ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை – சீமான் கண்டனம்!

50

அறிக்கை: ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இசுலாமியர்கள் தங்களது மார்க்கத்தின்பால் பற்றுகொண்டு மேற்கொள்ளும் ஹஜ் புனிதப்பயணத்துக்கான மானியத்தை ரத்துச் செய்வதாக முடிவெடுத்திருக்கும் மத்திய அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். இது இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிப்பதாகும். ஏற்கனவே, முத்தலாக் விவகாரத்தைக் கையிலெடுத்து மதவெறி அரசியல் செய்து வரும் பாஜக அரசானது தற்போது அதன் தொடர்ச்சியாக ஹஜ் மானியத்தை ரத்து செய்து மதவுணர்வைத் தூண்டுவதன் மூலம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாக்கத் துடிக்கிறது. பொருளாதாரச்சரிவிலும், விலைவாசி உயர்விலும் நாடு முற்றுமுழுதாய் தத்தளித்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் மத்தியில் ஆளும் மோடி அரசானது மக்களின் உணர்வலைகளை திசைதிருப்பி விடுவதற்கே இதுபோன்ற மதரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவோம் என்று பேசி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜக அரசானது, இப்போது முன்னெடுத்து வரும் மதத்துவேச நடவடிக்கைகள் மூலம் தனது கோர முகத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்களை அந்நியராக் காட்டி மக்களிடம் மதப்பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்குவேட்டையாடத் துடிக்கும் மதவாத பாஜக அரசானது, இசுலாமிய மக்களின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வதாக அறிவித்தாலும் வியப்பேதுமில்லை. மதிப்பிற்குரிய அண்ணன் பழனிபாபா அவர்கள் குறிப்பிட்டது போல, இசுலாம் என்கிற மதம்தான் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதே ஒழிய, இங்கிருக்கும் இசுலாமியர்கள் அல்லர்! அவர்கள் இம்மண்ணின் பூர்வக்குடி மக்கள்; எம் உறவுகள். அவர்களை அந்நியராகச் சித்தரிக்கும் இப்போக்கினை வன்மையாக எதிர்க்கிறோம்.

ஹஜ் பயணத்திற்காகக் கடல்வழியே சென்றவர்களின் வசதிக்காக வானூர்தி சேவைகள் தொடங்கப்பட்டபிறகு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தையே ஹஜ் மானியம் என்கிறோம். முன்னாள் பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 70 ஆயிரம் இசுலாமியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டுத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றமானது, ஹஜ் மானியத்தை வரும் 2022க்குள் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, ஹஜ் பயணம் தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின்படி, வரும் 2018ஆம் ஆண்டுக்குள் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்வதாய் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அதனை தற்போது அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இம்முடிவானது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கையாகும். இந்நாட்டின் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் படுபாதகச்செயலாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த மத்திய அரசானது ஹஜ் மானியம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே முதன்மையாகக் காட்டி ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த முற்படுவது மதரீதியிலான உள்நோக்கம் கொண்டது என்பது வெளிப்படையாகிறது. இம்முடிவானது சனநாயக வழியில் மேற்கொள்ளப்படும் ஓர் சர்வாதிகாரமாகும். ஆகவே, ஹஜ் பயணம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசானது மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், இசுலாமியர்களின் ஹஜ் பயணத்தைத் தொடர வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனை செய்யத்தவறும் பட்சத்தில் அது இந்தியா எனும் கட்டமைப்புக்கே பேராபத்தாய் முடியும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிக்கை: தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்
அடுத்த செய்திடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம்: நீதிவிசாரணை தேவை, மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்