‘உலா’ வாடகை மகிழுந்து சேவை நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளுடனான சந்திப்பு – ‘டிராபிக்’ இராமசாமி வாழ்த்து

114

‘உலா’ வாடகை மகிழுந்து சேவை நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளுடனான சந்திப்பு – ‘டிராபிக்’ இராமசாமி வாழ்த்து

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் ஓட்டுநர் சேர்க்கைக்கு, சென்னை ஓட்டுநர்களிடம் பெரும்வரவேற்பு கிடைத்துள்ளது. ஓட்டுநரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட மற்றும் மக்களுக்கு நேரடி குறைந்த கட்டண சேவையை உருவாக்கிடும் நோக்கில் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை ஒருங்கிணைத்த கருத்துரையாடல் சந்திப்பில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஐயா ‘டிராபிக்’ இராமசாமி ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
நமது ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை, ஓட்டுநர்களுக்கு எந்தவித தரகுமுறை (Brokerage), சேவை இலக்கு (Daily Target) போன்றவை தவிர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வாடகை மகிழுந்து, தானி ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான நேரடி கட்டண நிர்ணயம் செய்யப்படுவதால் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில் பயணம் செய்யலாம். நெருக்கடி நேரக் கட்டணம் (PEAK TIME CHARGE), இரத்து செய்தலுக்கான கட்டணம் (CANCELATION FEE) மற்றும் இதர மறைமுகக் கட்டணங்கள் இல்லை. நேரடியாக மக்கள் பயணக் கட்டணத்தை ஓட்டுநரிடமே செலுத்தலாம்.
‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கு முழு ஆதரவு தெரிவித்து சந்திப்பைத் தொடங்கிவைத்த ஐயா ‘டிராபிக்’ இராமசாமி அவர்கள் பேசுகையில், “அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமை மற்றும் சாலை விதிகள் மீதான ஓட்டுநர் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். மேலும் ‘உலா’ மகிழுந்து சேவையின் அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கான புகார் எண்கள் வழங்கவேண்டும், அதன்மூலம் பயனாளிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மாற்று முயற்சியான ‘உலா’ மகிழுந்து சேவைக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் உண்டு.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்..
அடுத்ததாகப் பேசிய சி.ஐ.டி.யூ (CITU) மாநிலத் தலைவர் திரு.குப்புசாமி அவர்கள், சி.ஐ.டி.யூ எப்போதும் தொழிலாளிகளின் நலனுக்காகச் செயல்படும் சங்கம்; ‘உலா’ மகிழுந்து சேவை மூலம் உழைப்பவர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதால் ‘உலா’-வின் சேவைக்கு சி.ஐ.டி.யூ தோளோடு தோள் நிற்கும். அனைத்து ஓட்டுநர்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் சி.ஐ.டி.யூ துணை நிற்கும்” என்றும் உறுதியளித்தார்.
இச்சந்திப்பை முன்னெடுத்து நடத்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. களஞ்சியம் சிவக்குமார் அவர்கள், இன்றைய காலக்கட்டத்தில் ஓட்டுநர்கள் படும் இன்னல்கள் குறித்தும் அதைச் சரி செய்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான தேவை குறித்தும் அதற்கான வழிமுறைகளைப் பற்றியும் விளக்கமாகப் பேசினார்.
உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத் தலைவர் திரு.சுடர்வேந்தன், தமிழ்நாடு மோட்டார் சங்கத் தலைவர் திரு.சக்திவேல் மற்றும் செயலாளர் திரு.சேகர், தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் திரு.இராமானுஜம், துணைத் தலைவர் திரு.கண்ணன், செயலாளர் திரு.சரவணன், அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை தொழிற்சங்கத் தலைவர் திரு.மு.இராமகிருஷ்ணன், செயலாளர் திரு.பழனி மற்றும் ஆலோசகர் திரு.விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்று ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை பற்றிய தங்களது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்ததோடு முழு ஆதரவையும் வரவேற்பையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை முதற்கட்டமாக சென்னையில் விரைவில் தொடங்கவிருக்கிறது.
உங்கள் வாகனத்தை ‘உலா’வில் இணைக்க, பின்வரும் பகிரி (Whatsapp) எண்களைத் தொடர்பு கொள்ளவும். +91 79046 10698, +91 95146 06608
மேலும் விவரங்களுக்கு: www.ulacabs.orgதலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி