தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சீமான் கண்டனம்

275

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் இன்றிரவு (10-06-2018) தாக்குதலுக்கு உள்ளானார். இரவு 9 மணியளவில், தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக உழவன் தொடர்வண்டியில் ஏறுவதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசனின் இரு சக்கர ஊர்தியில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

தஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இன்னொரு இரு சக்கர ஊர்தியில் எதிர்திசையில் இடதுபுறம் வந்த, பின்னால் அமர்ந்திருந்தவன் ஐயா அவர்களின் இடது கையை இழுத்து கீழே தள்ளிவிட்டான். அதில், கீழே விழுந்த ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு, இடது முழங்காலில் கடுமையான காயமும் வலது கையிலும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டன.

கைப்பையையோ வேறு பொருளையோ திருடுவதற்காக வந்ததுபோல் இது தெரியவில்லை. திட்டமிட்டு அவர் கையை இழுத்து கீழே விழுகிற வரையிலும் பார்த்துவிட்டு, அந்த இருவரும் தொடர்வண்டி நிலையத் திசையில் சென்று விட்டனர்.

எனவே ஐயா பெ.மணியரசன் அவர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்டத் தாக்குதலாகத் தெரிகிறது.

இதுகுறித்து தஞ்சை தெற்கு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர், உடனடியாக விசாரித்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்!

தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திட்டமிட்டத் தாக்குதலாகத்தான் தெரிகிறது என்றாலும், ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! எனவே, உறவுகள் யாரும் பதட்டப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்: tamizhdesiyam.com

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் தமிழ்த்தேசிய அரசியலின் அறிவாசான் ஐயா பெ.மணியரசன் தாக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. ஐயாவை தாக்கியவர்கள் யாராயினும் காவல்துறை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று குறிபிட்டுள்ளார்.