சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சதிச்செயல்களை முறியடிப்போம்! – சீமான்

117

சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சதிச்செயல்களை முறியடிப்போம். – சீமான்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களின் சைவச் சமயக் கருத்தியல் பரவலையும், அதுதொடர்பான ஆய்வுகளையும் முடக்கும் நோக்கோடு அவரை அச்சுறுத்தி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்து என்கிற கோட்பாட்டுக்கும், தமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவதே காவிப் பயங்கரவாதிகளின் இத்தகைய போக்குக் காரணமாகும். இதனால், தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவரைப் பணியைவிட்டு நீக்கம் செய்யவும், பணியினைத் தொடரவிடாது இடையூறு செய்யவுமானச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்துவத்தின் கோர முகத்தையும், அதன் போலித்தனத்தையும் முற்றுமுழுதாகத் துகிலுரித்து மக்களிடையே கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டதற்காகக் காவிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேசு போன்றவர்கள் எத்தகைய அச்சுறுத்தலையும், அடக்குமுறைகளையும் சந்தித்தனரோ அதற்கு நிகரான ஒரு கொடும் எதிர்வினையை நல்லூர் சரவணன் அவர்களும் சந்தித்து வருகிறார் என்பதிலிருந்து இச்சிக்கலின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

முனைவர் ஆ.பத்மாவாதி அவர்கள் எழுதிய, ‘மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்’ என்கிற நூல்வெளியீட்டு விழாவில், ஆரியத்திற்கெதிரான மாணிக்கவாசகரின் கருத்துக்களை மேற்கோள்காட்டிப் பேசியதற்காக முனைவர் நல்லூர் சரவணன் அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுமட்டுமல்லாது அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஒரு சனநாயக நாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கே இத்தகைய நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருக்கிறதென்றால் கருத்துச்சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதனை உணர்ந்து அதற்கெதிராகச் சனநாயக ஆற்றல்கள் அணிதிரள வேண்டியது அவசியமாகிறது. கல்வியாளர்களை அச்சுறுத்துவதும், கல்வி நிறுவனங்களைக் காவிப்படுத்த முயல்வதுமானக் கொடுஞ்செயல்களை எதிர்த்து கருத்தியல்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் சமரசமின்றிச் சமர் செய்து அதனை வீழ்த்தி முடிக்கும் எனச் சூளுரைக்கிறேன்.

ஆகவே, இத்தருணத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும் எனவும், காவிப்பயங்கரவாதிகளின் மதத்துவேச நடவடிக்கைகளையும், சதிச்செயல்களையும் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.

முந்தைய செய்தி‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 2ம் ஆண்டு நினைவேந்தல் – ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான்
அடுத்த செய்திஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு