மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்

264

மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு கட்சியின் நிறுவனத்தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கையின் அரச நிறுவனங்களிலிருந்து நீக்குகிற இலங்கை அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியினை மலையகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தையும், செல்வ வளத்தையும் உயர்த்தியதில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களின் உழைப்பென்பது அளப்பெரியது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியாவும், இலங்கையும் இருந்தபோது தேயிலை, ரப்பர் போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்யத் தோட்டப்பணிகளுக்குக் கூலியாட்களாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் அங்கு இரவு பகலாக உழைத்ததன் விளைவாகவே இலங்கையின் பொருளாதாரம் உச்சாணிக்கொம்பிற்குச் சென்றது என்பது மறுக்கவியலா வரலாறு. மிகக்குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு எவ்வித வசதியுமற்ற வாழ்விடத்திலே வாழ்ந்துகொண்டு தேயிலைத் தோட்டங்களுக்குள் பூச்சிக்கடியையும், பூரான் கடியையும் தாங்கிக்கொண்டு, இரவு, பகல் பாராது மழை, வெயில், பனி என எத்தகையக் கொடிய சூழலையும் பொருட்படுத்தாது கொத்தடிமையாய் உழைத்து இலங்கை நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைக்கத் தன்னையே அர்ப்பணித்தவர்கள் மலையகத் தமிழர்கள்.
அத்தகைய மலையகத் தமிழர்களுக்காகத் தன் வாழ்வுதனை வடித்துக் கொண்டு அவர்களுக்கான உரிமைப்போராட்டங்களை சமரசமற்று முன்னெடுத்து அதனைப் பெற்றுக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான். இதனாலேயே, மலையகத் தந்தை என இன்றளவும் மலையகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறார். மலையகத் தமிழராக இருந்தபோதிலும் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரலெழுப்பினார். ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் என்கிற பேருண்மையை உணர்ந்திருந்தார். 1964 ல் சிரிமா – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 ல் இந்திரா காந்தி – பண்டாரநாயகா ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்ட பின்னர், அவற்றின் அடிப்படையில் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். மீதமிருந்த 3 இலட்சம் மலையகத் தமிழர்களைக் காக்க சௌமியமூர்த்தி தொண்டமான் கடும் போராட்டங்களை முன்னெடுத்து, அவர்தம் உரிமைகளை நிலைநாட்டினார். மலையகத் தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவுமே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு கட்சியை நிறுவினார். அத்தகையப் பெருந்தகையின் பேரில், தொண்டமான் தொழிற்பயிற்சி மையம், தொண்டமான் கலாச்சார மன்றம், தொண்டமான் மைதானம் ஆகிய அரச நிறுவனங்கள் இதுநாள்வரை இயங்கி வந்தன. தற்போது அவற்றின் பெயர்களை இலங்கை அரசு முழுவதுமாக நீக்கம் செய்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தில் 60 விழுக்காட்டுக்கு மேல் பெற்றுத்தரும் மலையகத் தமிழர்களின் மகத்தான தலைவராக இருக்கிற சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியிருப்பது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகும். உள்நாட்டுப்போர் மூலம் 2 இலட்சத்திற்கும் மேலானத் தமிழர்களைக் கொன்றொழித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்களமயப்படுத்தி வரும் பேரினவாத இலங்கை அரசு தற்போது அதன் நீட்சியாகவே மலையகத்
தமிழர்களின் அடையாளங்களையும் அழிக்க முனைந்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகையத் தமிழர் விரோதப்போக்குக்கு எதிராக தமிழர்களின் அறவழிப்போராட்டம் இலங்கையில் வீரியமடைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு உற்றதுணையாக நாம் தமிழர் கட்சி எப்போதும் நிற்கும் என்பதை இத்தருணத்தில் உறுதிமொழியாய் அளிக்கிறேன். இவ்விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு மலையகத்தந்தை சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை மீண்டும் அரச நிறுவனங்களுக்குச் சூட்டிட இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு இதனை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஒ.என்.ஜி.சி.க்கு எதிராகப் போராடியதற்காக நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திதவறான முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்த பிரதமர் மோடி மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்