37-வது ஜெனீவா ஐநா அமர்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜீவா டானிங் பங்கேற்பு

24

நடந்து வரும் 37-வது ஜெனீவா ஐநா அமர்வில் மத்திய அவையில் தமிழர்கள் மீதான பண்பாடு அழிப்பு , நாசகர அழிவுத்திட்டங்கள் நாம் தமிழர் கட்சியால் விவரிக்கப்பட்டன .

37-வது ஐநா மனித உரிமை ஆணைய தலைவர் அவர்களே.

மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், தமிழ்நாடு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு எதிராக இந்திய மத்தியஅரசாங்கம் பல்வேறு தேவையற்ற திட்டங்களை திணிக்கிறது.

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாடு. இந்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் மாநிலங்களின் கல்வி உரிமையை பறித்து அதை மையப்படுத்தி(centralized) ஹிந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திணிக்க முயற்சி செய்கின்றனர்.

காவேரி டெல்டாவின் வளமான விவசாய நிலத்திலிருந்து மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பனை பிரித்தெடுக்கும் நாசகர திட்டம் , இப்பகுதியை முற்றிலும் மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது . இதன் விளைவாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு விவசாய நிலம் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்க்கிறது .

தமிழ்நாட்டில் தூத்துக்குடி நகரத்தின் அபாயகரமான ஸ்டெர்லைட் தொழிற்சாலை மக்களின் உயிருக்கு மாபெரும் அச்சுறுத்தலாகும். இது புற்றுநோய் , தோல்நோய் , மூச்சடைப்பு மற்றும் பிற ஆபத்தான நோய்கள் காரணமான இறப்புகளுக்கு வழிவகுக்கிறது. அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட போராட்டக்காரர்களின் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு நவீன நாசகர திட்டம் கூடங்குளம் அணுஉலை திட்டமாகும். இந்தியாவில் பேரிடர் மேலாண்மை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அழிவு ஏற்பட்டால் பெரும் உயிர் இழப்புகள் ஏற்படுவது உறுதியானதாகும். மேலும் ஆலையின் அதிகப்படியான கதிர்வீச்சு அளவின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவி வருகின்றன.

கன்னியாகுமரி துறைமுகத் திட்டம், 30,465 மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது .

மேற்கு போடி மலைகளில் நியூட்ரினோ ஆய்வுக்கூட திட்டம் இயற்கைக்கும், மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது .

வாழ்வாதாரத்திற்கு எதிரான திட்டங்களை திணிக்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தை ஐநா சபை வழியாக நாங்கள் வலியுறுத்துகிறோம்.

டிசம்பர் 2017-ல் ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்திய அரசாங்கம் அவர்களை காப்பாற்றும் சூழல் இருந்தும் வேண்டுமென்றே புறக்கணித்து விட்டது.

மக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார , அரசியல் உரிமைகள் பாதுகாப்பு பற்றிய சர்வதேச உடன்படிக்கையில இந்தியா கையொப்பமிட்டது.
பூர்வ குடி மக்களின் உரிமைகள் பற்றிய ஐ.நா. பிரகடனத்திலும் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இந்தியா அதன் சர்வதேச கடமைகளை மதிக்க வேண்டும்.
நன்றி

முந்தைய செய்திபாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திஇலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – சீமான் கண்டனவுரை