முத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா.
துபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன்று மிகவும் சீறும்,சிறப்புடனும் நடைபெற்ற விழாவுக்கு முத்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. மோகன் தலைமை தாங்கினார், அதன் செயலாளர் திரு.ஷா அவர்கள் வரவேற்று பேசினார்கள்.
முத்தமிழ் சங்கம் பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செந்தமிழர் பாசறை சார்பாக நமது உறவுகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளையும் விழாவின் ஒருங்கிணைப்பையும், பாதுகாப்பு அம்சங்களையும் சீரும் சிறப்புமாக செய்து கொடுத்தனர்.
அந்த வகையில் நமக்கு கையளிக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் முதன்மையாக கயிறு இழுத்தல் போட்டியை சிறப்பாக நடத்தி அதில் செந்தமிழர் பாசறை உறவுகளே வெற்றியும் பெற்றனர் என்பது சிறப்புக்குரியதாகும், மேலும் அதைத் தொடர்ந்து உறியடித்தல் நிகழ்வும் நடைபெற்றது அதில் பல உறவுகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி தன்னார்வமாக கலந்து கொண்ட உறவு வெற்றியும் பெற்றார். இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உறவுகளுக்கு பரிசுகளை செந்தமிழ் பாசறை சார்பாக வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தோம்.
பொங்கல் விழாவின் தொடக்கமாக திரைப்பட கானா பாடல் புகழ் கானா பாலா அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது வந்திருந்த பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தந்தது.
விழா கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டார்கள், மேலும் அமரர் ஏபிஜே.அப்துல் கலாமின், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாசறை சார்பாக பூங்கொத்துகளை அமீரக ஒருங்கிணைப்பாளர் திரு.திருமாறன் மற்றும் திரு.சிவா சேகரை அவர்கள் கொடுத்து கவுரவித்தார்கள்.
முத்தமிழ் சங்கம் சார்பாக நமது பாசறையின் ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டினை பாராட்டி பரிசுகளை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
பொங்கல் விழாவானது மாலை 2 மணிக்கு தொடங்கி இரவு 10:30 மணி வரை ஏறத்தாழ 1500 உறவுகள் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான பொங்கல் விழாவாக அமைந்தது, அதில் பாசறையை சார்ந்தவர்களை அழைத்து பங்களிப்பு செய்து விழா நடைபெற அனைத்து பொறுப்புக்களையும் வழங்கிய முத்தமிழ் சங்கத்திற்கு நமது பாசறை சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாக தெரிவித்து, அழைப்பை ஏற்று கலந்துகொண்ட உறவுகளுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.