழின வரலாற்று ஆய்வு, தொல்லியல் குறித்த அனைத்தும் மீட்டெடுக்கும் விதமாக ஆய்வு மேற் படிப்புகள் அனைத்தும் கற்கும் வகையில் செயல்படும்.