விவசாயிகள் நலன் காக்க கர்நாடக தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கன்னட சகோதரன் தர்சன் புட்டனையாவிற்கு ஆதரவு – சீமான் அறிவிப்பு

12

விவசாயிகள் நலன் காக்க கர்நாடக தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கன்னட சகோதரன் தர்சன் புட்டனையாவிற்கு ஆதரவு – சீமான்

கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெருமதிப்பிற்குரிய மறைந்த KS புட்டனையா அவர்கள் தமிழகக் கர்நாடக நதி நீர் உரிமை சிக்கலைப்பற்றித் தெளிந்த சிந்தனை கொண்டவராக, தமிழகத்து விவசாயச் சங்கங்களோடு சுமூகமான உறவை பேணி, தமிழர்களுக்கான காவிரி நீதி உரிமையை ஆதரித்துக் கர்நாடக விவசாயிகளிடையேயும் மக்கள் மன்றத்திலும் பேசிவந்தவர். இந்திய விவசாயிகளின் தகவல் களஞ்சியமாக வாழ்ந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் புட்டனையா அவர்கள் மறைந்த பொழுது தமிழகத்திற்காகக் கர்நாடகாவிலிருந்து வந்த ஆதரவு குரலை இழந்துவிட்டதாகப் பெரும் வருத்தமும் வலியும் ஏற்பட்டது.

இந்நிலையில் பெருமதிப்பிற்குரிய புட்டனையா அவர்களின் மகன் மரியாதைக்குரிய தர்சன் புட்டனையா அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் இங்கே எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்றறிந்து அமெரிக்காவில் தான் பார்த்த பெரும் பதவியை உதறித்தள்ளி தந்தையில் வழியில் விவசாயிகளுக்காக மாண்டியா மாவட்டத்தில் மேலுகோட்டை தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். தந்தையைப் போலவே முற்போக்குச் சிந்தனை கொண்ட தனயனும் காவிரி நதிநீர் உரிமை சிக்கலில் தன் சரியான அறிவுப்பூர்வமான நிரந்தரத் தீர்வுக்கான நிலைப்பாட்டைத் தெரிவித்திருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டேன்.

விவசாயிகளின் ஆதரவை பெற்று, தங்களைத் தனி மதமாக்க கோரும் வீரசைவ லிங்காயத்து மக்களின் ஆதரவை பெற்று மேலுகோட்டை தொகுதியில் போட்டியிடும் அன்புச்சகோதரன் தர்சன் புட்டனையாவிற்கு எனது முழு ஆதரவையும் வழங்கி அவரை ஆதரித்துக் கர்நாடக நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அவரின் வெற்றிக்குத் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கும் போராட்டத்திலும், லிங்காயத்துகளைத் தனிமதமாக அறிவிக்கக்கோரும் போராட்டத்திலும் என்றென்றைக்கும் நாம் தமிழர் கட்சி உற்ற துணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

மண்ணையும் மக்களையும் நேசித்து மாற்றத்தை உருவாக்க கொள்கை உறுதிகொண்டு தேர்தல் களத்தில் தனி ஒருவனாக நெஞ்சுறுதியோடு நிற்கும் எனதன்பு சகோதரன் தர்சன் புட்டனையா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.