சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம்

26

அறிக்கை: சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

சுற்றுலாப்பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 04-10-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உத்திரப்பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்தலங்கள் குறித்த பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியிருக்கும் அம்மாநிலத்தை ஆளும் ஆதித்யநாத் யோகி தலைமையிலான பாஜக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். சாதி, மதம் போன்ற எல்லைகள் யாவற்றையும் கடந்து எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிற சுற்றுலாத்தலமாக விளங்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை மதக்கண்ணோட்டத்தோடு அணுகி அவற்றின் மதிப்பைக் குலைக்கும்வகையில் ஆதித்யநாத் யோகி அரசு முன்னெடுத்துள்ள இச்செயலானது அப்பட்டமான மதவெறிப்போக்காகும். ஏற்கனவே, உத்திரப்பிரதேச மாநில நிதிநிலை அறிக்கையில் கலாச்சாரப் பாரம்பரிய அடையாளங்களில் தாஜ்மகால் குறிப்பிடப்படாது தவிர்க்கப்பட்டதும், வெளிநாட்டு தலைவர்களுக்குத் தாஜ்மகால் உருவத்தைப் பரிசளிப்பது இந்திய பண்பாட்டின் அடையாளம் அல்ல என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி வெளிப்படையாகப் பேசி வருவதும் தாஜ்மகால் மீது அம்மாநில அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்வையும், வெறுப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுகிறது. தாஜ்மகாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கிய அம்மாநில பாஜக அரசு, முதல்வர் ஆதித்யநாத் யோகிக்குச் சொந்தமான கோரக்பூர் கோரக்கேஷ்வர் மடத்தை அப்பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம்.
ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர் ஷாஜகானால் அவரது மனைவி மும்தாஜுக்காக வெள்ளைநிறப் பளிங்குக்கற்கள் கொண்டு கட்டப்பட்டதுதான் தாஜ்மகாலாகும். இது கட்டப்பட்டதற்குப் பிறகான காலக்கட்டத்தில் பல்வேறு மன்னர்களின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளபோதும் எந்த மன்னரும் இதன் சிறப்பினைக் குலைக்கவோ, முற்றாக இதனை அழிக்கவோ முற்படவில்லை. உலகம் முழுக்க இருக்கும் மக்களால் காதல் சின்னமாகக் கொண்டாடப்படும் தாஜ்மகாலை, உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து அதன் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறது. அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த உலகின் தன்னிகரில்லா அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலிற்கு மதச்சாயம் பூசுவது என்பது மதவெறியில் ஊறித்திளைத்திருக்கும் அடிப்படைவாதிகளின் அறிவற்ற செயலாகும்.

மக்களிடையே மதவுணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களைத் துண்டாடும் இந்துத்துவாவாதிகள் தாஜ்மகாலை இசுலாமிய மதச்சின்னமாகச் சுருக்குவதன் மூலம் தங்களது சனாதனதர்மத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள். ஷாஜகான் எனும் இசுலாமிய மன்னரால் கட்டப்பட்டது என்பதற்காகவே தாஜ்மகாலைப் புறந்தள்ளும் பாஜக அரசானது, அதே ஷாஜகானால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையை மட்டும் இந்திய சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு எதற்காகப் பயன்படுத்துகிறது? செங்கோட்டையில் நின்று ஆண்டுதோறும் வீரவுரை நிகழ்த்தும் பிரதமர் மோடியை இந்தியப் பாரம்பரியத்தில் கட்டப்படாத செங்கோட்டையைப் புறக்கணிக்கக் கோருவாரா ஆதித்யநாத் யோகி? இசுலாமியரால் கட்டப்பட்டது என்பதற்காகவே கண்மூடித்தனமாகத் தாஜ்மகாலை எதிர்க்கும் மதஅடிப்படைவாதியான ஆதித்யநாத் யோகி, இசுலாமிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிதிரவங்களையும் புறக்கணிக்க எத்தனிப்பாரா? ஒவ்வொரு தேசிய இன மக்களும் தன்னாட்சி உரிமையைக் கோருகிறபோது அவர்களைப் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்தும் பாஜகவின் தலைவர்கள், நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாட முற்படும் உத்திரப்பிரதேச முதல்வரின் மதவெறிப்போக்கினை என்னவென்று கூறுவார்கள் என்று எழும் அடிப்படை கேள்விகளுக்கு அடிப்படைவாதிகளிடம் என்ன பதிலுண்டு? டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்டபோது, ‘நிர்பயா மரணத்தால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்து சுற்றுலாத்துறைக்கு வரவேண்டிய வருமானம் குறைந்து விட்டது’ என்று நாட்டின் மானம் பறிபோனதைவிட வருமானம் குறைந்துவிட்டதையே பெருங்கவலையாக வெளிப்படுத்தினார் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி. இவ்வாறு சுற்றுலாத்துறை மீது அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அருண் ஜெட்லி போன்றவர்கள் இருக்கும் பாஜக எதற்காக உலகின் அரிய சுற்றுலாத்தலமாக இருக்கும் தாஜ்மகாலைப் புறக்கணிக்க முற்படுகிறது? ஆண்டுக்கு 60 இலட்சத்திற்கு மேலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தாஜ்மகாலை பொலிவுபெறச் செய்யாது மலினப்படுத்துகிற வேலையை ஏன் செய்ய வேண்டும்?
தங்களது மதவெறி அரசியலுக்கும், இந்துத்துவாவின் வேர்பரப்பலுக்கும் தாஜ்மகாலை இரையாக்க முயலும் உத்திரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் இச்செயலானது மதத்துவேசமும், பாசிசப்போக்கும் நிறைந்த மடமைத்தனமாகும். எனவே, உத்திரப்பிரதேச மாநில அரசின் மதவெறிப்போக்கை மத்திய அரசானது வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மகாலை இணைத்து புதிய பட்டியலை உத்திரப்பிரதேச அரசு உடனே வெளியிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.