சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்!’ என்கிற உயரிய முழக்கத்தை முன்னிறுத்தி மரக்கன்றுகள் நடுதல், உழவாரப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் இயற்கை குறித்தானப் பரப்புரைகளை மேற்கொள்ளுதல் எனத் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தும் அரிய பெரும்பணியினைச் செய்து வருகிறது.
நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறைப் பணிகளுக்கு முத்தாய்ப்பு சேர்க்கும் விதமாக வருகிற செப்டம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனைவிதைகளை நடுதல்’ என்கிற பெருந்திட்டம் தமிழகம் முழுக்க ஒரே நாளன்று முன்னெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனையொட்டி, தமிழகம் முழுக்க இருக்கிற சுற்றுச்சூழல் பாசறையினர் அதற்கான முன்னெடுப்புகளையும், ஆயத்தப்பணிகளையும் இப்போதிலிருந்து தொடங்க வேண்டியது பெரும் அவசியமாகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் கொடுக்கப்பட்டிருக்கிற ‘பலகோடி பனைத்திட்டத்தின்‘ முன்னோட்டமாக செயல்படுத்தப்பட இருக்கிற இத்திட்டத்திற்கெனப் பனை விதைகளைச் சேகரித்தல், இடங்களைத் தேர்வுசெய்தல், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல் என தேவையான முன்னெடுப்புகளைச் செய்ய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். ஆகவே, ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல்’ என்கிற திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினருக்கு கட்சியின் அனைத்து உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையோடு கோருகிறோம்.
மேலும் தகவல்களுக்கு,
வச்ரவேல் – 89406 16969
வெண்ணிலா – 98843 23380
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி