தமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

1241

தமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

இயற்கை எனது நண்பன்!
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்!
வரலாறு எனது வழிகாட்டி!

– மேதகு வே.பிரபாகரன்

ஐம்பெரும் ஆற்றல்..

 • சூரியப் பெருநெருப்பு வெடித்துச் சிதறிய துண்டுகளில் ஒன்றுதான் இந்தப் பூமி என்கிறது பூகோள அறிவியல். அப்படித் தோன்றிய பூமியின் உயிரியல் பரிணாமத்தின் இறுதிப் புள்ளியாக மனித இனம் இன்று நிற்கிறது. விண், மண், நீர், காற்று, நெருப்பு ஆகிய ஐம்பெரும் ஆற்றல் இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் தோன்ற முடியாது. அதனால்தான் ஆதித்தமிழினம் ஐம்பெரும் ஆற்றலான இயற்கையை (பஞ்சபூதங்களை) வழிபட்டு வந்திருக்கிறது. உலகத் தமிழினம், இயற்கையைப் போற்றும் உழவர் திருநாளான பொங்கலைத் தனது தேசியத் திருநாளாகக் கொண்டாடுகிறது.
 • அறிவியியல் – நாகரீகமற்ற முதல் குடிமகன் தனது உயிரை இயற்கை, கொடிய விலங்குகள், நச்சுப்பாம்புகள், நோய் இவைகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளப் போராடினான். காட்டுத்தீ, சூறைக்காற்று மழை, காட்டு வெள்ளம் என்று இயற்கைச் சீற்றங்களைக் கண்டு பயந்தான். அந்த அச்சத்தால் இயற்கையை வணங்கத் தொடங்கினான். மறுபுறம் இயற்கையை நம்பினான். இந்த நம்பிக்கையின் வடிகாலாய்த் தோன்றியதே தமிழர் வழிபாட்டு மெய்யியல்.

இயற்கை வழிபாடு மூத்தோர் தெய்வங்கள்…

 • ஆதித்தமிழ் இனமக்கள் தமக்காகவே போரிட்டுத் தம்மைக் காக்க இறந்துபோன மனிதர்களையும் தெய்வமாக வணங்கினார்கள். இப்படித்தான் இயற்கையையும், முன்னோர்களையும் வணங்கும் பழக்கம் ஆதித் தமிழர்களிடம் இருந்தது. சிந்துசமவெளி வழிபாட்டு முறைகள் அனைத்தும் பறைசாற்றுவது, முன்னோர்களைப் போற்றும் நடுகல் வழிபாட்டைத் தமிழர் மரபியல் என்பதைத்தான். சமீபத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள வடிவங்களில் இப்படியான தெய்வ வழிபாட்டுக் குறிப்புகள் இருப்பதாக தொல்லியியல் ஆய்வுகள் சொல்கிறது.
 • மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கிய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் தமிழர் அறம் சார்ந்த மெய்யியல் ஒழுகலாறு என்பது தொடக்கத்தில் இயற்கையாகவும் பிறகு அந்த இயற்கையின் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றிய மனிதர்களைப் போற்றுவதிலும் இருந்து தமிழர் மெய்யியல் மரபு வழிபாடு வந்தது.

ஐந்திணைத் தெய்வ வழிபாடு…

 • குறிஞ்சி நிலத்தின் இறையோனாகச் சேயோன் (முருகன்), முல்லை நிலத்தின் இறையோனாக மாயோன் (கண்ணன்) மருதம் நிலத்தின் இறையோனாக இந்திரன், நெய்தல் நிலத்தின் இறையோனாக வருணன், பாலை நிலத்தின் இறைவியாகக் கொற்றவை என ஐந்திணை நிலத்திற்கும் தனித்தனி இறையோனாக நாம் தமிழர் அரசு ஏற்று அறிவிக்கின்றது. முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாளை அரசுவிடுமுறையாக அறிவித்து “திருமுருகன் பெருவிழாவாகத்” தமிழகம் முழுமைக்கும் கொண்டாட அரசாணை பிறப்பிக்கும்.

மெய்யியல் தலைநகரம்

 • தமிழரின் தொன்ம வரலாறு என்பது கடலினுள்ளே மூழ்கிக் கிடக்கும் லெமூரியாக்கண்டத்தின் (குமரிக்கண்டம்) தொடக்கம் என்பதை அடுத்த தலைமுறைக்கு நினைவு கூற வேண்டும். ஆதித்தமிழனத்தின் கூறுகளாகப் பிரிந்த ஈழத் தமிழினத்தின் இனவிடுதலைக் களத்தில் களப்பலியான மாவீரத் தெய்வங்களின் நினைவைப்போற்றுவதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழர் தொன்மங்கள் மரபு சார்ந்த கலைகள், வரலாறுகள், வீரம், போர், வேளாண்முறை எல்லாம் எப்படி இருந்தது என்பதை அடுத்து தலைமுறையினருக்குக் கடத்த வேண்டும். உலகுக்கும் கூற வேண்டும். அதற்காகக் குமரிக்கண்டத்தின் நீட்சியாக விளங்கும் கன்னியாக்குமரியில் நாம் தமிழர் அரசு, ‘தமிழர் கோயில்’ கட்டமைக்கும். 1000 ஏக்கர் பரப்பளவில் தங்கும் விடுதி வசதிகளோடு கலையரங்கக் கூடங்களோடு சிறந்த சுற்றுலாத் தலமாக நிறுவப்படும்.

அன்னை காந்தாரிக்குக் கோயில்

 

 • கோவில்பட்டிக்கு மிக அருகில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் தமிழர் நிலத்தின் பெருமைக்குரிய மூதாதை காந்தாரி அம்மன் கோவில் இருக்கிறது. கடந்த 32 வருடங்களாக அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் சென்று வணங்க விடாமல் நாயக்கர் காலத்தில் வந்து அமர்ந்த மக்கள் தடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் அரசு அந்த அவலத்தை நீக்கி, எந்தவித இனமோதலுக்கும் இடமளிக்காமல் பிரச்சனையைத் தீர்க்கும். அன்னை காந்தாரிக்கு அரசின் நேரடிப் பார்வையில் கோவில்கட்டித் தரப்படும்.

தமிழர் அறநிலையத்துறை

 • தமிழர் மரபு வழி வழிபாட்டு முறையாக, நன்றி நவில்தல் தொடக்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும் இயற்கையையும் மட்டுமே வணங்கிவந்துள்ளது. பழந்தமிழ் நூல்களிலோ, தமிழர் வரலாற்றுச் சுவடுகளிலோ “இந்து” என்ற சொல் இல்லை. எனவே இந்து என்ற சொல்லும், இந்து என்ற மதமும் தமிழருடையது அல்ல. தமிழகக் கோவில்களை நிர்வாகிக்கும் துறையின் பெயரான “இந்து சமய அறநிலையத்துறை” என்பதற்குப் பதிலாக “தமிழர் அறநிலையத்துறை” என்ற பெயர் மாற்றம் செய்யப்படும்.

பூசாரிகளுக்கு(அர்ச்சகர்) அரசு வேலை

 • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை உடனே நிறைவேற்றும். அர்ச்சகர் தொழிலைத் தமிழர் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அரசு வேலையாக மாற்றுவோம். மற்றைய அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்படுவதைப் போல் அர்ச்சகர் வேலையிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ் வழிபாடு

 • தமிழகக் கோயில்களில், உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் இறைவனைத் துதிக்க முடியவில்லை. கோவில்களில் “தமிழிலும் அர்ச்சனை செய்யலாம்” என்ற சொல்லை நீக்கிவிட்டு “இங்குச் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று எழுதப்படும். தமிழ் வழிபாடு கொண்டு வரப்படும்.

கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஊதியம்

 • தமிழ் நாட்டின் மண்வரலாறு, பழந்தமிழ் வீரம் இவைகளோடு கூடிய கிராமக் கோவில்கள் அனைத்தும், சிறுகச் சிறுகத் தமிழ்ப் பூசாரிகளிடம் இருந்து வேதம் – ஆகமம் என்ற பெயர்களில் சமற்கிருதத்தின் கைகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையைத் தடுக்க வேண்டும்.
 • கிராமங்களில் இருக்கும் அனைத்துக் குல தெய்வ கோயில்களையும் நிர்வகிக்கும் உரிமை இதுவரை நிர்வகித்துவந்த கிராமப் பூசாரிகளுக்கே உரியது என்று நாம் தமிழர் அரசு அறிவிக்கும்.
 • கிராமப் பூசாரிகளுக்கான மாத ஊதியம், ‘தமிழர் அறநிலையத்துறை’ மூலமாகவே வழங்கப்படும். ஏற்கனவே பணிசெய்து வயதுமுதிர்ந்த கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.

கோயில் சீரமைப்பில் கட்டுப்பாடு

 • கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டடக் கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், பழமை கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுகச் சிறுக ஆளும் ஆரிய-திராவிட அதிகார வர்க்கத்தினரால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோயில் மற்றும் கல்வெட்டுச் சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்துப் பழைய புராதான சின்னங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும். முறையான அனுமதியின்றி, தேவையின்றி மாற்றம் செய்யக்கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்படும்.

பழனிக் கோயில் உரிமை

 • ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் உள்விவகார நிர்வாகத்தைப் போகர் வழி வந்த புலிப்பாணிச் சித்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில், புலிப்பாணிச் சித்தர்களுக்கு அந்தப் பொறுப்புள்ளது எனத் தீர்ப்பை அளித்தது. 30 வருடப் போராட்டத்திற்குப் பிறகு பெற்ற தீர்ப்பை நாம் தமிழர் அரசு உடனே நிறைவேற்றும்.

வழிபாட்டுக் கட்டண நீக்கம்

 • தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் தற்போதைய நிலையில் உள்ள பொருளாதார வருவாய்களை ஒருநிலைப்படுத்தி அவை தமிழர் அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். தெய்வ வழிபாட்டிற்கான தரிசனத்திற்கான கட்டணங்கள் நீக்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறையே நடைமுறைப் படுத்தப்படும்.

கண்ணகிக் கோயிலுக்குத் தனிப்பாதை

 • அறம் காத்து மறம் வீழ்த்திய மானத்தமிழ்மறத்தி முப்பாத்தாள் கண்ணகியின் கோயில் இன்று கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்து கிடக்கிறது. அந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும், தமிழக அரசு அந்தப் பாதையை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாகச் செல்லும் பாதையில் கேரளா வனச்சரகக் காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
 • நாம் தமிழர் அரசு கண்ணகிக்குத் தனி கோட்டம் அமைத்துத் தமிழக வனப்பகுதி வழியாக உள்ள பாதையை அமைத்துத் தரும். மேலும் பெரும்பாட்டி கண்ணகியின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முழுநிலவு நாளில் கண்ணகி கோவிலை நோக்கி பெரும் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பைத் தரும். அரசு விழாவாகவும் அறிவிக்கும்.

உயர்ந்த குணங்களே கடவுள்

 • கடவுள் என்பது பொய் சொல்லாது. ஏமாற்றாது. துன்பத்தில் காப்பாற்றும், நம்மைச் சாகவிடாமல் காப்பாற்றும், பசிக்குச் சோறு போடும், துன்பம் என்றால் தாங்கிப் பிடிக்கும். எப்படியும் வந்து உதவியாய் நிற்கும் என்ற உயர்ந்த குணங்களைத்தான் நம் மக்கள் கடவுளாக உருவப்படுத்திப் பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கையை அனைத்தும் ஆளுகின்ற அரசுகளால் செய்ய முடியும். இறை என்றால் அரசு. இறைவன் என்றால் அரசன் என்ற பொருளும் இருக்கிறது.

உயர்ந்த மெய்யியல்

 • தெய்வம் என்பது இங்கு எப்படிப் பார்க்கப்படுகிறது என்றால், ஒரு மனிதனை மிகச் சிறந்தவன், நல்லவன், மிகவும் நல்லவன் மிக மிக நல்லவன் என்பதற்கு மேலும் வார்த்தைகள் இல்லாததால், ’நீ தெய்வமப்பா’. என்பார்கள். இப்படித்தான் நம் மக்கள் தெய்வத்தை அடையாளப் படுத்தி வந்தார்கள். அதைத்தான் நமது தமிழ்மறை,

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.” என்று (குறள்-50) கூறுகிறது.

பிரபாகரன் வழிபாடு என்பது,

“அவன் வழியே பாடுபடு! அவன் வழியே பயணப்படு! அவன் வழியே செயல்படு!” என்பதுதான்.

இன்னும் சொல்வதென்றால்,

“பிரபாகரன் இருந்தால் எங்கள் தலைவன்; இறந்தால் எங்கள் இறைவன்!” – இது தான் எங்கள் மெய்யியல் கோட்பாடு.