டி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

24

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்களது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடறிந்த அரசியல் தலைவராக இருக்கிற தினகரன் அவர்களின் வீட்டிலேயே சர்வ சாதாரணமாகப் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறதென்றால் சாதாரணக் குடிமக்களுக்கு இந்நாட்டில் என்ன பாதுகாப்பிருக்கும் என்று எழும் கேள்வி பெரும் கலக்கத்தைத் தருகிறது. அண்மைக்காலங்களில் பெட்ரோல் குண்டு, மண்ணெண்ணெய் குண்டு வீசுவது போன்ற சமூகக் குற்றங்கள் பெருமளவில் பெருகி வருவது சமூக நலனுக்குப் பெரும் ஊறு விளைவிப்பதாகும். இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.

இக்குண்டு வீச்சால் தினகரனின் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்படக் கலைஞர் டார்வின், தானி ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் படுகாயமடைந்திருப்பது பெரும் மனவேதனையை உண்டாக்குகிறது. அவர்கள் முழுமையான உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும் என எனது உளமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இக்கொடிய சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் படுபாதகச் செயல் – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி