ஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

555

ஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமான வரலாறு சிங்களவர்களுக்கும் முன்னதானது. அப்படி வாழ்ந்த இனம் இன்று இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதி கேட்டு நிற்கிறது.

உயிர் மூச்சாக

  • நாம் தமிழர் அரசு ஈழத்தை ஒரு தொலைதூரத் தீவாக, மூன்றேழுத்துச் சொல்லாகப் பார்க்கவில்லை. தமிழ்த்தேசிய இனத்தின் மூச்சாக, உயிராக, பெருங் கனவாகப் பார்க்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு தேச

தமிழர்க்கென்று நாடில்லை

  • உலகத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த தொல்குடி இனமாகிய தமிழ்த் தேசிய இனம் 130 நாடுகளில் பரவி வாழ்கிறது.
  • தமிழன் வாழாத நாடில்லை! ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை. 4 இலட்சம், 5 இலட்சம், 20,000 எனத் தேசிய இன மக்களைக் கொண்ட நாடுகளும் 200 கி.மீ., 300 கி.மீ. சுற்றளவுக்குள்ளே வாழும் தேசிய இனமக்களும் விடுதலை பெற்றுப் பெருமையாக வாழ்கின்றார்கள்..விடுதலைப் போராட்டம்இதைப் பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்று பார்ப்பது வெறும் அர்த்தமற்ற தேவையற்ற ஒரு குற்றச்சாற்றாக நாம் தமிழர் அரசு பார்க்கிறது.

மேதகு வே. பிரபாகரன்

  • ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்க்குடி, 13 கோடிக்கு மேல் பூமிப்பந்தில் நிறைந்து வாழ்கின்ற ஒரு தேசிய இனத்தின் மக்கஷீமீ, இந்த உலகில் தங்களுக்கென்று ஒரு தேசம் அடைந்து எல்லா மொழிவழித் தேசிய இனங்களைப் போல விடுதலை பெற்று, உரிமை பெற்று, உயர்ந்து, சிறந்து பெருமையோடு ஏன் வாழக்கூடாது? என்ற கனவோடுதான் அங்கே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கியது. அதைத்தான் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமாக முன்னெடுத்தார்கள்.

விடுதலைப் போராட்டம்

  • ஆயிரம் ஆண்டுகஷீமீ அடிமையாக வாழ்வதை விடச் சுதந்திரமாகச் சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காகப் போராடிச்சாவது அதைவிட மேலானது என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் அங்கே விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • இதைப் பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்று பார்ப்பது வெறும் அர்த்தமற்ற தேவையற்ற ஒரு குற்றச்சாற்றாக நாம் தமிழர் அரசு பார்க்கிறது.

இனத்தின் பிறப்புரிமை

இரஷ்ய புரட்சியாளர் இலெனின், ‘ஒடுக்குகின்ற தேசிய இனத்திடம் இருந்து ஒடுக்கப்படுகின்ற தேசியயினம் விடுதலை பெற விரும்புவது தன்னுரிமை, அந்தத் தன்னுரிமையைப் போராடிப் பெறவேண்டியது ஒவ்வொரு தேசிய இனத்தின் பிறப்புரிமை’ என்று சொல்கிறார்.

ஒரு வீட்டில் வாழப்பிடிக்காத பெண் சட்டப்படி மணமுறிவு பெறுவதைக் குடும்ப உறவையே சிதைக்கின்ற ஒன்றாகப் பார்ப்பது எப்படிச் சரியாகாதோ அது போன்று, ஒரு நாட்டில் இருந்து ஒரு நாடு பிரிவதென்பதை தவறாகப் பார்ப்பது, பிரிவினைவாதமாகப் பார்ப்பது ஏற்க முடியாதென்று இலெனின் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய இனமக்கள் பிறப்புரிமைக்காக நிற்கின்றோம். எங்கள் தாய் நிலத்திலே நாங்கள் பிறந்த இடத்திலே சுதந்திரமாக வளர்ந்து வாழ்வதற்கான உரிமையைத்தான் கேட்கின்றோம்.

சிங்களப் பேரினவாதம்

அந்தப் போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசு உலகப் பேராதிக்க நாடுகளின் துணையோடு நசுக்கி எமது நாட்டைச் சுடுகாடாக்கி நிறுத்தியிருக்கின்றது. எமது மக்கள் வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உயிரை இழந்து, இன்று ஏதிலிகளாகப் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.

அவமானச் சின்னமாக

  • உலகத்தில் தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன். இன்று அவமானச் சின்னமாக அலைகின்றான். ஈக்கும் எறும்புக்கும் இரையாக இருக்கட்டும் என்று அரிசிமாவில் கோலம் போட்ட இனம், அரைப்படி அரிசிக்குக் கையேந்தி நிற்கின்றது. கோட்டைகட்டி ஆண்ட இனம் கோணித்துணி கட்டித் தூங்குகின்றது. இப்பிடிப்பட்ட இழிநிலையில் ஒரு அவமானத்தின் இழிவான சாட்சியாக எமது இனம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது.
  • ஒரு அரசியல் விடுதலைப் போராட்டத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் இறுதியாக 2008 தொடங்கி 2009 மே18 க்குள் 1,75,000 பேருக்கு மேல் மக்களைக் கொலைசெய்து, உலக வரலாற்றில் இப்பிடியொரு கொடூர இனப்படுகொலை நடக்கவில்லை என்கின்ற அளவிற்கு நடத்திக் காட்டியிருக்கின்றது சிங்கள அரசு.
  • இழப்புகளைத் தாங்கி வரலாறே பதிவுசெய்யப் பயப்படுகிற அளவிற்கு மிகக்கொடுமையான போரை நிகழ்த்தித் தன் சொந்தநாட்டு மக்களைச் சிங்களப் பேரினவாத அரசு அழித்து ஒழித்து விட்டது. இதைப்பற்றிப் பேச உலகத்தில் ஒருவரும் இல்லை. இன்றைக்கும் அந்த நிலத்தில் 90,000 விதவைகள் இருக்கின்றார்கள்.
  • பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் நச்சுக் குண்டுகளுக்கு இரையாகிக் கரிக்கட்டையாகக் கிடந்தார்கள். பல்லாயிரக்கணக்கான எம் குலப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
  • இதைப்பற்றி பேச உலகத்தில் ஒருவரும் இல்லை. தங்கை இசைப்பிரியாவின் மரணத்தையும், தம்பி பாலச்சந்திரனின் மரணத்தையும் குறிப்பிட்டுப் பேச மானுட நேயம் பேசுகிற உலகத்தாரிடதிலே ஒரு குரலும் உயரவில்லை என்பது வரலாற்றில் பெருந்துயரம்.

மண் அழுதிருக்கிறது

  • போர்க்குற்றம் என்றால் போர் சரியானது. அதில் சில குற்றங்கள் நடந்திருகிறது என்றாகிறது. ஆனால் நாம் தமிழர் அரசு அந்தப் போரையே குற்றமாகப் பார்க்கிறது. அங்கே நடந்திருப்பது வெறும் கொலை அன்று, இனப்படுகொலை. பச்சிளம் குழந்தைகள், வயது முதிர்ந்தவர், கர்ப்பிணிபெண்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று மரபு இருக்கின்றது. அதையெல்லாம் மீறி இவையெல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது.
  • குறிப்பாக இது பாதுகாப்பான பகுதி எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து, அங்கே மக்களைக் குவித்து, அந்த இடத்திலேயே தாக்குதல் நடத்தி அழித்தது.
  • சொந்த நாட்டின் மக்களின் மீது வான்வழி தாக்குதல் நடத்தக்கூடாது என்று போர் மரபு இருக்கிறது. அதைமீறி அனைத்துத் தாக்குதலையும் வான்வழி மூலமாகவே நடத்தியது சிங்கள அரசு. அதும் வெறும் படுகொலை அல்ல, இனப்படுகொலை. இறந்தது முழுக்க தமிழர்கள், கொன்றொழித்தவர்கள் சிங்களவர்கள். எனவே அது இனப்படுகொலை. வெறும் இனப்படுகொலை மட்டும் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. வெறும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தப் போரை நடத்தி அவர்கள் அழித்தொழிக்கவில்லை. சிறுகச் சிறுகச் சதி செய்து அழிக்கப் பட்டார்கள் தமிழர்கள்.

சிறுக சிறுக சதி

  • ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக எமது மொழியைச் சிதைத்து, எமது அதிகாரங்களைப் பறித்து, எமது வளங்களைச் சுரண்டி, எமது நிலங்களை ஆக்கரமித்து எமது மக்களைச் சிறுகச் சிறுக அழித்து முடித்தனர். எனவே இதைத் திட்டமிட்ட இனப் படுகொலையாக நாம் தமிழர் அரசு பார்க்கின்றது.
  • எங்களைக் கொன்றொழித்த கூட்டத்தோடு இனி கூடி வாழ்வதென்பது சாத்தியமில்லை. இலங்கையில் இரண்டு இனங்கள் ஒன்று தமிழர் மற்றொன்று சிங்களர். இரண்டும் பகை இனங்களாக 60 ஆண்டுகளாக மாறி நிற்கிறது.
  • என் தாய், தந்தையர், என் அக்காள் தங்கை, பெரியம்மா சின்னம்மா உள்ளிட்ட என் உறவுகளின் பிணத்தின் மீது ஏறிச் சென்று, எம் மக்கள் சிந்திய கண்ணீரிலும் இரத்தத்திலும் நனைந்து கொண்டு போய் எமது இனமக்களைக் கொன்று குவித்த சிங்களவனோடு ஆரத்தழுவி, அரவணைத்து வாழ்வதென்பது சாத்தியமில்லை. எனவே எமக்கிருக்கிற ஒரே ஒரு வழி நோர்வே, சுவீடன் பிரிந்தது போல, கிழக்குத் தைமூர், மேற்குத் தைமூர் பிரிந்தது போல், செர்பியா நாட்டிலிருந்து கொசோவா விடுதலைப் பெற்றதைப் போல், அண்மையில் தெற்குச்சூடான் விடுதலை பெற்றதைப் போல்…
  • கனடாவில் கியுபெக் இன மக்கள் இரண்டுமுறை பொதுவாக்கெடுப்புக்கு வந்து அந்த பொதுவாக்கெடுப்பு தோற்றுபோய், இன்று கனடாவில் இணைந்து வாழ்வதுபோல, அண்மையில் ஸ்காட்லாந்து இன மக்கள் தனியாக நாடு கேட்டு அதற்குப் பொதுவாக்கெடுப்பு நடக்கப்பெற்று இங்கிலாந்தில் வாக்கெடுப்பு தோற்றுபோய், அவர்கள் இங்கிலாந்தோடு வாழ்வதுபோல்…
  • எமக்கொரு அரசியல் வாய்ப்பு, ஜனநாயக வாய்ப்பு தந்தாக வேண்டும். கிளிக்குத் தங்கத்திலே கூண்டு வைத்தாலும் அதில் தங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டிய உரிமை கிளிக்குதான் உண்டு. ஒற்றை இலங்கைக்குள் ஒரே ஆட்சிக்குள்தான் வாழ்ந்தாக வேண்டும், இரண்டு நாடாகப் பிரியக்கூடாது என்று பேசுகிற பெருமக்கள், கருத்தாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், ‘எம்மக்களிடத்தில் ஒரே இலங்கைக்குள் வாழ்கிறார்களா? தனித்தமிழ் ஈழமாக மீள்கிறீர்களா?” என்ற கருத்தை வைத்து ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள்.

பொதுவாக்கெடுப்பு (Referendum)

ஒரே இலங்கைக்குள் வாழ்கிறோம் என்று வாக்குச் செலுத்தி விட்டால் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் வாய்மூடி மவுனியாகின்றோம். தனித் தமிழீழமாக மீள்கிறோம் என்று வாக்களித்து விட்டால், அறிவார்ந்த பெருமக்கள் வல்லாதிக்கத் தலைவர்கள் எல்லோரும் மற்ற நாடுகள் எப்படி ஜனநாயக முறைப்படி பிரிந்ததோ. அப்படி எமது நாட்டைப் பிரித்துச் சுதந்திர நாடாக, எல்லாரையும் போல சுதந்திரமாகப் பிறக்க – வாழ – இறக்க எங்கள் தாய்நிலத்தில் உரிமை பெற்றுத்தாருங்கள்.

இந்தியாவின் கவனத்திற்கு

  • இந்தியா – பாகிஸ்தான் போரின்போது இலங்கை பாகிஸ்தான் பக்கமே நின்றது. பாகிஸ்தான் வானூர்திகள் கொழும்பு வானூர்தி நிலையத்தில் எண்ணெய் நிரப்பிக்கொள்ளக் அனுமதிக்கப்பட்டது.
  • இந்திய – சீனா போரின்போதும், இலங்கை சீனாவின் பக்கமே நின்றது. ஒருபோதும் இந்தியாவின் பக்கம் உண்மையாக விசுவாசமாக இருந்ததில்லை.
  • ஆனால் ஈழத் தமிழர்களோ, இந்தியா – இலங்கை கிரிக்கெட் விளையாடும்போது இந்தியாதான் வெல்லவேண்டும் என்று உணர்வோடு கையொலி எழுப்புவார்கள்.

இந்தியப் பற்றாளர்

தேசியத் தலைவர் பிரபாகரன், உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டத் தலைவர்களுடைய வரலாற்றை வாசித்து, நேசித்து இருந்தாலும், இந்திய மண்ணின் விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஸ்சந்திர போசைத் தான் தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்.

மறுப்புத் தெரிவித்தார்

  • எத்தனையோ நாடுகள் உங்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கின்றோம். உதவியாய் நிற்கின்றோம். அதற்குப் பதிலாக எங்களுக்குத் திரிகோணமலைத் கடற்பரப்பை 30 ஆண்டு ஒத்திகையாகக் கொடுங்கள் எனக் கேட்டபோது பிரபாகரன் அதை ஏற்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவிற்கு ஒருபோதும் நாங்கள் எதிராக போகமாட்டோம் என்பதுதான். மிகப்பெரிய இந்தியப் பற்றாளராக இருந்தார்.
  • இந்தியாவைத் தங்கள் தந்தையர் தேசமாக ஈழத்தமிழ் உறவுகள் நேசித்து நின்றனர். தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடந்துபோகும் செல்ல மகனைப்போல இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழம் இருக்கும்.

இந்தியாவுக்கு ஈழமே பாதுகாப்பு

  • ஈழம் என்ற ஒரு நாடு இருந்தால்தான் இங்கு இரத்த உறவுகளை வைத்திருக்கிற இந்தியாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும். இந்தியாவிற்கு எப்போதுமே உண்மையாக இருக்கும் ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழமாகத்தான் இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பிற்கும் எதிர்காலத்திற்கும் எப்போதுமே ஈழம் என்று ஒரு நாடு இருப்பதுதான் சரியாக இருக்கும். இதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ள வைப்போம்.
  • ஈழத்தில் உள்ள எம்மக்கள் இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய சுபாஷ்சந்திரபோஸ், நேரு, காந்தி, இந்திராகாந்தி ஆகியோரின் புகைப்படங்களைத்தான் வைத்திருந்தனர்.

இந்தியாவின் தலைவர்களைத்தான் தங்களின் தலைவர்களாக ஏற்றிருந்தார்களே தவிர சிங்களத்தின் தலைவர்களை அல்ல. ஆனால் எந்தச் சிங்களவனும் இந்தியத் தலைவர்களை ஏற்றுக்கொண்டதில்லை. கொண்டாடியதுமில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும் நேசிக்கின்றார்களே ஒழிய, இந்தியாவை எதிரி நாடாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்

இன்னும் துரோகமா?

இவ்வளவிற்குப் பிறகும் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு இராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது. கப்பல், இராணுவத் தளவாடங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை எந்த நாட்டுடன் சண்டை போடுவதற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது? தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்கு இந்த உதவிகளைச் செய்வது கொடுமையானது. இதை முற்றும் தடுக்க நாம் தமிழர் அரசு போராடும்.

புலிகள் மீதான தடை நீக்கம்

விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற தடையை நாம் தமிழர் அரசு தமிழ்த் தேசிய இனத்தின் மீது திணிக்கப்பட்ட ஓர் அவமானமாகக் கருதுகிறது.

  • தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும் உரிமைக்கும் போராடிய மக்கள் இராணுவம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பு. அப்படித் தான் நாம் தமிழர் அரசு பார்க்கிறது.
  • இன்றைக்கு அந்த இயக்கம் முழுவதுமாய் ஒழிக்ககப் பட்டுவிட்டதாக இலங்கை அரசே அறிவித்தப் பிறகும், இந்தியாவில் தடையைத் தேவையற்று நீட்டிப்பது தமிழின மக்களின் உரிமை, அரசியலாக முன்நகர்வதை பலவழிகளில் தடுக்கிறது.
  • இன்றைக்குத் தங்கள் சொந்த நாட்டில் வாழமுடியாத ஏதிலிகளாக எம்மக்கள் இடம் பெயரும் போது வயிற்றுக்குள் கருவில் இருக்கும் குழந்தையையும் இடுப்பில் இருக்கிற ஒரு வயதுக் குழந்தையையும் சர்வதேச சமூகம் தீவிரவாதிகளாகத்தான் பார்க்கிறது.
  • இனவெறி அரசுக்குத் தப்பி ஓடிவரும் அகதிகளாகப் பார்க்கவில்லை. இப்படி அனைத்திற்கும் காரணம் புலிகள் மீதான தடைதான். அதுதான் முட்டுக்கட்டையாக உள்ளது.
  • எனவே நாம் தமிழர் அரசு மத்திய அரசுடன் போராடித் தடையை நீக்கும்.

அறிவார்ந்த ஆளுமைக் குழு

  • அறிவார்ந்த ஆளுமைகளை ஒன்று திரட்டிக் குழு அமைக்கப்படும். அந்தக்குழு, இந்தியாவின் பிற மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள், கருத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசும். ஈழ இனப்படுகொலைக்கான காரணங்கள் என்ன, எதற்காகப் புலிகள் போராடினார்கள் என்பதையெல்லாம் ஆவணங்களோடு விளக்கிக் கூறுவார்கள்.
  • இப்படித் தொடர் அழுத்தங்கள், பிரச்சாரங்கள் மூலம் இந்தியாவின் பிற மாநில மக்களின், பிற தேசிய இனங்களின் ஆதரவைப் பெற்று மத்திய அரசின் போக்கை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும்.
  • அதே போன்று உலகளவில் அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகளை, அறிவார்ந்தவர்களைச் சந்தித்து, புலிகள் மீதான தடை, இனப்படுகொலை விசாரணை, பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட பலவற்றையும் எடுத்துரைத்து நீதியைப் பெற்றுத் தருவோம்.

தனித் தமிழீழ பொதுவுடமைக் குடியரசு பேரறிவிப்பு

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் பெருமக்கள், அறிஞர்கள், துறைசார் வல்லுனர்கள், அந்தந்த நாட்டு பிரதிநிதிகள். பிற மொழித் தேசிய இனத் தலைவர்கள், பிற மாநிலத்தில் உள்ள கல்வியாளர்கள், தலைவர்கள் மாந்தநேய பற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட அனைவரையும் அழைத்து தமிழ்ப் பெருங்குடி மக்களை பல இலட்சக்கணக்கில் திரட்டி மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டில் தமிழ்த் தேசிய இனத்திற்கென்று பரந்து விரிந்து கிடக்கின்ற இந்தப் பூமிப்பந்தில் ஒரு தேசம் அது தனித் தமிழீழ பொதுவுடமை குடியரசே என்று நாம் தமிழர் அரசு பேரறிவிப்பு செய்யும்.

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

நாம் தமிழர் அரசுக்கு உயர்ந்த நோக்கங்கள் பல இருப்பினும் மிக உயரிய உயிரான கொள்கை தமிழ்த்தேசிய இன மக்களுக்கென இந்தப் பூமிப் பந்தில் ஒரு நாடு அடைவதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். இதில் 60ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி எமது அன்னைத் தமிழ்ச் சமூகம் இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து வீட்டை இழந்து நாட்டை இழந்து பல்வேறு நாடுகளில் பரவி வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகள் பன்னாட்டு அரசியலாக மாற்றி நிறுத்தியிருக்கிற தனித் தமிழீழச் சோசியலிசக் குடியரசை அடைவதே இறுதி இலக்காக வைத்திருக்கும். இன்று, இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற புனிதக் கனவோடு நாம் தமிழர் அரசு ஒவ்வொரு அடியும் மிகக்கவனமாக எடுத்துவைத்து வெல்லும்.

தொடக்கத்தில் எதையும் வீண்முயற்சி என்பார்கள்;
வென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள்!
– பிடல் காஸ்ட்ரோ

 

முந்தைய செய்திசுற்றறிக்கை: தொகுதிவாரியாக கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியல் கோருதல் தொடர்பாக
அடுத்த செய்திதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு