மே 18, வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்! : சீமான் பேரழைப்பு

107

மே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்! : சீமான் பேரழைப்பு | நாம் தமிழர் கட்சி

மே 18, இனப்படுகொலை நாள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலக வரலாற்றில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள் ஏராளமுண்டு. ஆனால், இதுவரை நடந்திராத இனப்படுகொலையைச் சிங்கள அரசு தனது அரசதிகாரத்தின் மூலமாகக் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவேற்றி தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை உலக வல்லாதிக்கத்தின் துணையோடு அழித்து முடித்தது. ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதில் பெருங்காயமாகத் தேங்கிவிட்ட ஈழத்தின் அழிவு இன்னும் வடுக்களாக, வலிகளாக மிஞ்சி உலகத் தமிழினத்தை ஆழ்ந்தக் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தி வீழ்த்திப் போட்டிருக்கிறது. நம் கைக்கெட்டிய தொலைவில் இருக்கிற ஈழத்தீவில் நடந்த தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நம் கண்முன்னாலேயே அழித்துச் சிதைத்து முடிக்கப்பட்டதன் துயர் ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் பெரும் கனலாக எரிந்து கொண்டிருக்கிறது.

10 ஆண்டுகள் கடந்தாலும் நினைக்க நினைக்கத் தோல்வியின் வலி நம்மை வருத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த மே மாதத்தில்தான் 2009ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான தமிழர்கள் தாயக விடுதலைப்போரில் மாண்டார்கள். சிங்களப் பேரினவாத அரசாங்கம் உலக வல்லாதிக்க நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரை அழித்து முடித்தார்கள். ஏறக்குறைய 10 கோடித் தமிழர்கள் தங்களது தாய் நாடென இந்தியாவினைக் கருதி வாக்குச்செலுத்தி வரிசெலுத்தி வாழ்ந்த வருகின்ற சூழலில் இந்தியப் பெருந்தேசத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத கரங்களில் தமிழர்கள் சிக்குண்டு கொல்லப்பட்டு உலகமெங்கும் ஏதிலிகளாக, நாடற்ற அனாதைகளாகத் துரத்தி அடிக்கப்பட்ட வரலாறு எதன்பொருட்டும் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது.
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கையளவுக்குக்கூடச் சொந்த நாடில்லை என்பது தமிழரின் இறையாண்மை உணர்விற்கு எதிரானதாகும். அப்படி உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அழிக்கின்ற அளவுக்கு என்ன பயங்கரவாத கோரிக்கையினைத் தமிழர்கள் முன்வைத்தார்கள்? இப்பூமிப்பந்தில் வாழுகின்ற எல்லா மனிதர்களையும் போலச் சகலவிதமான உரிமைகளோடு வசிக்க, வாழ ஒரு நாடுதான் கேட்டார்கள். சிங்கள அரசப் பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டுத் தமிழர்கள் தங்களது வாழ்க்கையினை ஒரு அடிமை தேசிய இனமாகத்தான் கடத்த வேண்டுமா என்கின்ற உலக மானுடத்தின் முன்னால் வைக்கப்படும் வினாவிற்கு இதுநாள்வரை விடையில்லை.

தனது உதிரச் சகோதரிகள் நிர்வாணமாக ஈழத்து வீதிகளில் சிங்களக் காடையர்களால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் குருதி வடிய கொலைசெய்யப்பட்டு வீழ்ந்தநொடிகளில் அவர்களது ஆழ்மனம் நம்மைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய தவிப்பின் வலி தமிழன் ஒவ்வொருவரின் உயிருக்குள்ளும் விடுதலைதாகமாய் மிஞ்சிக் கிடக்கிறது. எந்த இனமும் அடையக்கூடாத இழிவு தனது சொந்தங்களின் வன்புணர்வு செய்யப்பட்ட உடலை நேரடியாகக் கண்டுவிட்ட வலி தமிழ்த்தேசிய இளைஞனின் கண்களுக்குள் வன்மமாய் மிஞ்சிக் கிடக்கிறது. பால்மனம் பாறாத பச்சிளம் பாலகன் எங்களது மகன் பாலச்சந்திரனின் வெறித்த பார்வையும், உயிரற்ற அவனது பிஞ்சு உடலும் எதன்பொருட்டும் மறைக்கவே முடியா துயர் கனவாய் தமிழர்தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது.

மானத்தமிழினம் இதனை மறந்து போகலாமா? அன்னைத் தமிழினம் இதனைக் கடந்து போகலாமா? என்கிற கேள்விகளோடு ஒவ்வொரு வருடத்தின் மே மாதமும் எங்களது உளமனச்சான்றை உலுக்கிக் கேள்வியெழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் தாயாராக விளங்கிய அன்னையார் பார்வதி அம்மாள் தனது இறுதிக்காலத்தில் மருத்துவத் தேவைக்காகத் தாயகத்தமிழகத்தின் உதவியை எதிர்நோக்கி நின்றபோதிலும்கூட அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட தமிழர் விரோதக் கட்சிகளின் ஈனத்தனமான அரசியலால் தனது சொந்தத் தாயையே காப்பாற்ற வக்கில்லாமல் தலைகுனிந்து நின்றதை எக்காலத்திலும் மறக்க முடியாது. கூப்பிடு தூரத்தில் 8 கோடித் தமிழர்கள் வாழ்ந்தபோதிலும் எவ்வித ஆதரவுமற்று ஈழ உறவுகள் அழிந்துபோனது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாத பெருங்கொடுமை.
சொந்தச் சகோதரர்கள் சாதல் கண்டும் சிந்தனையிரங்காமல் தான் யாரென அறிவற்று இனமான பெருமைகளை மறந்துவிட்டு இனத்தின் அழிவை சகித்து வாழ்ந்த இழி இனமாக எஞ்சியதைத் தவிரத் தாயகத்தமிழினம் சாதித்தது ஒன்றுமில்லை. அடிமை இருள் வாழ்வில் தொலைந்த அன்னைத் தமிழினத்திற்குள்ளும் விடுதலைக்கான வெளிச்சப்பொறிகள் உண்டென வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் நிரூபித்துக் காட்டிய பிறகும்கூட இனியும் உலகத்தமிழினம் நாம் தமிழர் என உணர்ந்து ஒரே குடையின் கீழ் திரளாமல் போனால் இனம் காக்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் ஆன்மாவிற்குச் செய்கிற பெருந்துரோகமாகும். இனப்படுகொலை நடந்து இன்னும் 10 ஆண்டுகள்கூடக் கடக்காத சூழலில் இதனை வரலாற்றுத் துயரம் எனக் கருதி வெறுமனே கடந்துவிட முடியாது. பொது வாக்கெடுப்பின் மூலமாக ஈழத்தாயகம் விடுதலைபெறும் வரை ஒவ்வொரு தமிழனின் உரிமை முழக்கக்குரலும் உலகத்து வீதிகளில் உரத்து ஒழிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில், இணையப் பெருவெளிகளில் பங்கேற்று பணியாற்றுகிற தமிழின இளையோர் தன்னினத்தின் இழிநிலை அறிந்து விடுதலை காண ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வரலாற்றுக்கடமை.

எனது அன்பான உறவுகளே!

மே 18.. தாயக விடுதலை கனவிற்கான இலட்சோப இலட்சம் தமிழர்கள் தங்களது உயிர் மூச்சைக் காற்றில் கரைத்துத் தியாகம் செய்த இனத்தின் எழுச்சிக்காக வித்திட்ட நாள். நமது கடைசி மூச்சு இருக்கும்வரை இந்நாளை இன மீட்சிக்கான நாளாகக் கருதி ஈழ நிலத்தின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய வேண்டும். முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட நமது விடுதலைப்போராட்டம் இன்று உலகம் முழுக்கப் புலிக்கொடியேந்தி பற்றிப் பரவியிருக்கிறது. நமது தொப்புள்கொடி உறவுகள் தாய் மண்ணின் விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்.

நம்மினம் அழிந்தத் துயர் தீர கைகோர்த்து நிற்போம்!
அடிமைக் களங்கத்தை நமது உரிமை முழக்கங்களால் முடிப்போம்!

வென்றே தீரும் தமிழர்களின் ஈழம்!
மாவீரர்கள் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅவசர அறிவிப்பு: இன எழுச்சிப் பொதுக்கூட்டப் களப்பணியாற்ற திரண்டு வாருங்கள்
அடுத்த செய்திமே பதினெட்டு – மாபெரும் படைகட்டு! – சீமான் பேரழைப்பு