தங்கை வளர்மதி மீதான குண்டர் சட்டம் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனம் : சீமான் கடும் கண்டனம்!

29

தங்கை வளர்மதி மீதான குண்டர் சட்டம் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனம் : சீமான் கடும் கண்டனம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய கல்லூரி மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கைப் பரப்புரை செய்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அன்புத்தங்கை வளர்மதி அவர்கள் கைதுசெய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கமா அல்லது பாஜகவின் அடிமை அரசாங்கமா என்ற கேள்விக்குத் தங்கை வளர்மதியைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்திருப்பதன் மூலம் பாஜகவின் பரிசுத்தமான விசுவாசிகள் என்பதை எடப்பாடி பழனிச்சாமி அரசு நிரூபித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படும் நாட்டின் நலனுக்காக, இனத்திற்காகப் போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும், தாய் மண்ணைக் காக்க காலங்காலமாய் உணவிட்டு வந்த விவசாயியைக் காக்கப் போராடிய பேராசிரியர் ஜெயராமன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரைப் பிணையில்கூட விடுவிக்காது தடுத்து வருவதும் இது நாடா அல்லது மிருகங்கள் உலவும் காடா என நினைக்கத் தோன்றுகிறது.

மக்களுக்காகப் போராடுவது என்பது சனநாயக உரிமை. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து தனது பாசிசக் கால்களில் சனநாயக விழுமியங்களை மிதித்து அழிப்பதையே தனது அரசின் கடமையாகக் கருதுகிறது. அதற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுதான் தங்கை வளர்மதியின் கைதும், அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டமும்.

ஒரு மாணவி என்றுகூடப் பாராமல் தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைத் தாக்குதல் செய்து வருவதும், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தித் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்துவதும் எதனாலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழக அரசு யார் உத்தரவிட்டு இவ்வாறெல்லாம் எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது நமக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மக்கள் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். வளர்மதி மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், அவர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இல்லையேல், போராட்டச்சக்திகளை ஒன்றுதிரட்டி இந்தச் சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டும்வகையில் பெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என இதன்மூலம் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.