கட்சி செய்திகள்: பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
இந்தியாவில் தங்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை கடந்த வாரம் தடை செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில், இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த தடைக்கு எதிராக அனைத்து மக்களாட்சி அமைப்புகளும் ஒருமித்து குரல் எழுப்புவதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு முடிவுகட்ட முடியும் என்பதனால் இன்று (02-03-2018 (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி ஒருங்கிணைத்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சனநாயக ஆற்றலாக, மக்கள் இயக்கமாக, தேர்தல் போட்டியிடுகிற அமைப்பாக இருந்து வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடைசெய்திருக்கிறது அம்மாநில பாஜக அரசு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இசுலாமிய மக்களுக்காக மட்டுமல்லாது பல்வேறு பொதுப்பிரச்சினைகளுக்காகவும் போராடி இருக்கிறது. நாங்கள் அவர்களோடு இணைந்து பல்வேறு தளங்களில் போராடியிருக்கிறோம். அத்தகைய அமைப்பைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிப்பழங்குடி, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய பிள்ளைகள் கல்வி கட்டணத்தைக் கட்டமுடியாத நிலையில் தங்களது படிப்பைத் தொடர முடியாது போனபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவானது ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் கொடுத்து அவர்களது கல்வி தொடர கரம் கொடுத்திருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் வெறுப்படைந்த அம்மாநில பாஜக அரசு அவ்வமைப்பைத் தடைசெய்திருக்கிறது. இசுலாமிய மக்கள் அரசியல் அமைப்பாகத் திரளுவதை அவர்கள் விரும்பவில்லை. இத்தகையத் தடையானது அவசியமற்றது; அதனைத் தகர்க்க வேண்டும் என்று இடதுசாரி அமைப்புகள், சனநாயக ஆற்றல்களெல்லாம் ஒன்றுகூடி ஆலோசித்து வருகிற 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084