சிரியா மானுடப் படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

54

சிரியா மானுடப் படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம், இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 06-03-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப் UNICEF) அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

நமது ஈழம் தாயகத்தில் 2008-2009 காலக்கட்டத்தில் என்ன நிகழ்த்தப்பட்டதோ அது தான் இன்று சிரியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. அரசுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே இருந்த பிரச்சினையை உலக நாடுகள் அல்லது ஐ.நா .மன்றம் அல்லது இப்போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ரசியா போன்ற வல்லாதிக்க நாடுகள் தலையீட்டு அதை சுமுகமாகப் பேசி உயிர் பலியில்லாமல் தடுத்து சிரியாவை அமைதியான நாடாக மாற்றி இருக்க முடியும் அதை விட்டுவிட்டு அமெரிக்கா போராளி குழுக்களுக்கு ஆதரவாகவும் ரசியா அரசுக்கு ஆதரவாகவும் வந்து இரண்டு நாடுகளும் யுத்தக் களத்தில் மோதி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை நாம் பார்க்கிறோம். அன்று வியட்னாம் போரின்போது 8 வயது சிறுமி உடையற்ற உடலோடு காயங்களின் வலியில் அலறிக்கொண்டு ஓடிவந்தததைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் உடனே தலையீட்டு போரைத் தடுத்து வியாட்னாம் நாட்டிற்கு விடுதலைப் பெற்றுக்கொடுத்தார்கள். அன்று வல்லாதிக்க நாடுகள் எல்லாம் தேசிய இனத்தின் உரிமையின் பக்கம் நின்றார்கள் ஆனால் இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமய பொருளாதார கொள்கையில் சர்வதேச சந்தை விரிவாக்கமே தங்கள் நோக்கமாக கொண்டு அதற்கு இடையூறாக எந்த நாடு எந்த நாட்டின் தலைவன் நிற்கிறானோ அவனை எல்லாம் அழிப்பது என்ற கொள்கை முடிவெடுத்து இந்த கொடுங்கோல் செயல்களைச் செய்கிறார்கள்.

இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் போதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா? மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும்? மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே? எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்?

சிரிய மக்கள் மீது தொடுக்கப்படும் போரை, அம்மானுடப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டு காயம்பட்டு நிற்கிற அச்சிரிய மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உதவிசெய்து உயிரைக் காக்க வேண்டும் எனவும் ஐ.நா. பெருமன்றத்திடம் வலியுறுத்த மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு சீமான் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பெரியார் சிலையை அகற்றுவோம் என எச்.ராஜா முகநூலில் தெரிவித்திருக்கிறாரே.?

எச்.ராஜா அவர்கள் பரபரப்பைப் பற்றவைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார். ஐயா பெரியார் சிலையின் மீது கை வைத்தால் என்ன நிகழும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். திரிபுராவில் அதிகாரத் திமிரில் புரட்சியாளர் லெனின் அவர்களின் சிலையை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் அது நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. அது எச்.ராஜாவின் கனவிலும் நடக்காது.

ஆங்கிலம் படித்து தமிழர்கள் முன்னேறினால்தான் தமிழ் உயரும் என்கிறாரே ரஜினிகாந்த்?
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல. எங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் படித்துவிட்டுதான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் என வெளிநாடுகளில் வேலைசெய்கிறார்கள். அப்புறம் ஏன் தமிழ் வாழவில்லை? கன்னடம் படித்தால்தான் கர்நாடகாவில் வேலை என்கிறார் சித்தாராமையா. அங்கு போய் ஆங்கிலம் படிக்கச் சொல்வாரா ரஜினிகாந்த்? ரஜினிகாந்த் திரைத்துறையில் இவ்வளவு உயரத்தை ஆங்கிலத்தைக் கொண்டாப் பெற்றார்? ஐயா இளையராஜா ஆங்கிலம் கற்காமல்தானே சாதித்திருக்கிறார்! இதன்மூலம் ஆங்கில மொழிக்கும், துறையில் சாதிப்பதற்கும் தொடர்புமில்லை என்பது தெளிவாகவில்லையா? அமெரிக்காவில் பள்ளிக்கூடம் போகாதவர்கள்கூட ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ஏனென்றால், அது அவர்களது தாய்மொழி. அதற்காக அவர்கள் அறிவாளி ஆகிவிடுவார்களா? உலகில் தாய்மொழியில் படித்தவர்கள் எல்லாம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறமொழியில் படித்தவர்களெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனைத்தான், ‘தாய்மொழிவழிக் கல்வி குழந்தைக்குத் தாய்ப்பால் போன்றது. அதனைக் கொடுக்கவில்லையென்றால் அதுவும் ஒரு தேசத்துரோகக் குற்றம்தான்’ என்கிறார் தேசப்பிதா காந்தி. ஐயா அப்துல் கலாம், ஐயா மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோவின் தலைவர் சிவன் உள்ளிட்டவர்கள் தாய்மொழி தமிழிலே கற்றவர்கள்தான். நோபல் பரிசு பெற்றவர்களும் தாய்மொழிவழிக் கல்வி பயின்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் மீட்சிதான் தமிழர் எழுச்சியாகும். கடுகளவேயானாலும் தாய்மொழியைக் காத்தால் மலையளவு வாழ்வாய். மலையளவே ஆனாலும் தாய்மொழியைக் காக்காவிட்டால் கடுகளவு தேய்வாய் என்கிறார்கள். ஒரு தேசிய இனத்தை அதன் தாய் மொழியிலிருந்து அப்புறப்படுத்துவது மிகக் கொடுமையான இனப்படுகொலையாகும். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் தலைவர்கள் இல்லாததால் தலைமையேற்க வருகிறேன் எனும் ரஜினிகாந்தின் கூற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இது உலகெங்கும் வாழும் 13 கோடித் தமிழ்த்தேசிய இன மக்களை அவமதிக்கிற ஆணவப்பேச்சு. எங்கள் ஐயா நல்லக்கண்ணுவையும், ஐயா நெடுமாறனையும் தாண்டியத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள்.? என்னைக்கூட விட்டுவிடுங்கள். அண்ணன் திருமாவளவனுக்கும், அன்புமணிக்கும், வேல்முருகனுக்கும்கூடத் தகுதியில்லையா? தமிழர்கள் யாருக்கும் தகுதியில்லை; அதனால், நான் தலைமையேற்க வருகிறேன் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிக்கிற திமிர்ப்பேச்சு. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இத்தனைக் கோடித் தமிழ் மக்களில் இந்த இனத்திற்குத் தலைமையேற்க ஒரு தலைவர்கூடவா இல்லை? ஊடகங்கள் அவருக்குக் கொடுக்கிற அதிகப்படியான முக்கியத்துவத்தினால் இவ்வாறு பேசத் துணிவு வருகிறது. ‘இழந்துவிட்ட உரிமையைப் பிச்சைகேட்டுப் பெற முடியாது’ என்கிறார் அண்ணல் அம்பேத்கர். மக்களுக்காகப் போராடவே வர மாட்டேன் என்கிறார் ரஜினிகாந்த். மக்களுக்காகக் களத்தில் நின்று போராடதவன் எப்படி மக்களுக்கானத் தலைவராக இருக்க முடியும்? எம்.ஜி.ஆர். ஆட்சியைப் போல நல்லாட்சியைத் தருவேன் என்கிறார். எம்.ஜி.ஆர். நல்லாட்சியைக் கொடுத்தார் என்று யார் சொன்னது?
நாங்கள் தனித்துவமான இடத்தை எங்களுக்கென்று உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ரஜினிகாந்த் இதுவரை நாற்காலியில் இருந்த ஆட்கள் இப்போது இல்லை என்பதால் அவ்விடத்தை நிரப்ப வருகிறேன் என்கிறார். இது எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதம்? ஏமாற்று? நான் என்னுடைய துறையில் சரியாகச் செயல்பட்டேன். அதிகாரத்தில் இருப்பவர்கள் சரியாக செயல்படவில்லை என்கிறார். பிறகு, அவரே கருணாநிதியும், ஜெயலலிதாவும் நன்றாகச் செயல்பட்டார்கள் என்றும் கூறுகிறார். அப்படியானால் யாரை நன்றாகச் செயல்படவில்லை என முதலில் கூறினார்? மாணவர்கள் படிக்கச் செல்லுங்கள்; அரசியலுக்கு வராதீர்கள் என்கிறார் அவர். நாங்கள் அவரை நடிக்கச் செல்லுங்கள். அரசியலுக்கு வராதீர்கள் என்கிறோம். எங்கள் தாய் நிலத்தில் நாங்கள் ஆளாது பிறர் ஆண்டால் நாங்கள் அடிமையாகிவிடுவோம். இனியும் நாங்கள் அடிமையாக வாழத் தயாராக இல்லை. ரஜினிகாந்த் மட்டுமில்லை யார் அதற்கு எதிராக நின்றாலும் அதனை எதிர்த்து அரசியல் போர்புரிவோம்.