அறிக்கை: தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்

557

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு மகத்தான இலட்சிய கனவுகளுடன் இன்று முதல் தொடங்குகிறது. நாகரிகத்தின் தொட்டில்களாய் நதிக்கரைகள் விளங்கின என்று வரலாறு எழுதியோர் வியப்புடன் சுட்டிக்காட்டிய காலத்திலே நாடுகட்டி படை பெருக்கி பல்லுயிர் வாழ உயிர் நேயத்துடன் அறம் வழி நின்று ஆட்சி செய்தவர் தமிழர்.. கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியா பேரறிவு பார்வையோடு, அறிவியல் ஆற்றலோடு.. விண்வெளி விந்தைகளைப் புரிந்து கொண்ட திறத்தோடு காலக் கணக்கை வகுத்து.. இயற்கை வழி நின்று.. மரபார்ந்த வாழ்க்கை ஒன்றை இம் மண்ணில் நிறுவினர் நம் முன்னோர். மழைப் பெருகி, மண் செழித்துப் புது மணப்பெண்ணாய் புவி பூத்து நிற்கின்ற காலம் தை மாதம். பெய்யெனப் பெய்த மழை நின்று.. குளிரும், வெயிலும் இணைந்து விளைச்சலுக்குறிய மண்ணாய்.. நமது தாய் மண் தழைத்து, ததும்பி தயாராக நிற்கையில் தொடங்குகிறது தமிழரின் புத்தாண்டு.

பார்வியக்க ஏர் செலுத்தி பைந்தமிழ்த் தேனி என உழவு பாட்டு இசைத்து உலகோர் பசி தீர்க்க .‌.நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன் உதிரத்தால் உலகை செழிக்க வைத்த இனம் தமிழ் இனம். ஏர் பின்ன நெடு வயல் நெடுக வளைய வரும் மாடு ஐந்தறிவு உயிரி தானே என்று எண்ணாமல் தன் குடும்பத்தில் ஒருவனாய் , தன் மண்ணின் பெருமையாய்.. கால் நடைகளைப் போற்ற மாட்டு பொங்கல் கண்டு தன் உயிர் நேயத்தை உலகிற்கு அறிவித்தவன் தமிழன். வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். ஆனால் வரலாற்றின் போக்கில் இடையில் வந்தோர் சாதி, மதத் தடைகளைத் தமிழர் மண்ணில் நிறுவ உயிரெனப் போற்ற வேண்டிய இனமான ஓர்மை உணர்வை இன்று இழந்து விட்டு நிற்கிறது. இட்டார் பெரியார்.. இடாதோர் இழிகுலத்தோர்.. என அறம் பாடி நின்ற இனம் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு கற்பித்துத் தனக்குள்ளே பூசலிட்டு வேரை மறந்து விவேகத்தைத் தொலைத்து திக்கற்று நிற்கின்றது..

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழர் நிலம் ஒரு பக்கம் எதிரிகளால் இனப்படுகொலைக்கு உள்ளாகி நீதியற்று நிற்கிறது. இன்னொரு பக்கம் இயற்கை வளங்களைக் கொள்ளை கொடுக்கிற நிலமாய், பெரும் செல்வமெனப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆற்று மணலை அயலானுக்கு அள்ளித்தருகிற பூமியாய் மாறி.. தரணி சிறக்க செழித்த நிலம் இன்று தரிசு காடாய் மாறியிருக்கிறது. தன் இலக்கண இலக்கியச் செழுமையால் உலகின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைக் கண்ட செந்தமிழை இன்று நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்..

முப்படை கட்டி எட்டு திசையும் படையெடுத்து மனிதன் காலடி பட்ட மண்ணெல்லாம் புலிக் கொடி நட்டு உலகை ஆண்ட உன்னதத் தமிழினம் தான் இன்று ஆற்றலை இழந்து, அதிகாரத்தை இழந்து, மானத்தை இழந்து இந்த இழிநிலையை மாற்ற மாற்றான் எவனாவது வருவானா என்று மண்டியிட்டு கிடக்கிற இழிநிலை கண்டு உணர்வும் அழிவும் ஒருங்கே பெற்ற தமிழின இளையோர் விழி சிவந்து முளைக்கிற பெரும் கோபத்தைத் தன் இதயத்திலே தேக்கி தனக்கென அரசியல் அதிகாரம் நிறுவ நாம்தமிழர் என்கிற பெரும் படை கட்டி இனம் வாழ தன்னைக் கொடுத்து நிற்கின்றனர். அரசியல் அதிகாரத்தை மட்டும் இல்லாமல்.. கலை, பண்பாடு, வேளாண்மை, தமிழரின் அறிவு சார்ந்த இறை நம்பிக்கைகள் ஆகியவற்றை மீளெழுப்பிக் கட்டமைக்கிற பெரும் வரலாற்று பணியையும் இனைத்தே இந்த மண்ணில் மகத்தான புரட்சி பூபாளம் ஒன்றினை எழுப்பிட ..நாம் தமிழர் திரளத் தொடங்கியிருக்கும் காலத்தில் தான் தைத்திருமகள் வளம் திரண்ட நம்பிக்கைகளோடு களம் பற்றிய கனவுகளோடு தைத்திருமகள் கம்பீரமாக வருகிறாள். நெஞ்சம் முழுக்க மகிழ்சியோடும் நம்பிக்கைகளோடும் உலகத் தமிழர் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

அநீதிக்கு எதிராக, சாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை, இயற்கை வள நலச்சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை போன்ற கேடுகளுக்கு எதிராக உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்…..

வாழ்த்துகளுடன்..
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்தமிழர் கட்சி