டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம்: நீதிவிசாரணை தேவை, மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

49

அறிக்கை: டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை. வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

டெல்லியில் மர்மமான முறையில் இறந்துபோன மருத்துவக்கல்லூரி மாணவர் சரத் பிரபுவின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (18-01-2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் நானும் பங்கெடுக்கிறேன். ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணனின் படுகொலைக்கான நீதியே இன்னும் கிடைத்திடாத சூழலில் தற்போது திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபுவும் அதேபோல இறந்து போயிருப்பது இது கொலையா இருக்கலாம் என்கிற வாதத்திற்கு வலுசேர்க்கிறது.

தம்பி சரத்பிரபுவின் மர்ம மரணம் குறித்தான விசாரணையின் தொடக்கத்திலேயே அதனைத் தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணையை நகர்த்தும் டெல்லி காவல்துறையின் செயல் பெரும் ஐயத்தினைத் தோற்றுவிக்கிறது. திருப்பூர் சரவணனின் கொலையையும் இதேபோலத் தொடக்கத்திலேயே தற்கொலை என்று திட்டவட்டமாக அறிவித்தது டெல்லி காவல்துறை. பிறகு, உடற்கூறு ஆய்வில்தான் அது கொலை எனத் தெரிய வந்தது. இருந்தபோதிலும், அவ்வழக்கைக் கிடப்பில் போட்டு இன்றளவிலும் குற்றவாளிகளை டெல்லி காவல்துறை கைதுசெய்யாதிருக்கிறது எனும்போதே இவ்வழக்கின் விசாரணை எத்தகையப் போக்கில் செல்லும் என்பதை நம்மால் அனுமானிக்க முடிகிறது. திருப்பூர் சரவணனைக் கொலைசெய்த கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரி அழுத்தம் கொடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அதுகுறித்து துளியும் ஆர்வம் காட்டாது அதனைக் கண்டுகொள்ளாது காலம் கடத்திவிட்டதுபோல, சரத் பிரபுவின் மரணத்தையும் கையாள முற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

தம்பி சரத் பிரபு இறந்து கிடந்த இடத்தில் ஊசி மற்றும் பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டதாக வந்திருக்கும் செய்தியானது, இது கொலையாக இருக்கலாம் என அவரது பெற்றோரின் ஐயத்தை மேலும் பெரிதாக்குகிறது. மாணவர்களைக் கொலைசெய்வதன் மூலம் காலியாகும் மருத்துவ இடத்தை இன்னொருவரைக் கொண்டு நிரப்புவதற்கு செய்யும் வணிகபேரத்தினால்தான் திருப்பூர் சரவணனின் உடலில் விஷ ஊசியைச் செலுத்திக் கொன்றார்கள் என்பதும், சரத் பிரபு அளவுக்கதிகமாக இன்சுலின் ஊசியைச் செலுத்திக் கொண்டதாலேயே உயிரிழந்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மருத்துவம் படிக்கும் ஒரு மாணவருக்கு இன்சுலினை அதிகமாக உடலில் ஏற்றினால் ஏற்படும் விளைவுகூடவா தெரியாதிருந்திருக்கும்? அவர் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவருக்கு மனநெருக்கடியோ, உளவியல் பலவீனமோ இல்லாதபோது, அதனை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் அறுதியிட்டுக் கூறிய பின்பும் அதனைத் தற்கொலை என விசாரணை முடியும் முன்னரே எதற்காக கல்லூரி நிர்வாகம் அறிவிக்கிறது? அவ்வாறு அவசர அவசரமாக தற்கொலை என அறிவிப்பதன் மூலம் யாரைக் காப்பாற்ற முயல்கிறது என்று எழும் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரிந்தபாடில்லை.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முத்துக்கிருஷ்ணனும் இதேபோலத்தான் கடந்தாண்டு மரணித்தார் என்பதிலிருந்து பிற மாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் உயிருக்கு இருக்கும் ஆபத்தினையும், அச்சுறுத்தலையும் விளங்கிக் கொள்ளலாம். இந்தியா முழுக்க ஒரே மாதிரி தேர்வுமுறையைக் கொண்டு வர எத்தனிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இந்தியா முழுக்க படிக்கும் மாணவர்கள் ஒரே மாதிரி சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்கிற உண்மை ஏன் புலப்படுவதில்லை? ஓர்மையையே நிலைநாட்ட வாய்ப்பற்ற நாட்டில் ஒற்றை இந்தியாவை நிறுவத் துடிக்கும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு இதுவெல்லாம் தேச அவமானமாக படவில்லையா? பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள அகமதாபாத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மாரிராஜ் சாதியப்பாகுபாடு காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என்பது பிரதமர் மோடிக்கு இழிவாக இல்லையா?

பிற மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு அரங்கேற்றப்படும் இக்கொடுமைகள் யாவும் வெளிமாநிலத்திற்குக் கல்வி கற்க தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. அதனைக் கலைய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாயக் கடமையாகும். எனவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசானது உரிய கவனம் எடுத்து வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், எய்ம்ஸ் கல்லூரி மாணவர் திருப்பூர் சரவணன் கொலையையும், திருப்பூர் சரத் பிரபு மர்ம மரணத்தையும் உரிய நீதிவிசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திஅறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர்