இயற்கை வேளாண்மை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

449

இயற்கை வேளாண்மை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்.
– பெரும்புலவர் பாரதி

ஒரு நாட்டில் ஓர் உழவன் ஏழையாக இருக்கிறான் என்றால் அந்த நாடே ஏழை நாடாகத்தான் கணக்கில் எடுக்கப்படும். வேளாண்மையைக் கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சை எடுக்கின்றன.

 • இன்று ஒரு உழவர் தற்கொலை செய்துகொண்டு சாகின்றான் என்றால் அது செய்தி. நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகின்றோம் என்பதற்கான முன் அறிவிப்பு.
 • எந்தத் தொழிற்சாலையும் அரிசியையும், பருப்பையும், காய்கறியையும் உற்பத்தி செய்வதில்லை. அவை நிலத்தில்தான் விளைந்தாக வேண்டும்.
 • விளைநிலங்களில் எல்லாம் தொழிற்சாலைகளைத் தொடங்கிவிட்டால், தொழிற்சாலை வேலை தரும், சம்பளம் தரும், சாப்பாட்டைத் தருவது யார்?
 • கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் தெரியும் இவர்களுக்குப் பணத்தைச் சாப்பிட முடியாது என்று.
 • பசி வந்தால் மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில் முயற்சி, காமம் என்ற பத்து உயர் குணங்களும் பறந்துபோகும் என்றார் எங்கள் ஔவைப் பெரும்பாட்டி.

நஞ்சைக் கொண்டு வந்த பசுமைப் புரட்சி:

உணவுப் பஞ்சம் என்ற காரணத்தைக்கூறி நவீன வேளாண்மை என்று ‘பசுமைப் புரட்சித்’ திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய நச்சுத் தன்மை கொண்ட வெடிமருந்துகளின் (நாப்தா) மூலக்கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சி மருந்துகளையும் உரங்களையும் கொண்டு வந்தார்கள்.

 • செயற்கை இரசாயன உரங்களால் நம் மண்வளம் அழிந்துபோனது. தமிழகத்தின் விளைநிலங்கள் வளமிழந்திருக்கிறது என்பதை மாநில மத்திய அரசுகளின் அறிக்கைகளே உறுதிப்படுத்திக் கூறியிருக்கின்றன.
 • எந்த நாடுகள் நமக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களையும் அனுப்புகின்றனவோ, அந்த நாடுகளே இங்கு விளையும் உணவுப் பொருட்களை வாங்குவதில்லை.
 • இதனால் வேளாண்குடி மக்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்குச் சர்வதேச விலை இல்லை. அங்கீகாரம் இல்லை. இரசாயன உரங்கள் பயன்படுத்தியதால் புதிய புதிய நோய்களும் தோன்றியபடி இருக்கின்றன.
 • கேரள மாநிலத்தில் எண்டோசல்பன் என்ற இசாயனத்தைப் பயிர்களுக்கு அதிகம் பயன்படுத்தியதால் நரம்பியல் தொடர்பான நோய்கள் பெருமளவில் தோன்றிப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பல சான்றுகளைக் கூறலாம்.

தற்போதுள்ள வேளாண் நிலம்:

தமிழகத்தில் தற்போது மொத்த வேளாண் நிலப்பரப்பு 75,20,687 எக்டேர். மொத்த நிலப்பரப்பில் இது 57.7 விழுக்காடு

 • வேளாண்மை செய்ய இடம் இருந்தும் நிலையாகக்- கடந்த பல ஆண்டுகளாகப் பயிர்செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிலப்பரப்பு 26,45,509 எக்டேர் ஆகும்.
 • வேளாண்மை நடக்கும் மொத்த நிலப்பரப்பு சுமார் 6,032,718 எக்டேர். இதில் நாற்பது விழுக்காடுதான் நெல், கரும்பு விளையும் நஞ்சை நிலம். மீதம் அறுபது விழுக்காடு மானாவாரி நிலம். தற்போது உணவுப் பயிரைவிடப் பணப்பயிர்தான் அதிகம் பயிரிடப்படுகிறது. இது உணவுத் தட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும்.
 • இதுவரையிலும் இருந்த ஆட்சியாளர்கள் வேளாண்குடிகளின் மண்வளத்தைப் பற்றி அக்கறைப் படவில்லை, அதை மீட்பதற்கானத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
 • ஆற்றுமணல் கொள்ளையால் ஆற்றுநீர் வற்றிப்போனது. ஏரி, கண்மாய் ஆக்கிரமிப்புகளால் அந்த நீராதாரமும் அழிந்துபோனது. இருக்கின்ற நீர் நிலைகளுக்கான புதிய நீர்வரத்துப் பாதைகளை அமைக்காததால் நீர்க் கொள்ளளவும் குறைந்துபோனது. இதனால், வேளாண் தொழில் கைவிடப்பட்ட தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது.

செயற்கை இரசாயன உரங்களால் நம் மண்வளம் அழிந்துபோனது; தமிழகத்தின் விளைநிலங்கள் வளமிழந்திருக்கிறது என்பதை மாநில மத்திய அரசுகளின் அறிக்கைகளே உறுதிப்படுத்திக் கூறியிருக்கின்றன

இயற்கை வேளாண்மை: (இரசாயன உரங்கள் இல்லாமல்)

இரசாயன வேளாண்மையை முற்றிலுமாகத் தடை செய்து, இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதே நமது அரசின் முதல் கடமை.

 • தமிழகத்தில் நம் பரம்பரை நெல் வகைகள் ஒரு இலட்சம் வரை இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பத்தாயிரம் ஆண்டுகளாக நாம் அரிசி உணவுகளை உட்கொண்டு வந்திருக்கின்றோம். அவை அனைத்துமே நமக்கு நோய் தீர்க்கும்- நோய் வராமல் தடுக்கும் நெல் வகைகளாகவே இருந்தது.
 • ‘பசுமைப் புரட்சி’ என்ற சுரண்டல் திட்டம் கடந்த அறுபதாண்டுகளில் நம் பரம்பரை நெல் வகைகளையும் வேளாண் முறையையும் சிறிது சிறிதாக விழுங்கிவிட்டது. பூச்சி மருந்துகளின் உதவியோடு விளையக்கூடிய ஒட்டு வகை, ஐ.ஆர். நெல்வகைகள் உட்படப் பல விதைகளையும் கொடுத்துப் பரம்பரை விதைகளை அழித்து விட்டார்கள்.
 • நமது நெல் வகைகள் எல்லாம் குறைந்தது மூன்றடிக்கு மேல்தான் இருந்தது. ’அடி காட்டிற்கு, நடு மாட்டிற்கு, நுனி வீட்டிற்கு’ என்ற பழமொழியே உண்டு. கதிர்கள் எல்லாம் வீட்டிற்கும், நடுவில் உள்ள பகுதி மாட்டிற்கு வைக்கோலாகவும், அடியில் உள்ள பகுதி கழனிக்கே உரமாகவும் இருந்து வந்தது. இந்தப் பயிர்கள் வெள்ளத்தையும் வறட்சியையும் தாங்கிக்கொள்ளும் வகைகளாக இருந்தன.
 • பசுமைப் புரட்சி என்று கொண்டு வந்த நவீன குட்டை வகை நெற்பயிற்களுக்கெல்லாம் நிறைய தண்ணீர் தேவைப்பட்டது. வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. தவிர மாட்டுக்குத் தேவையான வைக்கோல் தீவனத்தையும் அளிக்க முடியாமல் போனது. அதனால் மாட்டு இனமும் அழியத்தொடங்கியது.
 • ஒவ்வொரு விளைச்சலிலும் இருந்தே நாம் விதைகளை எடுத்து வந்தோம்.அடுத்தடுத்த பருவத்திற்குப் பயன்படுத்தினோம். ஆனால் பசுமைப் புரட்சி செய்த மோசடியால் நாம் விதைகளைக் கைவிட்டோம். ஒவ்வொரு முறையும் பன்னாட்டு நிறுவனங்கள் திணித்த புதிய விதைகளை விலைகொடுத்து வாங்கி வருகிறோம்.பரம்பரை விதைப் பாதுகாப்புகளைக் கைவிட்டோம்.
 • ஐயா வேளாண் பெருங்குடியோன் நம்மாழ்வார் அவர்களின் முயற்சியோடு பல தன்னார்வ உழவர்கள் காணாமல்போன நம் பரம்பரை நெல்வகைகளில் ஏறத்தாழ 126 நெல் வகைகளை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
 • கைவிரச்சம்பா உள்ளிட்ட 126 நெல் வகைகளும் நமது தமிழ்த்தேசிய நெல் வகைகளாக அறிவிக்கப்படும். மேலும் மறைக்கப்பட்ட பரம்பரை நெல் வகைகளை மீட்பதற்கான முழுமுயற்சி எடுக்கப்படும்.
 • பரம்பரை நெல் விதை வகைகளைப் பயிரிடுவோர்க்கு அரசுத் தரப்பில் அனைத்துச் சலுகைகளும் வழங்கி அவர்களுக்கான உதவித் தொகையும் கொடுக்கும். தேசிய நெல் வகைகள் அனைத்தும் இயற்கை வேளாண் முறையிலேயே விளைவிப்பதற்கான அனைத்து உதவி-நடவடிக்கைகளையும் செயல்படுத்துவோம்.
 • ஐந்தாண்டுக் காலத்திற்குள்ளாகப் பூச்சிக்கொல்லி மருந்துகள் முற்றுமாகத் தடைசெய்யப்படும். இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக இயற்கை வழியிலான பூச்சிகளை விரட்டும் மருந்துகளையும், இயற்கை உரங்களையும் உருவாக்கி வேளாண்குடிகளுக்கு வழங்கப்படும்.
 • வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.