பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு – சீமான் புகழாரம்

380

க.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு- சீமான்

மாபெரும் தமிழறிஞரும், தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒருவருமான பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய இழப்பு தமிழ்த் தேசிய இன வரலாற்றில் எதனாலும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடியில் 1941 ஆம் வருடம் பிறந்த ஐயா அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகவும் , இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளராகவும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மன்றத்தின் பெருமைமிக்க வாழ்நாள் உறுப்பினராகவும் திகழ்ந்தவர். பல்கலைக்கழகங்களை சார்ந்த உயரிய பதவிகளில் அமர்ந்து பெருமை சேர்த்த அவர் தமிழ் மொழியின் செழுமைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தன் வாழ்நாள் முழுக்க உழைத்தவர்.

தமிழின வரலாறு, மானுடவியல் கல்வியியல், சமூகவியல் போன்ற பல்வேறு தளங்களில் புகழ் வாய்ந்த 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர். அவருடைய தொல்காப்பியக் களஞ்சியம்,ஈழ விடுதலையை குறித்த தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு உள்ளிட்ட பல நூல்கள் தமிழினத்தின் மேன்மைக்காக அவர் அளித்த மாபெரும் வரலாற்றுக் கொடை.

அவருடைய தமிழன் அடிமையானது ஏன் , எவ்வாறு..?, தமிழர்கள் மேல் நடந்த பண்பாட்டு படையெடுப்புகள் ஆகிய நூல்களை என் வாழ்நாள் பாடங்களாக கருதி அன்றாடம் நான் வாசித்து வருகிறேன். தன் வாழ்நாளில் தமிழினம் முன்னேற எழுதியும் உழைத்தும் வந்திருக்கிற அவர் தமிழ் முறைப்படி பல இளைஞர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்து மாபெரும் முன்னோடியாக திகழ்ந்தார்.

பேராசிரியராக, பதிப்பாசிரியராக ,வரலாற்று ஆய்வாளராக, இதழாசிரியராக, கருத்தாளராக தமிழினத்தின் தத்துவ நெறியாளராக என பல்வேறு துறைகளில் ஐயா அறவாணன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு தனி முத்திரை பதித்தவர். அவர் எழுதிய பல நூல்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளும், மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நூல் ஆசிரியருக்கான விருதுகளும் கிடைத்தன. 1986 வருடம் சிறந்த ஆசிரியருக்கான கல்வியியல் விருது ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தன் வாழ்நாள் முழுக்க தமிழினத்தின் உயர்விற்காக உழைத்த மதிப்பிற்குரிய ஐயா அறவாணன் அவர்கள் தமிழ் தேசிய இன வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறத்தக்க ஆகச் சிறந்த ஆளுமையாக திகழ்வார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழின அறிவுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த பெருந்தமிழர் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் ,
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு