சார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி

54

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்றிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் 2 ஆண்டு ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்களுக்குரிய ஊதியம் இன்னும் அந்நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுடைய ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்டால் அவர்களுக்குரிய ஊதியத்தை முழுமையாய் அளித்து அவர்களை அந்நிறுவனமே சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தவிதியாகும். ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாத அந்நிறுவனம் அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவோ, அவர்களுடைய விசா, ஒப்பந்தம் போன்றவற்றை நீட்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்காதிருந்து வந்திருக்கிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாத அந்த 15 இளைஞர்களும் 5 பேர் மட்டுமே தங்கக்கூடிய ஒரு சின்னஞ்சிறு அறையில் தங்கிக்கொண்டு உணவுக்குக்கூட வழியில்லாது தவித்து வந்திருக்கின்றனர். தங்கியிருந்த அறைக்கு வாடகை செலுத்த முடியாததால் சில நாட்களில் தாங்கள் தங்கியிருந்த அறையைவிட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதனை அறிந்த ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியினர் அவர்களைத் தற்போது மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவலை தெரிவித்து அவர்களைத் தமிழகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.