கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம்

44

கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம்

நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்தியப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி மடத்தைச் சேர்ந்த பீடாதிபதி விஜயேந்திரர் அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்காது அவமதித்தற்குத் தமிழகமே கொந்தளித்துக்கிடக்கிற சூழலில் விஜயேந்திரருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ள மதிப்பிற்குரிய சகோதரர் கமலஹாசனின் செயலானது அதிர்ச்சியினை அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது என்பது தமிழன்னையைப் போற்றித் தொழுகிற ஓர் மரபு; அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதென்பது ஒரு அடிப்படை மாண்பு. இதனை விஜயேந்திரர் செய்யத்தவறியதை இன உணர்வுள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய நிலையில் தமிழுக்கு நேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்க மறுத்து அச்செயலுக்கு ஆதரவாய் கருத்து வெளியிட்டிருக்கும் கமலஹாசனுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள கமலஹாசன் எதனைக் கண்டவிடமெனக் குறிப்பிடுகிறார்? எத்தனை கண்ட இடங்களில் தேவையற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டிருக்கிறது? கமலஹாசனிடம் பட்டியல் ஏதும் இருக்கிறதா? ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் உள்ளிட்ட பலதரப்பட்ட பெருமக்கள் வீற்றிருக்கிற ஒரு அவையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதில் என்ன பிழை? அதே கண்ட இடத்தில்தானே தேசியகீதம் பாடப்பட்டது. அதனை வேண்டாமென்று கமலஹாசன் கூறவில்லையே? ‘எழுந்து நிற்க வேண்டியது எனது கடமை; தியானம் செய்ய வேண்டியது அவரது கடமை’ என்கிற கருத்தின் மூலம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த தேவையில்லை என்கிறாரா கமலஹாசன்? கண்ட இடத்தில் தமிழைத் தொழக்கூடாது என்பவர் கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என விஜயேந்திரருக்கு அறிவுறுத்த மறுப்பதேன்? மனதை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்ய முடிகிற இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படக்கூடாதா? தேசிய கீதத்தை இசைக்கிறபோது வராத தியான மனநிலை தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும்போது மட்டும் வந்ததெப்படி என எழும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்காது கமலஹாசன் தப்பக்கூடாது.

மேலும், ஊழல் நடக்கும்போது மக்கள் தியானத்தில்தானே இருந்தார்கள் எனக் கூறி விஜயேந்திரர் எழுந்து நிற்காத செயலுக்கு நியாயம் கற்பிக்க மக்கள் மீது பழியைப் போடுகிறார் கமலஹாசன். ஊழல் நடக்கும்போது கமலஹாசன் வேண்டுமானால் தியானத்தில் இருந்திருக்கலாம். தற்போது ஞானோதயம் பெற்று ஊழலுக்கு எதிராக உற்சவம் நடத்தவும் முற்படலாம். ஆனால், எங்களைப் போன்றோருடன் இணைந்து மக்கள் எப்போதும் போராடிக் கொண்டுதானிருந்தார்கள். தங்களளவில் முடிந்த எதிர்ப்புதனை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்தார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். கமலஹாசனுக்கு உற்ற நண்பராக இருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து மீது வசைமொழிகள் பொழிந்தபோதும், அவரின் தாயை இழிவாகப் பழித்துரைத்தபோதும் வாய்திறக்காது மௌனமாய் தியான மனநிலையில் இருந்த கமலஹாசன் விஜயேந்திரர் விவகாரத்தில் வாய்திறந்து அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் அரசியல் என்ன என்பதனை விளக்க வேண்டும். விஜயேந்திரர் தமிழன்னையை அவமதித்ததைவிட அவர்க்கு ஆதரவாய் கமலஹாசன் கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் அவமரியாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அக்கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், தன்னை உத்தமராகக் காட்டிக்கொள்ள மக்கள் மீது பழியைப் போடும் போக்கை கைவிட வேண்டும் என்றும் கமலஹாசனுக்கு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்?. -சீமான் சீற்றம்!
அடுத்த செய்தி25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை