மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை

420

கட்சி செய்திகள்: மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி

மே 18, இனப் படுகொலை நாள். நம் தாய்நிலம் தமிழீழத்தின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம், திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு, முடிந்துவிட்டது என்று நம் பரம்பரை பகைவர் கொண்டாடிய நாள். சிங்கள இனவெறியும் உலகின் இருபது நாடுகளின் சதியும் இணைந்து நம் இனச் சொந்தங்களைக் கொன்று குவித்த கரும்புகை சூழ்ந்த கருப்பு நாள். அறமும் வீரமும் அன்பும் நெறியெனக் கொண்டு உலகம் தழுவி நேசித்து வாழ்ந்தக் கூட்டம்; நம் கண்ணீர் துடைக்க, கதறல் கேட்க, நம் காயம் ஆற்ற, உலகில் யாருமில்லை என்பதை உணர்ந்த நாள்.

இனி அவ்வளவு தான் தமிழர்கள் என்று நம் இனப் பகைவர் எண்ணிச் சிரித்த நாள். மானத் தமிழினம் இதை மறந்து போவதா? வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! என்ற இன எழுச்சி முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று 18-05-2018 மாலை 4 மணியளவில் சென்னை, பெருங்குடியில் உள்ள YMCA திடலில் மாபெரும் எழுச்சியாக நடைபெற்றது.

பறையிசை ஆட்டத்துடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்தில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த நமது குருதி உறவுகளுக்கு வீரவணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌனமாக நினைவேந்தல் செய்யப்பட்டது. பின்னர் நாம் தமிழர் கொடிப்பாடல் இசைக்க நாம் தமிழர் கட்சிக் கொடியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுப் பண் இசைக்க தமிழர் நாட்டுக் கொடியை இயக்குநர் பாரதிராஜா ஏற்றிவைத்தார்.

இப்பொதுக்கூட்டத்திற்கு காஞ்சி கிழக்கு மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் செ.இராசன் தலைமையேற்றார். காஞ்சி கிழக்கு மாவட்டச் ச.மைக்கேல் முன்னிலை வகித்தார். காஞ்சி பொறுப்பாளர்கள் நாகநாதன், வெங்கடேசன், சஞ்சீவிநாதன், திருமலை, எல்லாளன் யூசுப், சீனிவாசக்குமார், குரலினியன், நீதி, சேது, போன்சேகர், கிரிராஜ், த.சுரேஷ்குமார், சாலமன், மகேந்திரன், இராயப்பன், இரவிக்குமார், முருகன், இராஜன், செந்தில்குமார், பாலசிங், மு.ரா.செல்வம், சிவசுப்பிரமணி, குமார், ஞானமூர்த்தி, சூசைராஜ், கேசவன், மணிமாறன், குருசாமி, தேசிங், பெருமாள், குணாஇளஞ்சேகர், இராஜேந்திரபிரசாத், ஞானம், சரத்ராஜ், போஸ்கோ, மோகன்ராஜ், குணசேகரன் ஆகியோர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், அ.வியனரசு, ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், அறிவுச்செலவன், ஜெகதீசப்பாண்டியன், துரைமுருகன், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, சீதாலட்சுமி, குயிலி நாச்சியார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் சுடலை, இடும்பாவனம் கார்த்திக், மழலையர் பாசறை தமிழ் அமிழ்து உள்ளிட்டோர் உரையாற்றினார்.

மேலும் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சி பேருரையாற்றினார்.

மே 18, இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறைவேற்றும் தீர்மானங்கள்.

தீர்மானம் 1:
உலக நாடுகளின் துணையோடு சிங்களப் பேரினவாதமும், இந்திய வல்லாதிக்கமும் கூட்டுசேர்ந்து ஈழ நிலத்தில் திட்டமிட்டு நிகழ்த்திய கோர இனப்படுகொலையின் மூலம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் உலகமெங்கும் வாழும் தமிழர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் இவ்வினப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 60 ஆண்டுகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும்பொருட்டு இனத்துவேச இலங்கை அரசின் மீது ஒரு தலையீடற்ற பன்னாட்டு விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். 60 ஆண்டுகளாகத் தமிழர்கள் மீது சிறுக சிறுக நிகழ்த்தப்பட்டு மொத்தமாய்க் கொன்று முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்பாக விளைவாக ஆறாத இரணத்தோடு தமிழர்கள் நிற்கிற வேளையில் இனியும் சிங்களர்களோடு ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருங்கனவாக இருக்கிற தனித்தமிழீழ நாட்டை நிறுவுவதே இரு தேசிய இனங்களுக்குமே பாதுகாப்பானதாக இருக்க முடியும். எனவே, ஈழ நிலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அந்நாட்டைப் பெற்றுத் தர வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி சர்வதேசச்சமூகத்திற்குக் கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் 2:
அரை நூற்றாண்டு கால இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சொந்த நிலத்தை விட்டு வெளியேறி, அகதிகளாய் இந்திய மண்ணில் குடியேறி இருபது ஆண்டுக் காலத்திற்கு மேலாக வாழ்கின்ற ஈழ மக்களின் வாழ்க்கைத் தரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களின் இந்திய குடியுரிமை மற்றும் திருமண உறவுகள் போன்ற சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு மத்திய அரசி இதுவரை செவி சாய்க்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப்படுகிறது. இதனை உடனடியாக மாநில அரசு சரி செய்ய வேண்டுமெனவும், சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் செயல்படும் சித்திரவதை முகாம்களை உடனடியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துவதோடு, பன்னாட்டு அகதிகள் சட்டத்தில் உடனடியாக இந்திய அரசு கையெழுத்திட வேண்டுமெனவும் இப்பொதுக்கூட்டம் வலியுறுத்திக் கொள்கிறது.

தீர்மானம் 3:
பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், பொருளாதார மாறுபாடுகளையும், நிலவியல் வேறுபாடுகளையும் கொண்டிருக்கிற இந்நாட்டில் கொண்டு ஒற்றைத்தேர்வு முறையான நீட் தேர்வினைக் கொண்டு வந்திருப்பது இந்திய நாட்டின் சனநாயக மரபுகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் முற்றிலும் முரணானது. நவீனக் குலக்கல்வித் திட்டமான இந்நீட் தேர்வைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறவேளையில் நீட் தேர்வினைத் தமிழகத்திற்குள் புகுத்தியதோடு மட்டுமல்லாது நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்துத் தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரும் அலைக்கழிப்புக்குள்ளும், மன நெருக்கடிக்குள்ளும், பொருளாதாரச் சிரமங்களுக்குத் தள்ளி, தமிழர்களின் உயிர்களையும் காவுகொண்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரத்திமிரையும், சர்வாதிகாரப்போக்கையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனத் தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:
இந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சியை நிறுவ முற்படும் மத்தியில் ஆளுகிற பாஜக அரசானது அதற்கான வழிமுறையாக ஆளுநர்களைத் தன்வசப்படுத்தி அதிகார அத்துமீறல்களிலும், சட்ட முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிற சனநாயகத் துரோகமாகும். மக்களால் தேர்வுசெய்யப்படாது, நியமனத்தின் மூலமே அதிகாரத்திற்கு வரும் ஆளுநர் பதவியின் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சிக்கு இடையூறும், குந்தகமும் விளைவிக்க முடியும் என்பது மக்களாட்சியை மறுதலிக்கும் மாபாதகமாகும். ஆகவே, எவ்வித மக்கள் பணியும் வரையறை செய்யப்படாத ஆளுநர் பதவியானது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திற்கும் தேவையற்றது எனவும், அப்பதவியினை அகற்றம் செய்யக்கோரும் சட்டப்போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி பேரறிவிப்புச் செய்கிறது.

தீர்மானம் 5:
வளர்ச்சி வேலை வாய்ப்பு என்கின்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருக்கும் கூடங்குள அணு உலை, நுட்ரினோ ஆய்வு மையம், ஹைட்ரோகார்பன் எடுப்பு, சாகர்மாலா, தூத்துக்குடி Sterlite காப்பர் ஆலை, சென்னை சேலம் எட்டு வழி பசுமைச் சாலை, சேலம் விமான நிலையம் விரிவாக்கம் போன்ற நாசகரத் திட்டங்களை எதிர்த்து அங்கு வாழ்கின்ற மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டங்களைப் பாராட்டுவதோடு, களத்தில் அவர்களோடு நின்று, மேற்கண்ட திட்டங்கள் கை விடப்படும் வரை நாம் தமிழர் கட்சி மக்களோடு போராடும் எனவும் இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 6:
மண், நீர்நிலை, மலை, வனம், விளைநிலங்கள், விலங்கினங்கள் – இவையாவும் உள்ளடக்கிய அரசியலே மனிதத்திற்கானது. வளங்களைச் சுரண்டி வளமாய்ப் போன அரசியல் அமைப்புகளின் மாண்பு கண்டு தெளிந்துள்ள நிலையில், அழிந்து போன, அழித்துக் கொண்டிருக்கின்ற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, நீராதாரங்களைப் பாதுகாத்தல், நீர் நிலைகளைப் பராமரித்தல், நீர் தேக்கங்கள் உருவாக்குதல், வன மீட்பு, பனை நாடு மற்றும் வனம் செய்தல், மலை மீட்பு மற்றும் பாதுகாத்தல், மேலும் இயற்கைக்குச் சீர்கேடாய் அமைந்துள்ள நெகிழி பயன்பாட்டைக் குறைக்க விழிப்புணர்வோடு நெகிழி மறுசுழற்சி பயிற்சி அளித்தல் என இயற்கையையும் அதன் வளங்களையும் உயிர்ப்பிக்கும் போர் படையாய் முன்னெடுப்புகள் நடத்தப்படுமென்று இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 7:
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களாகிய நம்மால் உருவாக்கப்பட்டது, நமக்காக உருவாக்கப்பட்டது, என்று முகப்புரையில் ஆரம்பித்தாலும் எதார்த்த நிலையில் அச்சட்டம் பெரும்பான்மை நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே, தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு, எல்லா மொழி வழி தேசிய இனங்களுக்கும் உரிமை கொடுக்கும் வகையில், அனைத்து மொழி வழி தேசிய இன மக்களும் ஒன்றுபட்டு, மாநில தன்னாட்சி உரிமை கொண்ட, உண்மையான மதச் சார்பற்ற கூட்டாட்சி தத்துவத்தினை நிலைநாட்டும் ஒரு அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கி, தற்போது உள்ள சட்டத்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். புதிதாக ஒரு நிர்ணய சபையினை அமைத்து அச்சட்டம் அடியோடு மாற்றி எழுதப்பட வேண்டுமெனவும், தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்ளது போல் தமிழ்நாட்டிற்குத் தகுந்த தனி அரசமைப்புச் சட்டம் வேண்டுமெனவும் இப்பொதுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 8:
ஒரு தேசிய இனத்தின் மக்களை அவ்வினத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளுகை செய்து அதிகாரம் செலுத்துவதென்பது ஒரு இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையாகும். அந்தவகையில், தமிழர் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் உரிமை முழக்கமானது மிக மிகத் தார்மீகமானது. நியாயமானது. அவ்வுரிமைக்குப் பங்கம் விளைந்ததன் விளைவே தமிழ்த்தேசிய இனத்தின் பல்வேறு உரிமை இழப்புகளுக்கும், இன அழிப்புக்கும் பெரும் காரணமாக அமைந்தது. எனவே, இவ்வரலாற்றுப்பாடத்தைத் தெளிவுறக் கற்றுத் தேர்ந்திருக்கிற தமிழர்கள் தங்கள் நிலத்தை ஆளுகிற மரபுரிமைக்காக அரசியல் களத்தில் போர்செய்வோம் எனவும், இதற்கெதிராக எவர் நின்றாலும் தமிழர் நிலத்தில் தன்மானப்போர் வெடிக்கும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாகப் பேரறிவிப்புச் செய்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமே பதினெட்டு – மாபெரும் படைகட்டு! – சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திஅறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தொழில்நுட்பப் பாசறை