அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
நாம் தமிழர் அரசு அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் ஆகிவற்றினை உயிர் மூச்சாகக் கொண்டு இலட்சிய அரசாகச் செயல்படும். நாங்கள் வீட்டினைப் புதுப்பித்து வெள்ளையடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்லர், வீட்டையே இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டவந்த புரட்சியாளர்கள் என்பதை மக்களுக்கு நாம் தமிழர் அரசு பெருமிதத்தோடு பறை சாற்றுகிறது.
பெண்களுக்குத் தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. தேர்தலில் ஒரு அரசியல் கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தினால் மற்ற கட்சிகளும் பெண் வேட்பாளரை நிறுத்துவதில்லை. மூன்று ஆண் வேட்பாளர்கள் நடுவில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமாகி விடுகிறது. இது பெண்களுக்கான உரிமையாக இல்லை. அதனால் பெண்களுக்கு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தனித்தொகுதி அதாவது ஆதித் தமிழ்க் குடிகளுக்கு இருப்பதைப் போன்று தனித் தொகுதியைப் போராடிப் பெறப்படும். இதனால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பிரதிநிதித்துவம் கூடும்.
மூன்று சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றம்
30 கோடி மக்கள் தொகை இருந்த போது 543 பாராளுமன்றத் தொகுதியாக பிரிக்கப்பட்டது. இப்போது 120 கோடி மக்கள் தொகை இருக்கும் போதும் அதே 543 பாராளுமன்றத் தொகுதியாக இருப்பதை ஏற்க முடியாது. அதில் சரியான பிரதிநிதிதத்துவம் இருக்காது. அதனால் 6 சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பதை மாற்றி 3 சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றத் தொகுதி கேட்டு, மாற்றம் கொண்டு வரப் போராடுவோம்.
முதல் குடிமகன்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராக இருக்கிறார். மக்களாட்சித் தத்துவத்தின்படி அரசு அமைக்கப்படுவதாகக் கூறப்படும் சனநாயக நாட்டில், மக்களால் நேரிடையாக தங்களது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது. மக்களே தங்கள் நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அரசியலமைப்பு மாற்றம் செய்ய நாம் தமிழர் அரசு பாடுபடும்.
மாநிலங்களவை
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படாத மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்நாட்டையே ஆளுகின்ற மத்திய மந்திரிகளாக வருவது மக்களாட்சி மாண்பிற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத எவரும் மக்களை ஆட்சி செய்கிற, அதிகாரம் செலுத்துகிற பொறுப்புகளில் வர உரிமையில்லை. அதனால் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ‘அதிகாரம்’ அளிக்கப்படுவதை நாம் தமிழர் அரசு எதிர்க்கிறது.
மக்கள் ஒதுக்கும் தலைவர்கள்
ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் மத்திய மந்திரிகள், தங்கள் சொந்த மாநிலத் தேர்தலில் தோற்று போவோமோ என மக்களைச் சந்திக்க முடியாமல் வேறு மாநிலத்தின் மூலம் மாநிலங்களவை, உறுப்பினர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மக்கள்
சனநாயகத்திற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத குடியரசுத் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவதும் சேர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கலைத்துவிட முடியும் என்ற அதிகாரத்தைப் பெற்றிருப்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது.
செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்
“இந்தச் சபையானது நம்மில் பலர் விரும்பி வந்தது போல அமைந்தது அன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் காரணமாக இந்தச்சபை இவ்வாறு அமைந்து விட்டது. இந்தச்சபை உருவாக்கப்படுவதில் ஆங்கிலேருக்கும் ஒரு பங்கு இருந்தது. இந்தச் சபையை உருவாக்குவதற்கு அவர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்து விட்டார்கள். எனவே இந்த வரம்புக்குள் நின்று நாம் செயல்பட வேண்டி நேரிட்டுவிட்டது என்பதேயாகும்.”
-ஜவர்கலால்நேரு. (13-12-1946 (Indian constitutional documents Vol II, Page 110)
கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை
இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டம் தன் முகப்புரையை ”இந்திய மக்களாகிய நாம்” என்று தொடங்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுகிற காலத்தில் இந்நிலத்தில் வாழ்ந்த 30 கோடிமக்களின் கருத்துகளையும், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்துகளையும், பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சட்டம் தயாரிக்கப்படவில்லை.
மாற்றியமைக்க வேண்டும்
எனவே தற்போது இருக்கிற தேசிய இனங்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலைப்புச் சட்டத்தைத் தற்கால அரசியல், சமூக, சூழல்களுக்கு உலக ஒழுங்கிற்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்க வேண்டியது தேவையாய் இருக்கிறது.
மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி
இப்போது நடைமுறையில் உள்ள இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவிலேயே உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 7 ஆவது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகிற முறையில் மத்திய அரசு 97 இனங்களில் (Division) சட்டமியற்றும் அதிகாரத்தினையும் மாநில அரசு 66 இனங்களில் சட்டமியற்றும் அதிகாரத்தினையும் பெற்றிருக்கிறது
மாநில அரசுக்கு அதிகாரம்
பொதுப் பட்டியலில் மத்திய- மாநில அரசுகள் சேர்ந்து 47 இனங்களில் சட்டம் இயற்றுகிற முறை இருக்கின்றது. இது மத்தியில் ஒற்றையாட்சி முறையையும், ஏதேச்சிகாரக் குவிப்பினையும் உறுதி செய்கிறது. எனவே நாம் தமிழர் ஆட்சியில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான இனங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டு என்கிற வகையில் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப் பாடுபடும்
தொடர்வண்டி நிர்வாகம்
மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர் வண்டி நிர்வாகத் துறையினை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலைப்புச் சட்டமாற்றம் மூலம் கையகப்படுத்தும்.
மத்திய அரசிற்கு இராணுவம், நாணயம், உள்ளூர்த் தொடர்வண்டி நீங்கலாக மாநிலங்களுக்கிடையேலான பயணிக்கிற தொடர்வண்டி, மாநில அரசின் ஒப்புதலோடு கூடிய வெளியுறவுத்துறை போன்ற துறைகளைத் தவிர மற்ற அனைத்து இனங்களிலும் சட்டமியற்றி, நடைமுறைப் படுத்துகிற உரிமை மாநில அரசிற்கே உண்டு என்கிற நிலையை உரிய சட்டமாற்றங்கள் மூலம் ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்.
நீதி மேலாண்மை
- ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்தி வைக்கிற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலைப்பு முறைமையில் அதிகமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக மீத்தேன், கெயில், கூடங்குளம், 7 தமிழர் விடுதலை போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு மாநில அரசின் உணர்விற்கு எதிராக இருக்கிறது. இந்நிலையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையைக் குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்.
மாநில நீதிமன்றத்தின் அதிகாரம்
இன்று நடைமுறையில் உள்ள நீதிமன்றச் செயல்பாட்டு முறையில் உச்ச நீதிமன்றத்தின் மேலாண்மை அதிகமாக உள்ளது. இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசுகளுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு போதுமானது.
மற்றபடி அந்தந்த மாநிலங்களுக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநிலங்களின் தலைமை நீதிமன்றங்களே உச்ச அதிகாரம் பெற்ற நீதிமன்றங்களாகச் செயல்பட இந்திய அரசியலமைப்பில் உரியமாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு வலியுறுத்தும்.
- பல்வேறு மாநிலங்களுக்குள் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகள் குறித்துப் பிற மாநிலங்களில் இருந்து வருகிற தலைமை நீதியரசர்களுக்குப் போதிய மண்-மொழி குறித்த அனுபவம் இருக்க வாய்ப்பில்லை. இதனால் பலசிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே அந்தந்த மாநில அரசின் தலைமை நீதிபதியாக, அந்தந்த மண்ணின் மைந்தர்களையே நியமிக்கும் வகையிலான சட்ட மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்.
தமிழர்களுக்கு முன்னுரிமை
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூக, பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை என்பது, வகுப்புவாரி முன்னுரிமை(communal G.O) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும். அம்முறையில் சமூகநீதி உரிமையான இடஒதுக்கீட்டு முறையை முன்நிறுத்தி, தன் சுயலாப நோக்கத்திற்காக பூர்வீகத் தமிழ்க்குடிகளுக்கிடையே சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கித் திராவிடக் கட்சிகள் இதுவரை அரசியல் இலாபம் அடைந்து வருகின்றன.
- நாம் தமிழர் அரசானது இம்முறையை அறவே ஒழித்துத் தமிழ்க் குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழன மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ, அதே முன்னுரிமை பிறமொழி வழித்தேசிய இன மக்களுக்குத் தமிழ் நாட்டில் வழங்கப்படும்.
வரி விதிப்பில் உரிய மாற்றங்கள்
தற்போது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனைவரி சுங்கவரி, கலால்வரி, பருவவரி போன்ற பல்வகை வரிகளை மத்திய-மாநிலஅரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன.
இம் முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவரப் பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்.
- இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்தத் தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்கிற உரிமையைப் பெற நாம் தமிழர் அரசு பாடுபடும்.
தமிழே நீதிமன்ற மொழி – வழக்காடு மொழி
நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ சொந்தமானவையல்ல. இவர்களுக்கும் மேலான கோடானகோடி மக்களுக்குரியவை. உலகின் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில் தான் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றன. அந்நிய மொழியில் எந்தநாட்டு நீதிமன்றங்களும் நடை பெறவில்லை. எனவே உயர்நீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றம் வரை மாநிலத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் தாய் மொழியான தமிழை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை நாம் தமிழர் அரசு உடனடியாக எடுக்கும்.
வாக்குச் செலுத்துதல் கட்டாயக் கடமை
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் சராசரியாக 60 விழுக்காட்டிற்கு மேலாக வாக்குப்பதிவு நடப்பதில்லை என்பது சமூக அவலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குச் செலுத்துதல் என்பது உரிமையன்று. அது கட்டாயக் கடமை. தற்போது இருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தலை நமது அரசு எதிர்க்கின்றது. இந்த இயந்திர முறையைக் கண்டுப்பிடித்த அமெரிக்காவே கைவிட்டுவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாறிவிட்டது.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை
வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் வாழ்கின்ற அனைத்துத் தமிழ்க்குடி மக்களுக்கும் அஞ்சல் வழியில் வாக்களிக்கும் உரிமை பெற்றுத் தரப்படும்.
தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை
தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாவட்ட நீதிமன்ற அதிகாரம் கொண்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும். உரிய நீதிபதிகளின் எண்ணிக்கை கொண்டுவரப்படும். காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடம் சமூகநீதிக் கொள்கைகள் அடிப்படையில் நிரப்பப்படும்.
வாக்கு பதிவிற்குச் சான்று
கள்ள ஓட்டுப் பதிவினைத் தடுக்க, வாக்களித்த பிறகு வாக்காளருக்குச் சான்று வழங்க வேண்டும் என நமது அரசு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தும். தற்போது வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்பட்டு வருகிறது. ஆனால் நாம் தமிழர் அரசு தேர்தல்களில் வாக்களித்த சான்றை மட்டுமே அடையாள ஆவணமாக எடுத்துக் கொள்ளும். இந்தச் சான்று வைத்திருக்கும் குடிமக்களுக்குத்தான் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்ற அனைத்து விதமான உரிமைகளும் சலுகைகளும் வழங்கும். இதன் மூலம் வாக்குச்செலுத்துதல் கட்டாயக் கடமையாக்கப்படும். இதற்கான உரிய அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பிறமாநில அரசுகளை இணைத்துக் கொண்டு போராடி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
தமிழில் படிவங்கள்
கீழ் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும் அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய
ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்படும்.
இளம் வழக்கறிஞர்கள்
சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை உரிமையியல், குற்றவியல் வழக்குகள், காவல் நிலைய
பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டம் தொடர்பான உதவிகள் செய்வதற்குச் சட்ட உதவி
மையம் அமைக்கப்படும். இச்சேவைகளில் சட்டக்கல்வி முடித்த இளம் வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்
படுவார்கள். இந்தச் சமூகச் சேவை சட்டக்கல்வி முடிக்கின்ற இளம்வழக்கறிஞர்கள் அனைவருக்கும்
கட்டாயமாக்கப்படும்.
ஐந்தாயிரம் ஊக்கத்தொகை
சட்டக்கல்வி முடிக்கின்ற அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
- நீண்ட காலமாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கத் தற்காலிக நீதிமன்றங்கள் மாநிலம் முழுக்க பரவலாக ஏற்படுத்தப்படும்.
குறுஞ்செய்தியில் தகவல்
மாநிலம் முழுக்க இருக்கின்ற நீதிமன்றங்களில் இணையதள வசதி உடனடியாக ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை நிர்வகிக்கத் தகவல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
- வழக்கின் விசாரணைத் தேதிகள் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கைப்பேசிக் குறுஞ் செய்தி மூலமாகத் தெரிவிக்கப்படும்.