நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை

52

06-04-2018 நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி https://www.youtube.com/watch?v=gXlwc0WBW9k

காரைக்கால் மார்க் (MARG) தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதால் மக்கள் பலவேறு நோய்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக பல தளங்களில் போராடி வருகின்றன. ஆனால் இதுவரை எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை; நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் இப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவருகிறது.

ஒருங்கிணைந்த நிலக்கரி இறக்குமதி எதிர்ப்புக்குழு சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 6, வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.

காரைக்காலில் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி கையாளப்படுவதனால் நாகூர், பனங்குடி, வாஞ்சூர், பட்டினச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மார்க் துறைமுகத்தில் நிலக்கரியை முற்றிலுமாய் தடைசெய்ய வேண்டும் என்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.

மேலும், புதுவை அரசின் சுற்றுச் சூழல் துறையும், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதற்கான அனுமதியை நீட்டிக்கக் கூடாது என்றும் இக்கோரிக்கைக்குத் தமிழக அரசும் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ` காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்யவேண்டும், இல்லையென்றால் அடுத்தகட்டமாக கடல்வழி போராட்டம் நடத்துவோம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் எங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதைப் பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதே இல்லை. மக்களுக்காகத்தான் அரசு என்பதை புரிந்துகொள்ளவுமில்லை’ என்றார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், ” காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போகப்போவது வேடிக்கையாக இருக்கு. தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் ஆட்சிக்குவந்தால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா. தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுங்கள். ஆனால், விவசாயிகளின் வயிற்றில் விளையாடாதீர்கள் ஆகையால் IPL போட்டி நடந்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.” என்றார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி