கொச்சியில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

59

கொச்சியில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கொச்சியில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேரள மாநிலம், கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓசியானிக் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் கடந்த 7ஆம் தேதி கொச்சி அருகேயுள்ள முனம்பம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் விசைப்படகின் மீது கப்பல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டு மூன்று மீனவர்கள் உயிரிழந்தனர். இரு மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப் படகுகளில் வந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மீதம் 9 மீனவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலுமில்லை. அவர்கள் காணாமல் போய் மூன்று நாட்களுக்கு மேலாவதால் அவர்கள் குடும்பத்தினர் பெருந்துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூவரும் உள்ளடக்கம் என்பது பெரும் கொடுமையாகும்.

எனவே, இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரிதமாகச் செயல்பட்டு காணாமல் போன 9 மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டுமெனவும், காயம்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்குத் தலா ஒரு இலட்ச ரூபாயும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்ச ரூபாயும் இழப்பீடு தர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்