தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பாஜக அரசின் அழுத்தத்தினைத் தமிழக அரசு புறந்தள்ள வேண்டும். தகுதிவாய்ந்த தமிழரை நியமிக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

153

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பாஜக அரசின் அழுத்தத்தினைத் தமிழக அரசு புறந்தள்ள வேண்டும். தகுதிவாய்ந்த தமிழரை நியமிக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் குறித்தும், கல்லூரி இடமாற்றம் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு, ஓய்வு பெற்ற நீதியரசர் ஜெகதீசன் அவர்கள் தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்காக துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க இத்தேர்வுக்குழு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சட்டக்கல்லூரிகளிலும், இதர பிறக் கல்லூரிகளிலும் சட்டத்துறையில் பணியாற்றிய அனுபவமும் தகுதியும் நிறைந்த தமிழகத்தை சார்ந்த தமிழர்கள் பேராசிரியர். வின்சென்ட் காமராஜ், பேராசிரியர் பாலு, பேராசிரியர் அம்புரோஸ் ஆகிய பேராசிரியர்களைத் தேர்வு செய்து வைத்திருந்த நிலையில்,அவர்களின் பரிந்துரையை ஏற்காது மத்தியில் ஆளும் பாஜக அரசின் அழுத்தம் காரணமாக, ஆர்.எஸ்.எஸ். பின்புலமுள்ள மராட்டிய மாநிலம், புனேவில் பணிபுரியும் சூர்யநாராயண சாஸ்திரி அவர்களை நியமிக்க மாநில அரசு முற்பட்டு வருவதும், இந்த நாட்டின் மிக முக்கிய சட்ட வல்லுனர்களை உருவாக்கிய சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு கால பழமைமிக்க சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய முன்வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், ஐ.ஐ.டி. கல்லூரி வளாகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இந்துத்துவக் கொள்கைகளையும், வகுப்புவாத எண்ணங்களையும் புகுத்த முயற்சிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் சங்க் பரிவாரின் இத்திட்டம் தமிழ்நாட்டில் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது மட்டுமல்லாமல் வகுப்புவாத மோதல்களுக்கும் வித்திடும். தமிழர்களின் மொழியுரிமை, பண்பாட்டுரிமை, நதிநீர் உரிமைகள், வாழ்வாதாரச் சிக்கல்கள், அரசுகளின் மெத்தனப்போக்குகள் என எச்சிக்கலுக்கும் முதல் குரலாக ஓங்கி ஒலிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டக்குணத்தை அடக்கி ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் செய்திடும் தந்திரமாகவே இடமாற்றம் இருக்கிறது என்பது வெளிப்படையானது.

மேலும், சூர்ய நாராயண சாஸ்திரி அவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியின் இயக்குனராக 2௦௦6 -2௦௦9 ஆண்டு பணியாற்றியக் காலங்களில் தமிழ் மாணவர்களையும், தமிழ் மொழியையும் அவதூறாகப் பேசியவர் என்பதோடு, மது அருந்திவிட்டு கல்லூரிக்குள் மாணவிகளிடமும், சக ஆசிரியைகளிடமும் தவறாக நடக்க முற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த பணி நியமனத்தில் மத்திய அரசின் அழுத்தத்தை கருத்தில்கொள்ளாமல் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு துணைவேந்தர் நியமனத்தை செய்திட வேண்டும் எனவும், இடமாற்றத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்திடும் வகையில் கல்லூரி இடமாற்றத் திட்டத்தை கைவிடவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமுசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்
அடுத்த செய்திதேனி குரங்கணி தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்ற தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி